சார் என்னாச்சுங்க சார் நானும் ரொம்ப நாளா கேட்டுகிட்டே இருக்கேன் இன்ன வரைக்கும் சம்பளத்த ஏத்திக்கொடுக்கறத பத்தி எந்த பதிலுமே இல்லயே சார் என்றார் மூக்கையன் போஸ்ட் மாஸ்டரிடம்.
யோவ் வந்து பாத்ரூம கழுவுனியா போனியானு இருயா சம்பளத்த பத்தி லெட்டர் எழுதி அனுப்பி இருக்கோம். பதில் வந்துச்சுனா சொல்ரேன். என்னமோ நீ வாங்குற 97 ரூவா சம்பளத்த நானா தூக்கீட்டு போவ போறேன்.
சார் நீங்களே யோசிச்சு பாருங்க உங்க ஆபிசுல மூனு பாத்ரூமு இருக்குது. ஒரு பாத்ரூமுக்கு 100 ரூவா கொடுத்தாலும் 300 ரூவா கொடுத்தா பரவால்ல சார். வெறும் 97 ரூவா கொடுத்து ஒரு மாசம் பூராவும் கழுவ சொன்னா எப்படி சார் கழுவ முடியும்.
நீ சொல்ரது நியாயம் தாய்யா நான் என்ன செய்யுறது? மேலதிகாரிங்க மனசு வச்சா தான்யா மாத்தி குடுக்க முடியும். நான் நெனச்சா மாத்துர விசயமா இருந்தா உடனே உனக்கு செஞ்சு கொடுத்துருவேன் மூக்கையா.
இவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனடியாக வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் என கொடி பிடித்து நினைத்ததை சாதித்து கொள்கிறார்கள். நாம் ஆண்டு கணக்காக சம்பளத்த ஏத்தி கேட்டும் கண்டுக்காம இருக்காங்களே என மனதில் நினைத்தபடியே வீட்டை நோக்கி நடந்தார் மூக்கையா.
ஏய்யா போஸ்டாபிசுக்கு கழுவ போவாதென்னு எத்தன வாட்டி சொல்றது கேக்கவே மாட்டியா? அவனுங்க குடுக்குறது ஒரு காசுனு மாசம் பூராவும் கழுவிக்கிட்டு கடக்குற என கடிந்து கொண்டாள் ருக்கு.
அதுக்கில்ல டி ருக்கு இத்தன வருசமா செஞ்சு பழகிட்டோம். அதனால தான் பாக்கறேன்.
ஆமா என்னத்த செஞ்சு என்னத்த கண்டுகிட்ட? சம்பளத்த ஏத்தி குடுத்தா வரேன் இல்லனா வேற ஆள பாத்துகோங்கனு சொல்லிடு வருவியா என்னமோ இப்ப தான் ரொம்ப பன்னிகிட்டு இருக்க. நாளு நாளு நாறி கடந்தா தன்னால சம்பளத்த ஏத்தி போட்டு குடுக்க போறானுங்க.
சரி டி நாளைக்கு போய் சொல்லிட்டு வாரேன்.
சரிய்யா வா சாப்புடு உனக்கு புடிக்குமேனு கருவாட்டு கொழம்பும் சூடா சோறும் ஆக்கி வச்சிருக்கேன். திண்ணுட்டு தூங்குவோம்.
அடுத்த நாள் காலை வழக்கம் போல அஞ்சலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அன்றைய தினம் மேலதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக திடீரென வந்து ஆய்வை துவக்கி இருந்தனர்.
கழிவறைக்கு சென்ற மேலதிகாரி கோவமாக வெளியே வந்தவராக “வாட் எ ஹெல் ஆர் யு டூயிங் மேன்” என போஸ்ட் மாஸ்டரை லெஃப்ட் ரெட் வாங்க ஆரம்பித்தார்.
அய்யா என்னாச்சுங் அய்யா? என்னயா என்னாச்சுங்குற அந்த பாத்ரூம போய் பாருயா தண்ணி போவாம அடச்சுக்கெடக்கு அத கூட ஒழுங்கா வச்சுக்காம என்னயா வேல பாக்குறீங்க?
“இல்லைங் அய்யா நேத்து வர நல்லா தான் இருந்தது இப்ப தான் திடீர்னு அடச்சுருக்கும் போல” என்றார் போஸ்ட் மாஸ்டர் பவ்யமாக.
“என்ன பண்ணுவியோ தெரியாது உடனே அத ஆளவிட்டு சரி பண்ணிட்டு அடுத்த வேலய பாரு”
இந்த சம்பவம் நடப்பதற்கும் மூக்கையா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
இந்தா ஆளு வந்துட்டாருங்க அய்யா இப்பவே சரி செய்ய சொல்லிடிறேன் என்றவாறே ” யோவ் மூக்கையா பாத்ரூம் அடச்சுகிச்சு அத உடனே சரிபண்ணுயா. மேலதிகாரி வந்த நேரம் பாத்து இப்படி ஆயிருச்சு”.
இல்லைங்க சார் சம்பளம் ஏத்தி தரலனா வேலைக்கு வரலனு சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேங்க சார்.
என்னாது வேலைக்கு வரலயா? என்னயா உன்னோட ஒரே ரோதனயா போச்சு பெரிய அதிகாரிங்க வந்த நேரமா பாத்து கால வாராதயா. இப்ப மட்டும் சரி பண்ணு நான் பெரியதிகாரிகிட்ட பேசி சம்பளத்த கூட்டி குடுக்க சொல்லி பேசுறேன்.
யோவ் என்னங்கய்யா அங்க நசநசனு பேசிகிட்டு இருக்கீங்க?
இல்லைங்க அய்யா சம்பளம் பத்தலனு வேல செய்ய முடியாதுனு பிரச்சினை பன்றாங்க அதான் பேசிக்கிட்டு இருக்கேன் அய்யா.
சம்பளம் பத்தலனா லெட்டர் எழுதி அனுப்ப வேண்டியது தானே?
எழுதி அனுப்பி இருக்கோம் அய்யா. ஆனா இன்னும் எந்த பதிலும் வரலங்க அய்யா.
அப்படியா எந்த பைலும் என் டேபிளுக்கு வரலயே. சரி சரி இன்னொரு லெட்டர் எழுதி அனுப்பி வை நான் என்னனு பாக்குறேன். இப்ப உடனே சுத்தம் பன்ன சொல்லு.
“யோவ் மூக்கையா அதான் அய்யாவே சொல்லிட்டாருலயா அப்புறம் என்னயா மசமசனு நின்னுகிட்டு இருக்க போய் வேலய பாருயா” என்றார் போஸ்ட் மாஸ்டர்.
சரிங்க சார் என்று அடைப்பை நீக்க ஒரு குச்சியை எடுத்து கழிவறை குழாயில் குத்த துவங்கினார் மூக்கையா. காவலுக்கு பியூனை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார் போஸ்ட் மாஸ்டர்.
சிறிது நேரம் கழித்து சார் சார் சீக்கிரம் இங்க வாங்க சார் என அலறினார் பியூன். “கழிவுநீர் குழாயில் இருந்து வெளியான விசவாயு தாக்கியதில் கீழே சரிந்திருந்தார் மூக்கையா”.