நந்திதா படுக்கையறை சன்னல் வழியாக அரை மணிநேரமாக சாலையைப்
பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது தெருக்கோடியில் நுழையும்
வாகனங்களுக்கிடையே தன் மகளின் சைக்கிள் தென்படுகிறதா என்று
கண்களால் துழாவிச் சலித்துப் போனாள். பள்ளிக்கு மொபைல் எடுத்துக்
கொண்டு போகக் கூடாது என்பதால் அவளை அழைக்க முடியவில்லை.
மகள் ஆத்விகாவுக்கு ஐந்து வயசாகும் போது அமெரிக்கா சிலிக்கான் valley ல்
உள்ள Sanjose ல் குடியேறினார்கள். இங்கே வந்த புதிதில் அழுக்கு இல்லை,
வியர்வை இல்லை, கரண்ட் கட் இல்லை, தண்ணீர்ப் பிரச்சனை இல்லை என்பதே
நிம்மதியாக இருந்தது. அத்துடன் நேர்த்தியான வீடுகள், பூத்துக்குலுங்கும்
மலர்கள், வழுக்கும் சாலைகள் எனப் பார்த்த காட்சிகள் ஏதோ புது
உலகத்துக்குள் நுழைந்த உற்சாகம் அளித்தது. பத்து வருடங்களில் இது
சாதாரணமாகி விட்டது.
வந்த கொஞ்ச நாளிலேயே நந்திதா கார் ஓட்டக் கற்றுக் கொண்டாள். மூன்று
பேருக்கு இரண்டு கார்கள் தேவைப் பட்டது. அவன் அலுவலகம் போய் விட்டால்
பெண்ணைப் பள்ளியில் கொண்டு விட்டுக் கூட்டி வர, ஸ்விம்மிங் கிளாஸ்
கூட்டிப் போக, இந்தியன் ஸ்டோர்ஸ் போக என்று எதற்கும் அவனை
எதிர்பார்க்காமல் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டாள். இவர்கள் பெற்றோர்
எல்லாரும் கொஞ்ச வருடங்கள் வந்து போனார்கள். அப்புறம் அவர்களுக்கு
இந்தக் குளிர் சரிப்படவில்லை என்று வருவதை வெகுவாகக் குறைத்துக்
கொண்டு ஒரு கட்டத்தில் இங்கு வருவதே நின்று போனது. இரண்டு
வருடங்களுக்கு ஒரு முறையாவது இவர்கள் இந்தியா போய் வருவார்கள்.
ஆத்விகாவுக்குள் முடிந்த வரை இந்திய கலாச்சாரத்தை விதைத்துக் கொண்டே
இருப்பாள். அதற்காகவே இந்தியா போய்க் கொஞ்ச நாள் உறவுகளுடன் இருந்து
விட்டு வருவார்கள். ஆனாலும் இந்த இரண்டுங்கெட்டான் வயதில் கெட்டவை
தானே எளிதாய் ஒட்டிக் கொள்ளும் என்ற கவலை அரிக்கிறது.
ஆத்விகா வயது இந்த ஊர்ப் பெண்கள் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாகச்
சுற்றுவதையும், பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் கூச்சமின்றி முத்தம்
கொடுத்துக் கொள்வதையும் பார்க்கும் போது இவள் கவனிக்காத மாதிரி
முகத்தைத் திருப்பிக் கொள்வாள். இதைத் தன் பெண் கவனிக்கிறாளா என்று
அடிக் கண்களால் நோட்டம் விடுவாள். நம் ஊரிலும் இதெல்லாம் இப்போது
சகஜமாகி வருகிறது தான். ஆனாலும் இவ்வளவு பகிரங்கமாக நடந்து கொள்ளக்
கொஞ்சம் தயங்குவார்கள் என்று தோன்றும். இவர்களுக்கு Dating சாதாரணமாக
இருக்கலாம். இங்கே வளரும் என் பெண்ணுக்கும் இது சாதாணமாகத்
தெரியுமோ என்ற கவலை மனசைப் பிறாண்டியது.
தினமும் பள்ளி விட்டு நாலரைக்கு வரும் பெண் இன்னும் காணோம். நிமிடங்கள்
நகர நகரப் பதற்றத்தின் அளவும் B.P. போல கூடிக் கொண்டே இருந்தது.
அத்துடன் அவள் நேற்று சொன்ன விஷயம் வேறு மண்டைக்குள் குடைகிறது.
