உறக்கம் வராமல் புரண்டு படுத்த அப்துல்லாவுக்கு, இப்போது அந்த முனகல் சப்தம் தெளிவாகக் கேட்டது. வாசலை ஒட்டிய அறையில் படுத்திருந்ததால் இந்த சப்தம் வெளியிலிருந்து தான் வருகிறது என்று புரிந்தது.
நேற்றைய ஊரடங்குக்குப் பிறகு வெளியில் மனித வாடையே இல்லாத நிலையில், இது யாராக இருக்கும் என்று கதவை ஓசைப்படாமல் மெதுவாகத் திறந்த போது தான் வாசற்படியில் விழுந்து கிடந்த அந்த இளைஞன் தென்பட்டான். உடையில் திட்டு திட்டாக ரத்தம். சவரம் செய்யாத முகம். 26 அல்லது 27 வயது இருக்கலாம். நல்ல களையான முகத் தோற்றம். வளர்த்தியான உடல் வாகு. கஷ்டப்பட்டு அவனை லேசாகப் புரட்டியபோது பின் மண்டையில் ரத்தம் கசிவது புலப்பட்டது மூர்ச்சையாக இருந்த போதிலும் வலி தாளாது முனகிக் கொண்டிருந்தான்.
நேரத்தை வீணாக்காமல், உள்ளே போய் மகன் ஹஃபீஸை எழுப்பி விஷயத்தைச் சொன்னார். இருவருமாக அந்த இளைஞனைத் தூக்கிக் கொண்டு வந்து முன் அறைக் கட்டிலில் போட்டார்கள். உடைகளைத் தளர்த்தும்போது அவன் கழுத்தில் இருந்த தாயத்து புலப்பட்டது. முகத்தில் தண்ணீர் தெளித்தபோதும் மயக்கம் தெளியவில்லை. மூச்சு மெல்லிய இழையாக வந்து கொண்டிருந்தது. உடனடியாக அவனுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் என்பது புரிந்தது. ஊரே ஓய்ந்து கிடக்கும் நிலையில் என்ன செய்வது?
பாழாய்ப் போன இந்த இந்து முஸ்லீம் கலவரம் என்று ஓய்ந்து இந்து சகோதரர்களுடன் பழையபடி நட்பு பாராட்டும் நாள் வரும் என்று அப்துல்லாவுக்கு ஏக்கமாக இருந்தது.
எங்கேயோ அயோத்தியில் நடக்கும் கோவில் சண்டைக்கு இந்த ஊரில் நெறி கட்டுகிறது. எதற்கு என்றே தெரியாமல் அடித்துக் கொள்கிறார்கள். துப்பாக்கிச் சூடு, அதைத் தொடர்ந்து கண்ணீர் புகை, போலீஸ் தடியடி, பின்பு ஊரடங்கு உத்தரவு. மத வெறியா? அல்லது இந்த நெருப்பில் குளிர் காயும் அரசியல் வாதிகளா? யார் இதற்குக் காரணம்? மாமூல் வாழ்க்கை பறி போய் பல நாட்களாகி விட்டன. சிக்பத்துல்லாவின் மகளை பள்ளியில் சேர்த்திருந்தாலும் போக முடியவில்லை.
எண்ணங்களை உதறிவிட்டு மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியத்துக்கு ஆயுத்தமானார் அப்துல்லா. இப்போது வெளியில் போய் மருத்துவ உதவி பெற முடியாது. நான்கு வீடுகள் தள்ளி சையது டாக்டர் இருக்கிறார். வயதானவர். வாப்பாவுக்கு நண்பர். இந்தக் குடும்பத்தின் மேல் அபிமனம் உள்ளவர். அவரை அழைத்து வந்து பார்க்கலாம். முதலில் இவனுக்கு முதலுதவி செய்தாக வேண்டும். கையில் குண்டு பாய்ந்திருக்கிறது. உயிருக்கு ஆபத்தில்லையா என்று தெரியவில்லை.
