
ராமசாமி என்கின்ற ஒரு வயதான பெரியவர் இறைவன் மீது மிகுந்த அன்பும் பக்தியும் வைத்திருந்தார். தினமும் காலையில் எழுந்தவுடன் இறைவனுக்கு பூஜை செய்துவிட்டு கடவுளுக்கு நன்றியையும், அன்பையும் செலுத்தி விட்டுத்தான் அடுத்த வேலைக்கு செல்வார். உணவு உண்ணுவார். தன் வேலையைச் செய்வார். பேரக்குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி விளையாட செல்வார். அந்த வயதான ராமசாமி அவரது மனைவி மீனாட்சி, மகன் முருகன், மருமகள் பூங்கோதை, பேரக்குழந்தைகள் என்று மிகவும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்கின்ற குடும்பம். எளிமையாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்த முருகனும் பூங்கோதையும் மிகவும் நேர்மையானவர்கள். போதிய சம்பளத்தில் தன் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வந்தனர். முருகனுடைய தாயான மீனாட்சியும், அவருடைய தந்தையான ராமசாமியும், இறைவன் மீது மிகுந்த அன்பு கொண்டவர் அல்லவா! அதனால் வயதாகினாலும் இறைவன் மீது வைத்த அன்பு எப்போதும் குறைவதில்லை. அந்த இறைவனை தரிசிக்க வேண்டும் என்று கோவிலுக்கு செல்கிறார். காலில் செருப்பு கூட அணியாமல் மெதுவாக நடந்து இருவரும் கோவிலின் வாசலில் நுழைந்தனர். என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கென்று பார்த்து மிகுந்த மக்கள் கூட்டம். இருவரும் நீண்ட நேரம் வரிசையில் நின்று கடவுளை பார்ப்பது என்பது மிகவும் கடினம். இருவருக்கும் ஒரு ஐம்பது ஐம்பதைந்து வயது இருக்கும். அவர்கள் வரிசையில் நின்று தான் இறைவனை காண வேண்டும் என்ற நிலை. சரி என்று இருவரும் வரிசையில் நிற்கிறார்கள். கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களால் நிற்க முடியவில்லை. பின்னே இருப்பர்வகள் முன்னே தள்ளுவதும் முன்னே இருப்பவர்கள் பின்னே தள்ளுவதும் போல் இருந்தது.
மீனாட்சி கொஞ்சம் தண்ணி கொண்டு வரியா ரொம்ப தாகமா இருக்கு. நான் தண்ணி குடிக்க போனா மீண்டும் முதலில் இருந்து வரிசையில் நிற்கனும் நீ போய் கொண்டு வா என்று ராமசாமி சொல்ல, மீனாட்சியும் தண்ணீர் கொண்டு வருவதற்கு சென்றுவிட்டாள். கொஞ்ச நேரம் ஆகியும் மீனாட்சி வரவில்லை.
பொறுமையை இழந்த ராமசாமி,
ஏனப்பா இப்படி நெருக்குறீங்க? நீங்க மனுசன் தானா கொஞ்சம் நெருக்காமதா நில்லுங்களே. எனக்கு ரொம்ப தாகமா வேர இருக்கு. நிற்க முடியல தண்ணீர் கொண்டு வரேனு சொன்னவளையும் காணாம். நீங்க வேர ஏய்யா இப்படி தள்ளுரீங்க? என்று ராமசாமி வருத்ததுடன் சொல்கிறார். அவர் சொல்வது யாருடைய காதுகளிலும் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் தள்ளிக்கொண்டே இருக்க கோபமடைந்த வயதான ராமசாமி பக்கத்தில் இருந்த எல்லோரையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்து விடுகிறார். எரிச்சல் அடைந்த ராமசாமி மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே இறைவனை பார்க்க நின்ற கூட்டம் கலைந்து அந்த முதியவருக்கு என்னாச்சு என்று ஒருவர் தண்ணீர் கொண்டு வர ஓடுகிறார். இன்னொருவர் அவர் கையை பிடித்து தூக்க முயற்சி செய்கிறார். மற்றொருவர் வயதானவராயிற்றே என்று மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோவை அழைத்து வருகிறார். வேறொருவர் ஐயா ஐயா என்று கருணை மொழியில் ஒலி எழுப்புகிறார். இப்படி அங்கும் இங்குமாக ஓடி வந்து உதவுகிறார்கள். தண்ணீரை முகத்தில் தெளித்தவுடன் அவர் கண் விழித்து பார்க்கிறார்.
