
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்பார்க்கப்பட்டு வந்த தளபதி 66 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு குறித்து, தயாரிப்பு நிறுவனம் ஆச்சரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பீஸ்ட்’. ரசிகர்கள் மத்தியில் இப்படம் வரவேற்பை பெற தவறியது. இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கிவிட்டது. இந்த குறையை போக்கும் விதமாக விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. இதன்மூலம் தெலுங்கு சினிமா உலகில் நடிகராக பிரவேசிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படம் திபாவளிக்கு முன்னதாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 22-ம் தேதி விஜய் தன்னுடைய 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அப்போது இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது முக்கிய மாறுதல்களை மேற்கொண்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
வரும் 22-ம் தேதிக்கு பதிலாக, முன்கூட்டியே 21-ம் தேதி தளபதி66 படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.