ஹஃபீஸ் கொல்லைப்பக்க மதிலோரமாகப் போய் சையது டாக்டரை கையோடு அழைத்து வந்தான். முதலுதவிக்குப் பிறகு தலையில் கட்டுப் போட்டு, ஊசி போட்ட பிறகும் அந்த இளைஞன் உணர்வற்றுக் கிடந்தான். அப்பாவும் மகனுமாக அவனது இரத்தக் கறை படிந்த உடைகளைக் களைந்து மாற்று உடை அணிவித்தார்கள். அவன் சட்டைப் பையில் இருந்த கடித உறை அவனை ‘பரத்’ என்று அறிவித்தது.
அவ்வப்போது சிறு அசைவுகள், முனகல்கள். அப்துல்லா அவன் அருகிலேயே இருந்து ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாக குளூகோஸ் தண்ணீர் வாயில் ஊற்றிக் கொண்டிருந்தார்.
இப்போதுள்ள நிலைமையில் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நினைத்துக் கூட பார்க்கமுடியாத ஒரு செயல். ஒரு ஹிந்து இளைஞனை ஒரு முசல்மான் பராமரிப்பது இன்று ஊர் இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. எப்பாடு பட்டாவது இவனுக்கு சிகிச்சை அளித்து நன்கு குணமானவுடன் அனுப்பி விட வேண்டியது தான்.
மூன்றாவது நாள் தான் பரத் கண் விழித்தான். சுற்றுப்புறத்தை உணர ஆரம்பித்தான். சையது டாக்டர் தெளிவாக சொல்லி விட்டார், இன்னும் ஒரு வாரத்துக்கு அவனுக்கு மருந்தும், நல்ல உணவும், கவனிப்பும் தேவை என்று. வெளியில் செல்லக் கூடது என்றும் தடை விதித்தார். அவர் கடமையை முடித்துச் சென்று விட்டார்.
ஆனால், அன்று இரவு, அரைகுறை மயக்கத்தில் பரத் உளறியது அப்துல்லாவைத் தூக்கி வாரிப்போடச் செய்தது. அது முசல்மான்களை எதிர்த்துக் கூறும் வாக்கியமாக இருந்தது. அவர்கள் மீது அவனுக்கு இருந்து பகைமை புரிந்தது. இவன் தீவிரவாதத்தின் பால் இழுக்கப்பட்டு தம்முடைய சமூகத்தின் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டிருப்பது புரிந்தது. இவனுக்கு முழு நினைவு வந்ததும் இவனை இந்த சூழலில் வைத்துக் கொள்வது எப்படி என்ற கவலையில் ஆழ்ந்தார் அப்துல்லா.
அடுத்த நாள் பின்கட்டில் பிள்ளைகள், பெண்டுகளோடு கலந்து பேசினார். கிட்டத்தட்ட அந்த வீட்டின் அங்கத்தினராக ஆகி விட்ட அந்த இளைஞனுக்காக, அவன் நலனுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று கூடிப் பேசினார்கள்.
கொஞ்சம் நடமாட ஆரம்பித்த பரத்துக்கு அந்த சூழல் பழகி விட்டது. நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக் கொண்டு வேளா வேளைக்கு கஞ்சியும் பாலும் கொண்டு வந்து தரும் அன்பான பெண்மணி. வெள்ளை வேட்டியில் நேரம் தவறாமல் மருந்து கொடுத்து, இரவு தன் கட்டில் அருகே தரையில் படுக்கும் பெரியவர். நடுநடுவில் குசலம் விசாரித்து விட்டு, புன்சிரிப்புடன் படிக்க புத்தகங்கள் தந்து செல்லும் தன் வயதொத்த இளைஞன். எப்போதாவது நிழலாடும் அவன் மனைவியின் உருவம். “அங்க்கிள்! அங்க்கிள்!” என்று தன்னைச் சுற்றி வரும் அந்தப் பெண் குழந்தை. பழைய தெம்பு வந்து விட்டாற் போல் இருந்தது. நம்ப மனிதர்கள், மனிதர்கள் தாம். எத்தனை அருமையாகக் கவனித்துக் கொள்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.
