நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்து இருக்கிறது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறித்து அவரது மகள்களான ஸ்ருதி, அப்சரா ஆகியோர் தெரிவித்து இருக்கின்றனர். இன்று காலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமுடன் உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். 4,5 நாட்களுக்கு பிறகு அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார்.
அனைவரது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு கமல்ஹாசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அப்போது அறுவை சிகிச்சை செய்திருந்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி, படப்பிடிப்பு, கட்சி பிரச்சாரம் என பிசியாக இருந்த அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறிய அவர் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்ததும் சொன்னபடியே அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.