மும்பை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மும்பை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் செவ்வாய் மாலை முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. புறநகர்ப்பகுதியான தகானுவில் 13 செ.மீ., மற்றும் சாந்தா க்ருஸில் 86 மி.மீ.,மழை பதிவானது.

விடாது பெய்யும் கனமழை காரணமாக நகரின் கிங்ஸ் சர்க்கிள், அந்தேரி, போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் மும்பை, பால்கர், தானே உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோன்கன் மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் 200 மி.மீ., மழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தாழ்வான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கோன்கன் கடற்கரையொட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சியின் காரணமாக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.