இதில் என்ன ஆச்சரியம் ராமசாமிக்கு என்றால், யாரை கடும் சொல்லால் திட்டி தீர்த்தாரோ அந்த நபர்கள் தான் தன்னுடைய கரங்களை பிடித்து கொண்டு ஐயா! ஒன்னுமில்ல மெதுவா எந்திரீங்க உங்களுக்கு எதுவும் ஆகல என்று எல்லோரும் அன்புடன் சொல்லுகிறார்கள். அந்த பெரியவர் அந்த இடத்தில் உணர்கிறார் மனிதநேயம் மறைந்து போகவில்லை. செத்து போகவில்லை. இந்த மண்ணிலும் மனிதனிடமும் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறது. நான் அதை உணர்ந்துவிட்டேன். என்ன அதை பார்ப்பதற்கான நம்முடைய கண்கள்தான் தான் விசால பார்வை கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து ஆனந்தத்தில் மகிழ்கிறார்.
அந்த நேரத்தில் மீனாட்சி அப்போது தான் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறாள். தன் கணவர் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த மீனாட்சி பதறி போய்,
என்னாச்சுங்க ஏங்க கண் கலங்குரீங்க? நான் வருவதற்கு நேரம் ஆகிவிட்டதா அதனால் ஏதும் வருத்தமாங்க? என்று கணவரிடம் வினவுகிறாள். கணவரான ராமசாமி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு அங்கு நடந்த எல்லாற்றையும் மனைவியிடம் சொன்னார். மீனாட்சி பதை பதைத்து நடுக்க குரலில்,
ஐயா! என் மாங்கல்யத்தை காப்பாற்றிய அந்த மாமனிதர்கள் நீண்ட நாள் நன்றாக நீடுழி வாழ வேண்டும் ஐயா! என்று மனதார வாழ்த்தி விட்டு கண்ணீர் மல்க ஆனந்த புன்னகையோடு அங்கிருந்து வீடு திரும்புகிறார்கள் தம்பதிகள் இருவரும். வீட்டு வாசல் அருகில் வந்தவுடன் ராமசாமியும் மீனாட்சியும் கோவிலில் நடந்த எந்த சம்பவத்தையும் தன் மகன் மருமகளிடம் சொல்ல வேண்டாம் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று பேசி வைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தனர். அங்கு விளையாடி கொண்டிருந்த பேரக்குழந்தைகள் தாத்தா பாட்டியை கண்டவுடன் ஓடிவந்து கால்களை கட்டி அணைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் அன்பாக பாசப்பிணைப்புகளோடு குழந்தைகளை தூக்கி கன்னத்தில் பூத்த மொட்டுபோல் முத்தமிட்டு பேரப்பிள்ளைகளை தழுவுகிறார்கள்.
முருகன், அப்பா இவ்ளோ நேரமா? என்று கேட்டு விட்டு சரி! சரி!! உட்காருங்க எனக்கு நேரமாயிடுச்சு. நான் ஆபீஸுக்கு போகனும் என்று பரபரப்பாக கிளம்பினான். நேரமாயிடுச்சு என்று வேக வேகமாக ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு செல்கின்ற போது அவனுக்கு திடீரென்று ஒரு போன் வருகிறது . முருகனுடைய நண்பர் பேசுகிறார், என் அம்மாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலைமையில் ஆஸ்பிட்டலில் சேர்த்து இருக்கிறோம் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் அம்மாதான் என்னுடைய வழிகாட்டி அவர் இல்லையென்றால் இந்த உலகத்தில் நான் எப்படி வாழ்வேன் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை கண்ணீர் வழிய புலம்புகிறான் நண்பன்.
