என் பேரு மணி.
நான்தான் இந்த வீட்டடோட கடக்குட்டி. அதனாலயோ என்னமோ எங்க
வீட்டுல எல்லாருக்கும் என்மேல பிரியம் ஜாஸ்தி. எனக்கு எங்க அம்மானா உயிரு.
என்ன எதுக்காகவும், யாருக்காகவும் விட்டு குடுக்காது. எங்க ஐயாவுக்கும்
என்மேல பாசம் ரொம்ப! ஏன்னா.. என்ன ஏன்னா? பிரியமா இருக்குறதுக்கு
காரணம் வேணுமா என்ன?
ஐயா காலையில கிளம்பி வயக்காடு, விவசாயம்னு போயிடுவாங்க.
அக்கா வேலைக்கி, பெரியண்ணா வெளிநாட்டுல, கடசியா சின்ன அண்ணாவும்
வேலைக்கி போறேனு எதோ ஐதராபாத்’தாம் அங்க போயிருச்சு!
இப்ப நான் மட்டும்தான் வீட்ல! யாரு வீட்டுல இல்லனாலும் பரவால்ல
எனக்கு அம்மா வீட்டல இருக்கனும்.
சமச்சாலும், வீட்டு வேல பாத்தாலும், ஆட்டுமாட்ட மேச்சாலும், குளத்துக்கு
போனாலும் எங்கிட்ட பேசாம அது வேல ஆகாது.
நானும் பின்னாடியே நிப்பேன். உண்மைய சொன்னா அதுக்காண்டியே
எங்க போணாலும் நானும் வால் புடிச்சிகிட்டு கிளம்பிருவேன்!
சாப்பாடு ஆனதும் எனக்குதான் மொத. அப்புறமாதா அம்மா சாப்பிடும்!
அம்மாவுக்கு உலகமே நாந்தான். என்ன சுத்தி சுத்தி வரும். நா அம்மாவ
சுத்தி வருவேன். எனக்கு ஒன்னுன்னா துடிச்சி போயிடும். வீட்டு வேல ஒருபக்கம்
இருந்தாலும் என்ன குளிப்பாட்டி, பொட்டு வச்சி, திருஷ்டி வழிச்சி நெட்டி முறிச்சு
அழகு பாக்குறதுல அம்மாவுக்கு அப்படி ஒரு சந்தோசம்.
ஆனா எனக்கிப்ப ஆறு வயசாச்சுங்கிற தைரியத்துல அப்பப்போ
என்னைய வீட்டுல விட்டுட்டு அவசிய தேவைக்கு டவுனுக்கு போறதுண்டு.
வர்ற வரைக்கும் திங்க குடுத்துட்டு போனத அப்படியே வச்சிகிட்டு
திண்ணையிலேயே காத்திருப்பேன். விட்டுட்டு போன கோவம் உள்ளுக்குள்ள
கெடந்தாலும், திரும்ப ரேட்டுல நடந்து வர்ற தல தெரிஞ்சதுனா அவசரமா ஒரு
வாய் நிறைய குதப்பிகிட்டு ஓடி போய் வரவேற்கிறது நாந்தான்.
என்னோட அந்த கோலம் அம்மாவுக்கு புரிஞ்சது. அதனாலயே வெளி
பயணத்த குறைச்சிகிட்டு. அம்மா கூடவே இருக்குறதால அண்ணங்க இல்லாத
குறை கொஞ்சமா குறைஞ்சது.
போன மாசத்தோட 6 வயசு முடிஞ்சது.
இருந்தும் எனக்கு இது வரைக்கும் மத்த புள்ளைங்க மாறி வாய் பேச வரல.
எதும் வேணும்னா, சொல்லனும்னா ஒவ்வொன்னுத்துக்கும் தனித்தனியா நான்
செய்யிற சம்பாஷனை எங்க அம்மாக்கு புரிஞ்சது.
2
எங்க ஐயாவ எதுத்து யாரும் பேசக்கூடாது. பேசுனா அப்புடி ஒரு கோவம்
வரும்.