“Have you started dating?” னு எமிலி கேட்டா” என்று சொல்லி விட்டு ஆத்விகா
கடகடவென மாடிக்குப் போய் விட்டாள். இவள் வயிற்றில் அமிலம் சுரக்க
பின்னாடியே போய் “என்னடி சொல்ற?” என்று கேட்டதற்கு “ஏம்மா இவ்வளவு
reaction? அவ கேட்டான்னு தான சொன்னேன்! நான் dating போனேன்னு சொன்ன
மாதிரிப் பதட்டப் படறயே!” என்று சொல்லிச் சிரித்தாள்.
அவள் பள்ளிக்கு ஃபோன் பண்ணலாமா என்று யோசித்தாள். அப்புறம் தானே
பெண்ணைக் காணோம் என்று விளம்பரப்படுத்தி விட்டதாகத் தெரியுமோ என்று
யோசித்தாள். நந்தகுமாருக்கு ஃபோன் பண்ணினாள். Voice message தான் போனது.
அவன் ஏதாவது முக்கியமான மீட்டிங்கில் இருந்தால் ஃபோனை எடுக்க
மாட்டான். கடைசியாக பள்ளிக்கே போய்ப் பார்த்து விடலாம் என்ற யோசனை
வந்தது. ஆத்விகாவின் சைக்கிள் டயர் பஞ்சராகி இடையில் நின்றிருக்குமோ
என்ற யோசனை வந்தது.
டக்கென்று ஜீன்ஸும், டாப்ஸும் போட்டுக் கொண்டு கிளம்பினாள். காரில்
போனால் ஐந்து நிமிடங்கள் தான். அதற்குள் மூன்று சிக்னல்கள். மகள்
சைக்கிளுடன் போராடிக் கொண்டிருக்கிறாளா என்று வழியெங்கும்
பார்வையால் துழாவிக் கொண்டே போனாள். பள்ளி வந்துவிட்டாள். மகளின்
வகுப்பறை நோக்கி நடந்தாள். வரிசையாக எல்லாம் மூடியிருந்தது.சுத்தம்
செய்பவர் தவிர யாரும் இல்லை. அவரிடம்” யாருமே உள்ளே இல்லையா? “என்று
கேட்டதற்கு “எல்லாரும் அரை மணி நேரம் முன்னமே போய் விட்டார்கள்” என்று
சொல்லி விட்டாள். அழுகையும், பயமும் சேர்ந்து தொற்றிக் கொண்டது.. நல்ல
வேலை, நல்ல சம்பளம் என்று இங்கு வந்தோமே, ஒரே பெண்ணைப் பார்த்துப்
பார்த்து வளர்த்தேனே, சென்னையில் நன்றாகத் தானே இருந்தோம், இப்ப
இந்தப் பெண் எங்கே, யாருடன் சுற்றுகிறாளோ! இந்த நாட்டில் இது சர்வ
சாதாரணம் என்றாலும் என் பெண்ணை இப்படி நினைத்துக் கூடப் பார்க்க
முடியவில்லையே! என்ன செய்வது எனப் புரியாமல் மறுபடி கணவனை
அழைத்தாள். அதே வாய்ஸ் மெயில். எல்லா தெய்வங்களையும் வரிசையாக
வேண்டிக் கொண்டே வீட்டுக்கு வந்தாள். கார் கராஜ் திறக்கும் போது
பெண்ணின் சைக்கிள் இருப்பதைப் பார்த்ததும் தான் உயிரே வந்தது. காரை
பார்க் பண்ணி விட்டு உள்ளே ஓடினாள்.
ஹாலில் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்திருக்கும் பெண்ணைப்
பார்த்தவுடன் ஏதோ தவறு நடந்திருப்பது போலத் தோன்றியது. இவள் பக்கத்தில்
போய் அவள் தோளில் கை வைத்தவுடன் அவள் அம்மா தோளில் சாய்ந்து
ஓவென்று அழ ஆரம்பித்தாள். இந்தப்பெண் என்ன தப்பு செய்து விட்டு இப்படி
அழுது கொண்டிருக்கிறாள்?
“இந்தியாவுக்குப் போயிடலாமா அம்மா?” என்று கேட்டு விட்டுத் திரும்பவும் அழ
ஆரம்பித்தாள். “முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு! எனக்குப் படபடப்பா
இருக்கு!” என்ற நந்திதாவுக்கு அழுகையும் ஆத்திரமும் சேர்ந்து கண்ணீர் வந்தது.