முருகன், எந்த ஆஸ்பிட்டல் என்று பதறிக்கொண்டு இதோ வந்துட்டேன். பக்கத்தில் வந்துட்டேன் என்று பதறிக்கொண்டே ஸ்கூட்டரை ஆஸ்பிட்டலை நோக்கி விரைந்து ஓட்டினான். பரபரப்பாக இறங்கி நண்பர் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்து சென்றார். தன் நண்பன் கண் கலங்கி நிற்பதை பார்த்துவிட்டு முருகன் தன் நண்பனிடம் சொல்கிறான்! ஒன்னுமில்ல அம்மாவுக்கு எல்லா சரியாயிடும். சீக்கிரமே அம்மா எழுந்து நடக்க போறாங்க. அவங்களுக்கு குணமாயிடும். நீ எதுக்கு இப்ப அழுகிற என்று அவன் கண்களில் இருந்து வரும் கண்ணீர் துளியை துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறான். இந்த உலகம் பெரிது இன்னும் பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. உனக்காக நிறைய உறவுகள் இங்கு வாழுகிறார்கள் உன் மனைவியையும் பிள்ளைகளையும் கொஞ்சம் நினைத்துப்பார் உனக்காகத்தான் அவர்களும் வாழுகிறார்கள் என்று முருகன் ஆறுதல் மொழி பேசினான். முருகன் மனிதநேயமிக்கவனாக அந்த இடத்தில் மட்டுமல்ல தன் குடும்பத்திலும் நடந்து கொள்கிறான்.
வீட்டில் பூங்கோதையும், குழந்தைகளும், மாமனார் மாமியார் ஆகிய இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் கொஞ்சம் தயங்கி தயங்கி பூங்கோதை பேசத் தொடங்கினாள். அத்தயாரே நானும் பிள்ளைகளும் இரண்டு நாள் என் அம்மா வீட்டிற்கு சென்று வருகிறோம். அவர்களுக்கும் என்னையும் பிள்ளைகளையும் பார்க்க வேண்டும் போல இருக்கிறது என்று போனில் அழைப்பு விடுத்தார்கள். அனுமதி வாங்க முயற்சி செய்கிறாள் பூங்கோதை.
சரி மருமகளே! நீ சொல்வது எங்களுக்கு புரிகிறது ஆனால் மூன்று பிள்ளைகளையும் கையில் துணிப்பையையும் வைத்துக்கொண்டு எப்படி உன்னால் போக முடியும்? உன் கணவர் அதான் என் மகனும் வேர இல்ல. எப்படி மருமகளே நீ செல்ல முடியும்? மாமா அத்தையாரே அதான் பஸ் இருக்குல நாங்கள் மிகவும் பாதுகாப்பாக சென்று வரோம் என்று அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டு மூன்று பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு துணிப்பையை ஒரு கையில் எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். ராமசாமிக்கும், மீனாட்சிக்கும் சற்றே மனம் சஞ்சலமாயிற்று. தன் மருமகள் தனியாக எங்கேயும் சென்றதில்லை. தன் மகன் முருகனுடன்தான் எப்போதும் சென்று வருவாள். ஆனால் இன்று மிக சிரமங்களோடு செல்கிறாளே! போகாதே என்று சொல்லுவதற்கும் சற்று தயக்கமாக இருக்கிறதே என்று அவர்கள் மனதுகுள்ளேயே பேசி கொள்கிறார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மருமகளும் பேரக்குழந்தைகளும் செல்வதை பார்த்துவிட்டு சிறிது வருத்தத்துடன் வீட்டினுள்ளே நுழைந்து அமைதியாக உட்கார்ந்து மனதுக்குள்ளேயே புலம்பி கொண்டிருந்தார்கள். பூங்கோதை பஸ்ஸுக்காக காத்திருந்தாள். நேரம் ஆனது. பேருந்தும் வந்தது. இடுப்பில் ஒரு பிள்ளையை வைத்தப்படி இன்னொரு கையில் பையை வைத்தபடி இன்னும் இரண்டு குழந்தைகளை மேலே ஏற்றி விட்டாள். அவளும் மிகவும் சிரமப்பட்டு பேருந்தில் ஏறினாள். பேருந்தில் ஏறிய உடனேயே பிள்ளையை வாங்குவதற்கும், பையை பிடிப்பதற்கும், உட்கார இடம் கொடுப்பதற்கும், யாரோ முகம் தெரியாத, பெயர் தெரியாத, ஊர் தெரியாத பல பேர் தான் அமர்ந்திருந்த சீட்டியிலிந்து