இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் சூழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்.

அவரின் சாதனையை குறிக்கும் விதமாக ‘800’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எம். எஸ். ஸ்ரீபதி இயக்க, டார் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதனிடையே 2009ல் இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதராவாக கருத்துக்கூறியதாக அரசியல் கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளது. மேலும் விஜய்சேதுபதி இப்படத்தில் இருந்து விலகவேண்டும் என ரசிகர்களும், இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன் உள்ளிட்டோர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாக அசுரன் பட நடிகரும், பிரபல பாடகருமான டிஜே தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், 800 திரைப்படத்தில் இளமை பருவ முத்தையா முரளிதரனாக நடிக்க என்னை படக்குழு அணுகியது. ஆனால் அதில் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த போரை சித்தரித்தது எனக்கு சரியாகப்படவில்லை. எனவே அப்படத்தில் நடிக்க நான் மறுத்துவிட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது தாயும் ஒரு ஈழ தமிழர் தான் என்றும். எனவே மிகப்பெரும் கொடூரங்கள் நிகழ்ந்த அந்த போர் சம்பந்தப்பட்ட ‘800’ படத்தில் நடிக்க கண்டிப்பாக தனக்கு விருப்பமில்லை எனத்தெரிவித்துள்ளார்.




