என்னிடம் கருப்பு பணம் இல்லை. மறைக்க எதுவும் இல்லாததால் எனக்கு யார் குறித்தும் பயமுமில்லை என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ஆக்டிவாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் சித்தார்த். மத்திய அரசின் செயல்பாடுகளையும், அரசியல், சினிமா என அனைத்து தளங்களிலும் தனது கருத்துகளையும், விமர்சனங்களையும் வெளிப்படையாக தெரிவிப்பவர் இவர்.
தற்போது தெலுங்கில் அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த், சர்வானந்த், அதிதிராவ் ஹைதரி, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மகா சமுத்திரம். இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார் நடிகர் சித்தார்த்.
அப்போது, துணிச்சலாகக் கருத்துகள் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு சித்தார்த் பதில் கூறுகிற போது, “எனது 8 வயதிலிருந்தே நான் பொதுவெளியில் பேசி வருகிறேன். ‘விஸ்வரூபம்’ திரைப்பட வெளியீடு சமயத்தில் கமல்ஹாசனுக்குப் பிரச்சினை ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசினேன். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மனப்பான்மைக்கு எதிராக நான் என்றுமே எதிரானவன்.
நான், சரி என்று நினைக்கும் விஷயத்தைப் பேசுவதால் அடுத்தவர்களால் வெறுக்கப்படுவதே மேல் என்று நினைக்கிறேன். என்னிடம் கறுப்புப் பணம் கிடையாது. மறைக்க எதுவுமில்லை. எனக்கு பயமுமில்லை” என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.
சமூக விஷயங்களில் உத்தமராக பேசும் சித்தார்த், தனது முன்னாள் காதலியான சமந்தாவின் விஷயத்தில் மட்டும் தரக்குறைவாக நடந்து கொள்வது ஏனோ என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