டாக்டர் சொன்ன ஒரு வாரம் முடியப் போகிறது. அவரையும் இவன் எதிரில் வர வேண்டாம் என்று சொல்லியாகி விட்டது. ஹஃபீஸ் போய் சொல்லி மருந்து வாங்கி வருவதோடு சரி.
அப்துல்லா பெநுமூச்சு விட்டார். எப்படியோ, இந்தப் பையனுக்கு ஒரு மாற்றுச் சூழலை, அவன் விரும்பக்கூடிய சுற்றுப்புறத்தைத் தந்தாயிற்று. ஹாலில் இருந்த தோஹராவையும், மெக்கா படத்தையும் பரணில் வைக்கும்போது இந்த செயலுக்காக ‘அல்லா என்னை மன்னிப்பாராக!’ என்று மனமார வேண்டினார். இத்தனை வருடங்கள் கடைப்பித்த தொழுகை நியமத்தைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவன் தூங்கும் போது, மண்டியிட்டு, எல்லாருக்கும், அவனுக்கும் சேர்த்து, பிரார்த்தனை பண்ணுவதோடு சரி.
மனைவியைப் பார்க்கப் பெருமையாக இருந்தது அவருக்கு. அவன் முன் நடமாடும்போது சாதாரண புடவை அணிந்து எங்கேயோ கிடைத்த ஸ்டிக்கர் பொட்டு நெற்றியில் வைத்திருக்கிறாள். எத்தனை நெஞ்சுரம் அவளுக்கு. ஹஃபீஸ் கூட தாடியை மழித்து கொண்டு, குல்லாவை கழட்டிக் கைப்பையில் வைத்துக் கொண்டு வளைய வருகிறான். அவன் மனைவி வெளியே வருவதில்லை. அதனால் கவலை இல்லை. சின்னப் பெண் மட்டும் சளைத்ததா என்ன? அவன் பெயர் கேட்டபோதெல்லாம், ‘மெஹருன்னிஸா’ என்ற தன் பெயரை விட்டு விட்டு ‘பப்பு’ என்றே பல்லவி பாடிக் கொண்டிருந்தது.
கலவரமும் சற்று ஓய்ந்து, உடலும் தேறிய நிலையில் பரத் கிளம்பத் தயாரானான். எத்தனை நாட்கள் என்று கணக்கே தெரியாமல் தன்னை அன்புடனும் பாசத்துடனும் பராமரித்த அந்தக் குடும்பத்தை விட்டு பிரிவது அவனுக்கு மிகக் கடினமாக இருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. முன்னே பின்னே பார்த்திராதவர்கள் எத்தனை அன்பு காட்டினார்கள்? இவர்கள் என்னை கவனித்துக் கொண்டிராவிட்டால், நான் போன இடம் புல் முளைத்துப் போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
அவன் கிளம்பிய அன்று குழந்தை முகம் வாடிப் போனது. அப்துல்லாவுக்குக் கண்கள் கலங்கின. அவர் மனைவி மறைவாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிரியா விடை பெற்று வெளியே வந்தான் பரத். வெளியுலகத்தின் வெளிச்சம் அவன் கண்களை கூசச் செய்தது.
அவன் எதிரில், “என்ன அப்துல்லா? பையன் குணமாகி விட்டானா?” என்று விசாரித்துக் கொண்டு வந்த டாக்டர் சையது, அப்துல்லாவைத் தழுவி, “சலாம் அலைக்கும்” என்று முகமன் கூற, அப்துல்லா அவரை அணத்து, “அலைக்கும் சலாம்” என்று வந்தனம் கூறினார். ஒரு நிமிடம் உறைந்து போன பரத்துக்கு உண்மை சம்மட்டியடி போல விளங்கிற்று. அவன் அப்துல்லாவைப் பார்த்த பார்வையில் பிரமிப்பு மேலோங்கி இருந்தது. அப்துல்லா அவன் கண்களை சந்திக்க முடியாமல் கீழே குனிந்த போது தான், அதே வாசற்படியில் அந்த இளைஞன் தடாலென்று விழுந்தான் அப்துல்லாவின் காலடிகளில், “ஹரே ராம்!” என்று அலறியபடி