அதுக்காக எங்க அம்மாவ, ஐயா திட்டி சண்டபோட்டா, எனக்கு
பொறுக்காது.. வாய் இருந்தும் பேச முடியாத அம்மாவுக்காக நான் பேசுவேன்.
ஐயாவோட சண்ட போடுவேன்.
வழக்கம்போல ஐயாவுக்கு என் பேச்சு புரியாது! ஆனா அம்மா
என்னயப்பாத்து அழும், எனக்கும் ஆத்திரமா இருக்கும்.
அடுத்த நாள் ஐயா மடில ஏறிகிட்டு வாய்க்கு வாய் பிடுங்கி திம்பேன்.
அம்மா திட்டும், ஒனக்கு தனியா கிண்ணத்துல தரேன் வா’ன்னு கூப்பிடும்..
ஆனா எனக்கு ஐயா கைப்பண்டம் தான் இஷ்டம்.
அக்காவுக்கு ஞாயித்து கெழம மட்டும்தான் லீவு. அதுல துணி
தொவைக்கவும், அது வேலைய பாக்கவும் சரியா இருக்கும்.
ஒரு மனுசன் எவ்வளோ நேரம்தான் வேலை மட்டுமே செய்வாங்களோ!
வேலைக்கி நடுவுல என்னால முடிஞ்ச சேட்ட பண்ணிகிட்டு, செல்லம்
கொஞ்சிகிட்டு நான்தான் அவங்க மூனு பேருக்கும் எல்லாமா இருந்தேன்.
எனக்கு சரியா நெனவில்ல, ஒருவாட்டி அண்ணங்க ரெண்டு பேரும்
ஊருக்கு வந்திருந்தாங்க, கொஞ்ச நாளா எல்லாரும் பரபரப்பா இருந்தாங்க,
திடீர்னு ஒருநாள் அக்காவுக்கு கல்யாணம்னு சொல்றாங்க. பந்தல்,
தோரணம், வாழைமரம், கலர் கலர் லைட்டு, ரேடியாகட்டி ஊருக்கே
கேக்குறமாறி பாட்டுனு வீடே அமக்களமா இருந்துச்சு. எனக்கு அவ்வளோ
சந்தோசம்.
பொட்டு பொடுசுகளோட நிறைய சொந்தக்காரங்கலாம் வந்து
நிறையவும் ஒரே கொண்டாட்டம்தான். மூனு நாள் அமளிதுமளிதான்.
கல்யாணம் முடிஞ்சி அன்னிக்கி மதியமே அக்கா வேற ஊருக்கு கார்ல
போயிட்டு. அப்புறம் ரெண்டு நாளுல விருந்துக்கு வந்தது, இப்ப மொத்தமா
அங்கேயே தங்கிட்டு.
பெரியண்ணா வழக்கம்போல வேலைக்கு ஓடிட்டு.
அக்காவ கொண்டுபோய் மாமா வீட்டுல விட்டுட்டு வந்த நாள் முதலா
நெனச்சப்பலாம் அம்மா எங்கிட்ட அக்கா புராணம் பாடி புலம்பும்.
ஐயா மனசுல இருந்தாலும், வெளிய சொல்லிக்கல! தனிமைல இருந்த
ரெண்டு பேருக்கும் நான்தான் துணை.
நேரம் கெடைக்கிறப்ப அப்படி இப்படினு எப்பவாது அக்கா, மாமா
ரெண்டுபேரும் வீட்டுக்கு வந்துட்டு போவாங்க.
அப்புறம் ஒருநாள் எங்க அக்காவுக்கு பாப்பா பொறந்துச்சு. ஆஸ்பத்திரி
அழச்சிட்டு போனதுலேர்ந்து பாப்பா பொறந்து 10 நாள் வரைக்கும் அம்மா
வீட்டுக்கு வரல.
3
அக்காவுக்கு ஆப்ரேசன் பண்ணிருக்கதால ஆஸ்பத்திரில என்னையும்
வச்சிகிட்டு பாப்பாவ பாத்துக்க முடியாதுனு என்னைய வீட்டுல விட்டுட்டாங்க.