எழுந்தார்கள். அந்த தாய் படும் சிரமத்தை பார்த்து அவர்களுடைய மனதிலே எண்ணிக் கொள்கிறார்கள். தன்னுடைய உதிரத்தையே பாலாக்கி நம்முடைய உடல் வளர்த்தவள் அன்னை. அந்த தாய் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வெளியே தைரியமாக வந்திருக்கிறாள். பச்சிளங் குழந்தையை வைத்துக்கொண்டு வந்த இந்த அம்மா போலத்தானே என் அம்மாவும் பல சிரமங்களோடு என்னையும் வளர்த்திருப்பாள் என்று ஒவ்வொரும் அந்த இடத்தில் உணர தொடங்குகிறார்கள். இந்த பெண்ணும் எனக்கு இன்னொரு தாய் போலத்தான். அம்மா எந்த ஊருக்குமா போகனும்? தாயி கூட யாரையாவது கூட்டி வந்துருக்கலாம்ல தாயி! எங்களுக்கும் உன் நிலைமை புரிகிறது. ஒரு தாய் எவ்ளோ சிரமங்களை கடந்துதான் தன் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய நிலை. உன்னை பார்த்தால் எங்களுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்று அந்த இடத்தில் அந்த பெண்ணின் உடைய உணர்வுகளை உணர்கிறார்கள். அந்த தாயினுடைய கண்களையே மிகவும் பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் பல மனிதர்கள். மனிதநேயத்தினுடைய ஒரு சாரமாக அங்கே அவர்கள் நிற்கிறார்கள். அந்த தாய் தன்னுடைய மனதிலே சொல்லிக்கொண்டாள், உதவுவதற்கு யாரும் இல்லையே என்று வருத்தம் தெரிவித்த என் மாமனாரும் மாமியாரும் இந்த உலகத்தில் வாழும் மனிதர்களை பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களுடைய மனம் எவ்வளவு திருப்தி அடையும். இந்த நிகழ்வை கண்டால் அவர்களுடைய மனதிலே என்னவெல்லாம் தோன்றும் என்று அவளும் மகிழ்ந்து ஒரு துளி கண்ணீரை இந்த பூமியில் விடுகிறாள். அந்த கண்ணீர் உலருவதற்கு முன்னே பூங்கோதை சொல்கிறாள், இந்த உலகம் இயங்குவதற்கான காரணம் தனக்கென்று வாழாமல் பிறருக்காக வாழும் தன்னலமற்றவர்கள் இந்த உலகத்தில் இருப்பதால்தான் இந்த உலகமே இயங்குகிறது. இந்த பூமியே சுற்றுகிறது என்று அங்குள்ள பல மனிதர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து இறங்குகிறாள். தன் பயணத்தை முடித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றாள்.
பூங்கோதையையும், பிள்ளைகளையும் அவளுடைய தாய் தந்தை மிகவும் அன்போடு வரவேற்றனர். சிறிது நேரம் பேசி முடித்தவுடன் பூங்கோதை சமயலறைக்கு சென்றாள். பூங்கோதையினுடைய மூன்று பிள்ளைகளும் தன் வீட்டு திண்ணையில் விளையாடி கொண்டிருந்தனர். நிறைய பொம்மைகள் வைத்து விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் அங்கும் இங்குமாக ஓடி திரிந்து விளையாடுவதை எதிர் வீட்டில் குடியிருந்த லட்சுமியினுடைய குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து, அந்த குழந்தைகள் விளையாடும் பொம்மைகளில் ஏதாவது ஒரு பொம்மை நமக்கு கிடைத்தால் நாமும் மகிழ்ச்சியாக விளையாடுவோம் அல்லவா என்று தன் சகோதரிகளிடம் கூறினாள் மூத்த அக்கா. அக்காவுக்கு எட்டு வயது இருக்கும். இளைய சகோதரிக்கு ஐந்து வயது. அதற்கு பின் இளைய சகோரனுக்கு இரண்டு வயது இருக்கும். அந்த குழந்தைகள் மூவரும் அந்த பொம்மைகளையே சோகத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்போதுதான் பூங்கோதை சமையலறையிலிருந்து வெளியே வந்து,
இன்னுமா விளையாடுகிறீர்கள்? வாங்க சாப்பிடலாம்! நேரம் ஆயிடுச்சு என்று தன் பிள்ளைகளை கூப்பிடுகிறாள்.