“இன்னிக்கு காலையிலிருந்து எமிலி ரொம்பப் பதட்டமாவே இருந்தா. School
முடிஞ்சதும் அவகிட்ட ஏதாவது பிரச்சனையான்னு கேட்டேன். உடனே அவ அழ
ஆரம்பிச்சுட்டா. அவளை சமாதானப்படுத்தி பக்கத்துல உள்ள பார்க்குக்கு
அழைத்துப் போனேன். அங்க..” ன்னு சொல்லிட்டு திரும்பி அழ ஆரம்பிச்சா.
நந்திதா “சொல்லி முடிச்சுட்டு அழுடி. இப்படி திக்கித் திக்கி நீ சொல்றதுக்குள்ள
எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போல இருக்கு” என்றாள்.
“பார்க் போனதும் எமிலி என் தோள்ல சாய்ந்து அழ ஆரம்பிச்சுட்டா. ஒரு வழியா
அவளை சமாதானப் படுத்தி விபரம் கேட்டேன். அவ அம்மா அவளோட எட்டு
வயசுலயே செத்துப் போயிட்டாங்களாம் . ஒரு வருஷத்துல அவங்க அப்பா
இன்னொரு கல்யாணம் பண்ணி அவங்களுக்கு இப்ப இரண்டு பொண்ணுங்க
இருக்காங்களாம். அவங்களை கவனிக்கவே அவங்களுக்கு நேரம் சரியாக
இருக்குமாம், இவளைக் கண்டுக்கவே மாட்டாங்களாம். இவ அப்பாவும் எப்பவும்
பிஸியாவே இருக்கறதால இவ கிட்ட அதிகமாய்ப் பேச மாட்டாராம். தன்னோட
வீட்டுலயே தான் ஒரு அனாதை மாதிரி ஃபீல் பண்ணியிருக்கா. அப்ப தான்
அவங்க தெருவில் உள்ள ஜார்ஜ் பழக்கமானானாம். இவ கிட்ட ரொம்ப அன்பா
இருப்பானாம். அவனோட அம்மா அப்பா வேலைக்குப் போயிடறதால இவ
அவன் வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கா. அங்க இவளுக்கு அப்பப்ப குடிக்க,
சாப்பிட ஏதாவது குடுப்பானாம். இவளுக்கும் அது பழகிடுச்சாம். அவன் முதல்ல
கிஸ் பண்ணினானாம். அவளுக்கும் அது பிடிச்சிருந்ததால் அவங்க வீட்டுக்கு
அடிக்கடி போக ஆரம்பிச்சாளாம். இரண்டு பேரும் தப்புப் பண்ணிட்டாங்களாம்.
அவளுக்குப் போன மாசம் வர வேண்டிய பீரியட்ஸ் இன்னும் வரலையாம்.
அவளுக்கு ரொம்ப பயமா இருக்காம். ஜார்ஜ் கிட்டச் சொன்னதுக்கு அவன் “நீ
தான எங்க வீட்டுக்கு வந்த!”ன்னு அலட்சியமாக சொல்லிட்டுப் போயிட்டானாம்.
அவளுக்கு இப்ப யார் கிட்ட இதை எப்படி சொல்றதுன்னு தெரியலை. அம்மா
இருந்தா என்னை guide பண்ணி இருப்பாங்க. ஸ்டெப் மதருக்கு என்னை
ஏற்கனவே பிடிக்கலை. அப்பாவுக்கு என்கிட்ட அன்பு இருக்கான்னே தெரியலை.
அவர் கிட்ட இதை எப்படிச் சொல்ல முடியும்? இப்படியே மறைச்சு வைச்சு என்
பெல்லி பெருசாச்சுன்னா அதோட நான் எப்படி ஸ்கூலுக்கு வர முடியும்? எனக்கு
பயமா இருக்கு, நான் செத்துப் போயிடலாம் போல இருக்குன்னு சொல்லிட்டு
ரொம்ப அழுதா”என்று திரும்பவும் அழ ஆரம்பித்தாள்.
