
நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை வெளிநாடு அழைத்துச் செல்லவுள்ளதாக சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களில் ஒருவரான டி.ராஜேந்தருக்கு கடந்த 19-ம் தேதி வயிற்றில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.
அதை தொடர்ந்து அவருக்கு இருதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் திவீர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது அவருடைய இதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதுதொடர்பாக சிகிச்சை அளிக்கபப்ட்டது.
இதையடுத்து டி. ராஜேந்தர் சற்று உடல்நிலை தேறி வந்துள்ளார். அவருடைய உடல்நிலை குறித்தோ சிகிச்சை முறைகள் குறித்தோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகரும் டி. ராஜேந்தரின் மகனுமான சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று சிம்பு கூறியுள்ளார்.