நானும் ஐயாவும் மட்டும் ஒன்ன பாரு என்ன பாருனு தனியா இருந்தோம்.
சின்னண்ணா மட்டும் எப்பவாது வந்து எனக்கு திங்க வாங்கினத
குடுத்துட்டு வீட்டுலேர்ந்து ஆஸ்பத்திரிக்கு வேண்டியத எடுத்துகிட்டு போவும்.
அடிக்கடி ஐயா வயலுக்கு, கடைக்கினு போறதால எனக்குதான்
யாருமில்லாம அனாதையா இருக்குறமாறி இருந்துச்சு.
புதுசா ஒரு பாப்பா வரவும் அம்மா கூட என்னைய மறந்துட்டு போயி
இருக்கு! யாரு ரோட்டுல நடந்து போனாலும், அம்மாதான் அனுப்பிவிட்டு நம்ம
வீட்டுக்கு வராங்க போலனு போயி போயி பாப்பேன்.
ஒவ்வொரு வாட்டியும் ஏமாந்தாலும் இன்னக்கி வந்துருவாங்க, நாளைக்கி
வந்துருவாங்கனு பாத்துக்கிட்டே இருந்தேன். யாரும் இல்லாம தனியா
இருக்குறப்ப அழுகனும்போல இருக்கும்.
கொல்லபக்கமா போயி தோட்டத்துக்குள்ள நின்னு சத்தம் போடாம
அழுவேன்.
சமைக்க ஆள் இல்லாததால கடையிலேர்ந்து தோசை, இட்டலி, தயிர்
சாதம் பேர்ல தயிரே தண்டாத சாதமா ஒன்னு ஐயா வாங்கிட்டு வருவாங்க.
எனக்கு எங்கம்மா கெட்டி தயிரா எடுத்து போட்டு பிசஞ்சி தர்றதுதான்
நெனப்பு வந்துச்சு. அத சாப்புட்டா வெண்ண நாக்குல ஒட்டும்.
அப்புறம் அப்படியே நாள் ஓடுச்சு. ஒருநாள் கார்ல அம்மா, அக்கா, பாப்பா
எல்லாரும் வீட்டுக்கு வந்தாங்க.
எனக்கு கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் வந்ததுமே எங்கம்மா மணி…னு
கூப்பிடவும் சந்தோசம் தாங்கல. எந்திருச்சு கிட்ட ஓடுனேன். தொடக்கூடாதுனு
சொல்லி எட்டி நிக்க சொல்லி என்ன அதட்டவும் மறுபடியும் சோகமாச்சு.
அக்கா கைல வச்சிகிட்டே பாப்பாவ எனக்கு காட்டுச்சு. செவசெவனு
குட்டியா, அழகா தூங்கிகிட்டு இருந்துச்சு பாப்பா.
அதுக்கப்புறம் கோவமெல்லாம் காத்தோட காத்தா போச்சு. என்
இஷ்டப்படி ஓடி ஆட ஆரம்பிச்சேன்.
பதினாறாம் நாள் அக்கா, பாப்பா ரெண்டு பேரையும் வீட்டுக்கு
அழைச்சதும்தான் ஆரம்பிச்சது அடுத்த பிரச்சன.
பாப்பா இருக்கா ஓடாத, பாப்பா அழுவா சத்தம்போடாத, பாப்பா கிட்ட
போவாத, பாப்பாவ தொடாத, பாப்பா இருக்கா தும்மாத, எட்டி நின்னு பாரு,
பாப்பா மேல எச்சி வச்சிராத, பாப்பா.. பாப்பா.. பாப்பானு அவ வந்ததுலேர்ந்து
கொஞ்ச கொஞ்சமா என்னோட இடம், எனக்கான நேரம், என்னக்கான
கொஞ்சல், செல்ல பெயர்கள், பார்வை, பேச்சு, விளையாட்டு எல்லாம்! எல்லாம்
பறிபோய் கண்டிப்பும், சிடுசிடுப்பும் மட்டுமே எனதாச்சு.
பாப்பாவுக்காக இது எல்லாமும் தாங்கிக்கலாம்னா இதெல்லாத்தையும்
4
சொல்றதே என் அம்மாதான் அப்புறம் எப்படி?
பாப்பாக்கு பேர் வச்சதும் சின்னண்ணா மறுபடி வேலைக்கி கிலம்பிட்டு.
ஏன் இப்படி ஒரு வேல? தன்னோட வீட்டுல இல்லாம, குடும்பம், சொந்தபந்தம்
எல்லாம் விட்டு எங்கயோ போயி தனியா கெடந்து சம்பாதிச்சாதான் காசா?
இல்ல அப்படி சம்பாரிச்சே ஆகனுமா? அப்படி உள்ளூர்ல இல்லாத, பாக்க
முடியாத வேலய ஏன் போயி பாக்கனும்?
ஒரு அண்ணா வெளியூரு, ஒரு அண்ணா வெளிநாடு, ச்சே… எனக்கு
பைத்தியம்தான் புடிச்சது!
இப்பலாம் அம்மா என்ன குளிப்பாட்டி விடுறதில்ல, பொட்டு வச்சி
விடுறதில்ல, பல சமயத்துல என்னயே மறந்துடுது.
பாப்பா வந்ததும் பாப்பாகிட்டயே பேசிகிட்டு, விளையாடிகிட்டு அவளதா
நல்லா கவனிச்சிக்கிது!
பாப்பாட்ட பேசுறமாறி அக்கா எப்பவாது எங்கிட்டயும் பேசும். ஆனா
அப்பவும் அவளுக்காகதான் பேசும்.
‘அது உன் பாப்பாடா.. நீதான் அவள பத்திரமா பாத்துக்கனும். நல்ல
புள்ளதான நீ? கோச்சிக்காதடா.. பாப்பா வளந்ததும் உன்னோட வந்து
விளையாடுவா!’ அப்படினு சொல்லும்போதெல்லாம் எனக்கு கொஞ்சம்
ஆறுதலா இருக்கும்.
அதுக்கப்புறம் என்னய கூப்பிட்டா போயி பாப்பேன். இல்லனா
நாம்பாட்டுக்கு விளையாடுவேன், இல்ல தூங்குவேன்.
என்னபத்தி யார் பேசுனாலும் கண்டுக்காம இருந்தேன். தூங்குறமாறி கூட
கண்ணமூடி படுத்துகிட்டு கேப்பேன். தப்பா ஒன்னும் பேசமாட்டாங்க.
இருந்தாலும் என்னயபத்தி அவங்களோட அபிப்ராயம் என்னனு
தெரிஞ்சிக்குவேன்.
ஐயா பங்குக்கு ‘பாப்பா வந்துட்டுனு கோவமா? நம்ம அக்கா பாப்பாடா..
நீதான் பாத்துக்கனும் ‘ சொல்லி சொல்லியே என்ன அவகிட்டேர்ந்து தூரமாவே
நிறுத்திட்டாங்க.
அப்புறம் ஒருநாள் அக்கா வேலைக்கி போறதால பாப்பாவ
பாத்துக்கனும்னு மறுபடியும் அம்மாவ கூட்டிகிட்டு அக்கா ஊருக்கு போச்சு.
எனக்கு ஏன்டா இந்த வீட்டுல பொறந்தோம்னு இருந்துச்சு! நான்
சந்தோசமா இருந்தா ஒடனே எதாவது ஒன்னு வந்து என்னைய அழ வச்சி
பாக்குது.
பேசாம எங்கையாவது ஓடி போயிடலாமானு கூட தோனுச்சு. ஐயா
ஒருத்தரால அங்கயே இருந்தேன்.
அசந்துமசந்து ரோட்டுபக்கம் விளையாட போவேன், எதிர் வீட்டுல ஒரு
பாப்பா இருக்கு. அது கூப்புட்டா போயி விளையாடிட்டு வருவேன்.
மத்தபடி வீட்ட சுத்தி நாலு தெச வேலிக்கு அந்த பக்கம் எனக்கு வேற
5
உலகம் இல்ல!
வாரம் ஒருக்கா, இல்ல மாசத்துல ரெண்டு தடவ ரொட்டி பாக்கெட்டோட
வந்து என்னைய பாத்துட்டு போகும் அம்மா.
எனக்கு விவரம் புரிய ஆரம்பிக்கவும் இதெல்லாம் பெருசா தெரியல,
ஆனா ஒன்னு எல்லாரும் ஒன்னா இந்த வீட்டுல இருந்தா அவங்களுக்கு
சந்தோசமோ இல்லையோ, அது என்னவோ எனக்கு சந்தோசமா இருக்கும்.
அதுக்கிடையில கொரோனா லாக்டவுன் சொல்லி ரொம்ப நாள்
சின்னண்ணா மட்டும் இங்கயே இருந்துச்சு.
அஞ்சு மாசமும் டெய்லி விளையாட்டு, சண்டை, கொஞ்சல்னு நான்
தூங்குறது வரைக்கும் அது கூடவே.
சரி இனி வேலைக்கு போகாது நம்மக்கூடவே இருக்கும்னு நம்ப
ஆரமிச்சேன். அதுவும் அப்படிதான் இருந்துச்சு.
படக்குனு ஒரு நாள் காலையிலேயே குளத்துக்கு போயி குளிச்சிட்டு வந்து
புது சட்ட போடுறப்பதான் இவனும் கிளம்பிட்டானு புரிஞ்சது.
நான் என்ன பாவம் பண்ணேன்? ஏன் என்னோட பழகுன
சொந்தமெல்லாம் என்னைய பாதில பாதில தனியா விட்டு ஓடுது?
தனியா பொறந்தோம், தனியா போறோம்.. நடுல வாழுற இந்த சின்ன
வாழ்க்கையாவது ஒன்னா வாழலாம்னா அதுலயும் பல காரணத்த வச்சிகிட்டு
தனித்தனியா வாழ்றதெல்லாம் ஒரு வாழ்க்கையா? அப்புறம் எதுக்கிந்த
குடும்பம், சொந்தம், பந்தம், பாசம், உறவு எல்லாம்? ச்சீ…
எனக்கு மனசு வெறுத்து வந்துச்சு. என்னவோ போங்கடானு போயி என்
ஆஸ்தான இடத்தில படுத்துக்கிட்டேன்.
எங்கிட்ட அம்மாவுக்கு அடுத்து இவனுக்குத்தான் அதிக பரிட்சயம்.
அதனாலவோ என்னமோ என் மனச புரிஞ்சி எனக்காக, என் நிலை நெனச்சி
கொஞ்சம் ஆதங்கப்பட்டான், ஆறுதல் சொன்னான். சீக்கிறம் திரும்பி வர்றேனும்
சொன்னான்.
அவனுக்கும் பால்யத்தில் தனிமைகள் பயமுறுத்தியிருக்கலாம்.
புறப்பட்டு போகும்போது என்கிட்ட சொல்லிக்கிட்டே கையசச்சான். நா
அவன பாத்துகிட்டே நின்னேன்.
கண்ணு நெறஞ்சி பார்வைய மறச்சது. ஐயாகிட்ட என் நிலமைய
சொல்லிக்கிட்டே வாசல் தாண்டி போனான்.
திரும்பி வரும்போது கட்டாயம் வாசல்ல காத்திருப்பேன்னு அவனுக்கு
தெரியும்.
ஏன்னா, என்னோட மனச என் முகம் காட்டி கொடுக்கலனாலும் அவங்க
போட்ட சோத்த தின்னு வளந்து வளஞ்ச என் வால் ஆட்டம்போட்டு காட்டி
கொடுத்துடும்.
6
இப்பலாம் யாருமில்லாத வீடுனு யாரும் வாசல் நெருங்க முடியாது.
என்மேல எல்லாருக்கும் அவ்வளவு பயம்!
தெருப்பக்க காம்பவுண்ட் மேல முன்னங்கால தூக்கி வச்சிகிட்டு நான்
வெளில எட்டிப்பாக்குறத பாத்தே பல பேர் பயந்து ஓடிருக்காங்க. வீட்ட சுத்தி
முழுக்க என் கண்ட்ரோல்தான்.
*******