நந்திதாவுக்குத் தன் மகளுக்கு ஒன்றும் நடக்கவில்லையே என்ற நிம்மதிப்
பெருமூச்சு வந்தாலும் அந்த அம்மா இல்லாத குழந்தையை நினைத்தால்
வருத்தமாக இருந்தது. அந்தப் பெண் என்ன செய்யறதுன்னு தெரியாமல்
தற்கொலை ஏதாவது பண்ணிக் கொண்டு விடக் கூடாதே என்ற கவலை வந்தது.
“ஆமாம், அதுக்கு எதுக்கு இந்தியா போயிடலாம்னு சொன்ன?” என்று கேட்டாள்.
“இல்லை, அங்கெல்லாம் இப்படிப் பண்ண மாட்டாங்க தானே, நாம அங்கன்னா
இன்னும் safe ஆக இருக்கலாமேன்னு தோணித்து. இப்ப எமிலியே பெரிய
பெல்லியோட school க்கு வந்தால் எல்லாரும் கேலி பண்ணுவாங்க இல்லையா?
அதே மாதிரி எனக்கும் ஆச்சுன்னான்னு பயம் வந்தது. அது தான் அப்படி
சொன்னேன்” என்றாள்.
“எங்க இருந்தாலும் நாம ஜாக்கிரதையாக இல்லைன்னா இப்படி எல்லாம்
நடக்கும். யாரையும் ஓர் அளவுக்கு மேல் நெருங்க விடக் கூடாது. நாம அவங்க
கிட்ட ஒண்ணு எதிர்பார்த்தா அவங்க அதை அவங்களுக்கு சாதகமா use
பண்ணிப்பாங்க. அவளோட ஃபோன் நம்பர் கொடு, நான் அவகிட்டப் பேசறேன்.
அப்பா வந்தப்புறம் அவங்கப்பா கிட்டப் பேசச் சொல்லலாம். இந்த மாதிரி
நேரத்தில் கலங்காமல் இருக்கணும், புத்திசாலித்தனமாகவும், தைரியமாகவும்
இருந்து பிரச்சனையை சால்வ் பண்ணணும். நாம தெளிவா இருந்தோம்னா எந்த
இடத்துலயும் நாம பாதுகாப்பாக இருக்கலாம். நீ விக்கி விக்கி அழுததைப்
பார்த்ததும் பயந்து போயிட்டேன். முதலில் முகம் கழுவிட்டு சூடாக டிபன், காபி
சாப்பிடு, நான் அதுக்குள்ள எமிலி கிட்டப் பேசறேன் “ என்றாள்.
எமிலிக்கு ஃபோன் பண்ணி அம்மா கையில் கொடுத்தாள். நந்திதா அவளிடம் “நீ
தனியாக இருக்கியா? உன்கிட்ட இந்த அம்மா கொஞ்சம் பேசலாமா?”என்று
ஆங்கிலத்தில் கேட்டாள். அந்த அம்மா என்ற வார்த்தையே அந்தப் பெண்ணை
நெகிழ வைத்தது. “Yes, mom” என்றாள் அழுகையுடன். “உன்னைப் பற்றி இப்ப
தான் எல்லாம் ஆத்விகா சொன்னா. இந்த வயசுல அன்புக்காக ஏங்கறன்னு
தெரிஞ்சு அவன் உன்னை யூஸ் பண்ணி இருக்கான். இதில் உன் தப்பும் இருக்கு
தான். இந்த வயசில் எது சரி, எது தப்புன்னு சரியாப் புரியாது. எதற்கும் ஒரு நல்ல
தீர்வு உண்டு. அதுனால நாங்க உங்க அப்பா கிட்டப் பேசி இதைப் பிரச்சனை
இல்லாமல் முடித்து வைக்கிறோம். நீ இன்னிக்கு சமத்தா சாப்பிட்டுட்டுத் தூங்கு.
என்னை நம்பு. பயத்துல எந்த தப்பான முடிவும் எடுக்காதே” என்றாள்
ஆங்கிலத்தில்.
அவளும் “சரிம்மா, நீங்க இப்படிச் சொன்னதே எனக்கு தைரியத்தைக்
கொடுக்குது. இவ்வளவு நேரம் என்ன செய்யறதுன்னு தெரியாம
தவிச்சுக்கிட்டிருந்தேன். நன்றிம்மா” என்றாள். அவள் அப்பா நம்பரை
வாங்கினாள். ஆத்விகாவிடம் “நாங்க பேசிக்கறோம், இதைப் பற்றி நீ
கவலைப்படாமல் போய்த் தூங்கு” என்று அனுப்பி விட்டு நந்தகுமார் வந்த பின்
அவனிடம் நடந்ததையெல்லாம் சொன்னாள். அவனுக்கும் கஷ்டமாக இருந்தது
என்றாலும் “அடுத்தவர்கள் விஷயத்தில் நாம் சொன்னால் நல்லா இருக்குமா,
அதுவும் அவர்கள் கலாச்சாரம் வேறு, நம் கலாச்சாரம் வேறு, அவ அப்பா எப்படி
எடுத்துப்பாரோ” என்று யோசித்தான். நந்திதா தான் “இந்த வயசில் அந்தப்
பெண் கர்ப்பமாக இருப்பதை எந்த நாட்டிலும் ஏத்துக்க மாட்டாங்க. அதுவும்
அந்தப் பெண்ணுக்கு அம்மா இல்லை, அம்மா இருந்தால் அவங்க அந்தப்
பெண்ணுக்கு வழி காட்டி இருப்பாங்க. அந்தப் பெண் தப்பே செய்திருந்தாலும்
அம்மா கிட்டன்னா அந்தப் பெண்ணால் பேசியிருக்க முடியும். சித்தி கிட்டச்
சொன்னால் இன்னும் அவமானப் படுத்துவாங்களோ என்ற பயம் இருக்கு.
அதிகம் பேசாத அப்பாவிடம் எப்படிச் சொல்லன்னு அந்தப் பொண்ணு பயந்து
போயிருக்கு. இங்க உள்ள பசங்களுக்கும் இந்த வயதைக் கடப்பது கஷ்டம் தான்
போல. அதுனால தான் அதுங்க பகிர்ந்துக்க ஆளில்லாமல் தப்பான முடிவுக்குப்
போறாங்க “ என்றாள்.
அந்தப் பெண்ணின் அப்பாவிடம் மறு நாள் அவரை நேரில் சந்திக்கணும், அவர்
பெண் தொடர்பான முக்கியமான விஷயம் என்று மட்டும் சொன்னார்கள்.
அவரும் மறு நாள் காலை அலுவலகம் போவதற்கு முன் இவர்கள் வீட்டுக்கு
வரேன் என்று சொல்லி விட்டார். மறு நாள் குழந்தைகள் பள்ளிக்குப் போன பின்
வந்தார். அவரிடம் பக்குவமாக விபரம் சொன்னார்கள். அவர் முகத்தில் முதலில்
அவமானமும் ஆத்திரமும் தெரிந்தது. நம்ம பெண் சம்மந்தமே இல்லாத யார்
கிட்டயோ சொன்ன விஷயத்தை நம்ம கிட்ட சொல்லி இருக்கலாமே, இப்ப
தேவையில்லாம இவங்க முன்னாடி தலை குனிய வேண்டி இருக்கே என்று
எரிச்சல் வந்தது. ஆனாலும் வார்த்தைகளைக் கொட்டாமல் கேட்டுக்
கொண்டிருந்தார். அப்புறம் அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய
வைத்தார்கள். “ அந்தப் பெண்ணுக்கு யாரிடம் பகிர்வது என்று தெரியாததால்
என் பெண்ணிடம் சொல்லி இருக்கா. இந்த மாதிரி விஷயங்களை அம்மா கிட்டத்
தான் குழந்தைங்க சொல்லுவாங்க. உங்க இரண்டாவது மனைவியைப் பற்றி
அவள் ஏதும் தவறாகச் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் இதைப் பகிர
அவளுக்குத் தயக்கமாக இருந்திருக்கு. குழந்தைகள் சுயமாகத் தன் காலில்
நிற்கும் வரை வீடு தான் பாதுகாப்பான கூடு போல இருக்கணும். தப்பா
நினைச்சுக்காதீங்க, நீங்க தான் அவள் அப்பா, அதுனால அவள் மேல்
உங்களுக்குத் தான் அதிக அக்கறை இருக்கணும். அவள் கிட்ட தினமும் கொஞ்ச
நேரம் அன்பாய்ப் பேசி இருந்தால் அவள் இப்படி அன்புக்கு ஏங்கி ஏமாந்து
போயிருக்க மாட்டா. அவளாக சுயமாய் நிற்கும் காலம் வரும் போது அவளால்
ஓரளவுக்காவது மனிதர்களை எடை போட முடியும். எங்க நாட்டிலேயே எல்லாம்
பார்த்துப் பார்த்து அமைத்துக் கொடுக்கும் வாழ்க்கையே இப்பவெல்லாம்
நிறையச் சறுக்குகிறது. இந்த விஷயத்துல நாங்க எமிலிக்கு ஏதாவது உதவி
பண்ணணும் என்றாலும் தயங்காமல் சொல்லுங்க, அவ எங்களுக்கும் பொண்ணு
மாதிரி தான்” என்று நந்திதா சொன்னாள்.
