பார்த்திபனின் ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் திரைப்படத்திற்கும் மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழி சார்ந்த சிறந்த திரைபடங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி, ஒவ்வொரு ஆண்டும் கவுரவித்து வருகிறது. அதன்படி, தற்போது வெளியாகியுள்ள 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் இரண்டு தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அபட்டியலில், பார்த்திபன் இயக்கி, நடித்திருந்த ஒத்த செருப்பு திரைப்படம் இடம்பெற்றுள்ளது. எப்போதும், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க வேண்டும் என முயலும் கலைஞர்களில் பார்த்திபன் குறிப்பிடத்தக்கவர்.
அவரே இயக்கி, நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு.
ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். அதில் இடம்பெற்று இருந்த ஒளி-ஒலி அமைப்பு பலரையும் கவர்ந்தது. பார்த்திபனின் வித்தியாசமான முயற்சிக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில், பல்கலை கலைஞனான பார்த்திபனின் படைப்பான ஒத்த செருப்பு திரைப்படம் தற்போது மத்திய அரசின் விருதுக்கு தேர்வாகி உள்ளது.
இதேபோல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திரைப்படமும் விமர்சன ரீதியில் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது