பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவர் பிரபல சினிமா பாடகர் மற்றும் சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார்.
நடிப்பை விட தனது அப்பாவை போல் பாடல் பாடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் 2000ம் ஆண்டு மலையாளப் படத்தில் பாடி தன் திரைப்பயணத்தை தொடங்கியவர், இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். பல மொழிகளில் விருதுகளை குவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும் எனவே இனி மலையாள சினிமாவில் பாடப் போவதில்லை’ என அதிரடியாக விஜய் யேசுதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மலையாளத்தில் தான் பலமுறை பலரிடம் அவமானப்பட்டுள்ளதாகவும், எனவே இனியும் அந்த அவமானங்களைத் தாங்க முடியாது என்பதால் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த முடிவு மலையாளப் படங்களுக்கு மட்டும் என்றும், தமிழ், தெலுங்கு மொழிகளில் தனக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை. அங்குப் பாடகர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கின்றனர் என்றும் விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.