நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது நண்பரும், அரசியல் பிரமுகருமான கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமிழக அரசியலை பல ஆண்டுகளாக உன்னிப்பாக கவனித்து வருகிறார். அதேநேரத்தில் தமிழக அரசியலில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இது குறித்து பல முறை செய்தியாளர்களை சந்தித்து தமது அரசியல் நிலைப்பாடு குறித்தும் கருத்துகளை கூறி வந்தார். ஒரு கட்டத்தில் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் குஷியாகினர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் பணிகளும் விறுவிறுப்பாக தொடங்கின. கொரோனாவால் இப்போது ரஜினிகாந்தின் அரசியல் பணிகள் சுணங்கிவிட்டதாக ஒரு பக்கம் தகவல்கள் உலா வருகின்றன.
இந்த தகவல்கள் அவரது ரசிகர்களுக்கு திடீர் கவலையை ஏற்படுத்தியது. இந் நிலையில் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது நண்பரும், அரசியல் பிரமுகருமான கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என சிலர் சொல்கிறார்கள். ஆனால், இப்போது கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.
எனவே ஆகஸ்ட் மாதம் கட்சியை ஆரம்பிப்பது என்பது சாத்தியம் இல்லை. ஆகவே நவம்பர் மாதத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

தான் அரசியலில் நுழைந்த பின்னர் முதலமைச்சராகும் விருப்பம் இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஒருவித சோர்வை ஏற்படுத்தியது எனலாம்.
இந்த விவரங்கள் அனைத்தும் ரஜினியின் கவனத்துக்கு ஏற்கனவே எடுத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சியை ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் அதிரடியாக கூறி உள்ளார்.
கராத்தே தியாகராஜனின் கருத்தை அடுத்து, நவம்பரில் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்தால் பாஜகவுடன் இணைந்து அரசியலை சந்திப்பார் என்று ஒரு தரப்பினரும், தனித்தே போட்டியிடுவார் என்று மற்றொரு தரப்பினரும் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.