அவருக்கு ‘என் பெண்ணுக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம்? இவர்களே
அவளுக்காக இவ்வளவு யோசிக்கும் போது நானும் என் பெண்ணைக்
கவனித்திருக்க வேண்டுமோ, மற்ற இரண்டும் சின்னக் குழந்தைகள் என்பதால்
அவர்களை மட்டும் கொஞ்சி விட்டு இந்தப் பெண்ணைக் கண்டுக்காமல் விட்டது
என் தவறு தான். இந்த adolescent வயசில் அவளுக்கு சரியான வழிகாட்டியாக நான்
இருந்திருக்கணும்’ என்று யோசித்தார். அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு
எழுந்தார்.
அதன் பின் எமிலி ஒரு வாரம் ஸ்கூலுக்கு வரலை என்று ஆத்விகா சொன்னாள்.
அவள் அப்பா “எல்லாம் பிரச்சனை இல்லாமல் முடிந்தது. நன்றி” எனச் செய்தி
அனுப்பியிருந்தார். ஒரு வாரம் கழித்து எமிலி பள்ளிக்கு வந்து விட்டாள். அன்று
மாலை இவர்கள் வீட்டுக்கு வந்து நந்திதாவைக் கட்டிப் பிடித்து அழுது விட்டாள்.
“அம்மா, என் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்பதற்காக நாற்பது நாட்களே
ஆன ஒரு சின்ன உயிரைக் கொன்ற போது என் மேலேயே எனக்கு வெறுப்பு
வந்தது. அப்புறம் எனக்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டரும், என் அப்பாவும் தான்
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேற்றினாங்க. நீங்க அப்பா கிட்ட என்ன
சொன்னீங்கன்னு தெரியலை. அவர் என்கிட்ட இப்பல்லாம் ரொம்ப அன்பாக
இருக்கார்” என்றாள்.
“எமிலி, உன் வயசில் எல்லாருக்கும் வரும் ஈர்ப்பு தான் இது. எங்க நாட்டிலும்
எல்லாக் குழந்தைகளும் இந்தப் பருவத்தைத் தாண்ட சிரமப் படுவார்கள் தான்.
ஆனால் அவர்களுக்கு வீட்டில் இது பற்றி ஒரு புரிதல் ஏற்படுத்துவோம். அவர்கள்
சுயமாய் நிற்கும் காலம் வரும் போது தான் அவர்களுக்குத் தன் துணையைத்
தேர்ந்தெடுக்கும் பக்குவம் வரும். அப்போது அவர்கள் செலக்ட் பண்றவங்க
சரியெனத் தோன்றினால் நாங்களே அவர்களுக்குக் கல்யாணம் செய்து
வைப்போம். அது வரை மனசால் இணைந்தாலும் உடலால் இணையக் கூடாது
என்பதில் கவனமாக இருப்போம். இது தான் என் மகளான உனக்கும் சொல்ல
ஆசைப் படறேன்” என்றாள். எமிலி “இனிமேல் இந்த மாதிரித் தப்பு நான்
செய்யவே மாட்டேன்மா. நான் சுயமாய் என் காலில் நிற்கும் வரை யார் Dating
கூப்பிட்டாலும் போக மாட்டேன். இனிமேல் என் படிப்பு, வாழ்க்கை முன்னேற்றம்
தான் என் இலட்சியமாக இருக்கும். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிம்மா”
என்றாள்.
ஆத்விகா அம்மாவைப் பெருமையாகப் பார்த்தாள். அந்தப் பார்வையில்
“என்னைப் பற்றிக் கவலைப் பட்டயே, இந்த ஊர்ப் பெண்ணையே மாத்திட்ட,
உன் பெண் தப்பா நடந்துப்பேனா “ என்ற அர்த்தம் அம்மாவுக்குப் புரிய
சந்தோஷமாய் இரண்டு பேரையும் அணைத்துக் கொண்டாள்.