சரிங்க அம்மா! இதோ வந்துட்டோம் என்று பொம்மைகளை ஓரமாக வைத்துவிட்டு சாப்பிட்டு வந்து விளையாடுவோம் என்று எழுந்தார்கள் அவர்களை கூப்பிட்டு விட்டு அங்கு நின்று இரண்டு நொடிகள் இயற்கையை ரசிக்கும் விதமாக பூங்கோதை தன் வீட்டின் அருகில் இருந்த மரங்களில் அணில் தாவுவதையும், குயில் கூவுவதையும், காகம் கரைவதையும், வீதிகளில் மனிதர்கள் நடமாடுவதையும் ஒவ்வொன்றாக ரசித்து கொண்டே எதிர் வீட்டையும் பார்த்து கொண்டே அந்த குழந்தைகள் உட்கார்ந்திருப்பதையும் கவனித்தாள். லட்சுமியினுடைய குழந்தைகள் ஏதோ கவலையாக தன் வீட்டையே பார்ப்பது போல் அவளுக்கு தோன்றியது என்ன இந்த குழந்தைகள் தன் வீட்டை அல்லவா ஏக்கத்துடன் பார்க்கிறார்கள்! என்று உற்று கவனிக்கிறாள். அந்த குழந்தைகள் தன் பிள்ளைகள் விளையாடும் பொம்மைகளையா அப்படி ஏக்கத்துடன் பார்க்கிறது என்று நினைத்து விட்டு அதை உணர்ந்து கொள்கிறாள். பூங்கோதை பொம்மைகளை வேகமாக எடுத்துக்கொண்டுபோய் லட்சுமியினுடைய குழந்தைகளிடம் கொடுக்கின்றாள். அந்த குழந்தைகள் தன் தாயினுடைய முகத்தை பார்ப்பது போல் பூங்கோதையின் முகத்தை ஒரு ஏக்க பார்வை பார்த்து விட்டு அந்த பொம்மைகளை அன்போடு மகிழ்ச்சியாக வாங்கி கொள்கிறார்கள். அந்த இடத்தில் குழந்தைகள் தன் தாய் என்று உணர்கிறது. பூங்கோதையும் தன் மகள்கள் என்று உணர்கிறாள். இன்னொரு தாய் பெற்ற பிள்ளைகளின் ஏக்கத்தை போக்கி மகிழ்ச்சியுறச் செய்த பூங்கோதையும் அங்கு மனிதநேயமிக்கவளாக நிற்கிறாள்.
உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களும் மனிதநேயமிக்க மனிதர்கள்தான். மனிதநேயமிக்க மனிதர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறார்கள். எல்லா மனிதரிடமும் ஏதோ ஒரு தருணங்களில் மனிதநேயம் வியாபித்து கொண்டிருக்கின்றது. அன்பு, கருணை, இரக்கம், மனிதாபிமானம் இவை எல்லாம் மனிதனிடம் இருக்கின்றது. மனிதன் முதல் முதலில் உச்சரித்த வார்த்தை அம்மா. அன்பின் அடித்தளமும் அம்மா. அன்பு என்ற நீரை இந்த உலகிற்கு ஊற்ற ஊற்ற மனிதத்துவம் வளர்ந்து கொண்டே கொண்டே இருக்கும். மனிதநேயத்தோடு வாழ்வோம். மனிதனின் மகத்துவத்தை உணர்வோம்.
நன்றி!