
“அப்பா!! சனைடுன்னா என்னப்பா?” என்று பாலுவின் அருகில் வந்து கேட்டான் அஸ்வின். அஸ்வினுக்கு ஏழு வயது ஆகிறது. மூன்றாம் வகுப்பு. படுசுட்டி. நன்றாக வரைவான். அவன் கையில் ஒரு கிழிந்த பேப்பரின் துண்டு இருந்தது. அதில் ‘சயனைடு’ என்றும் ஏதோ ‘தீவிர’…என்பதுடன் கிழிந்தும் இருந்தது.
“இந்தமாதிரி குப்பையெல்லாம் எங்க இருந்து அஸ்வின் எடுக்கற. பேட் ஹாபிட்…. சரி சரி..அது சனைடு இல்ல சயனைடு…அப்படின்னா அது விஷம்….அதாவது கெட்டது” என்றான் பாலு. தனியார் பாங்கில் மேனேஜர் ஆக இருக்கிறான்.
“கெட்டதா…அப்படின்னா கசப்பா இருக்குமா? “ என்று திருப்பிக்கேட்டான் அஸ்வின். அப்போது அங்கே வந்த பாலுவின் மனைவி அகல்யா ,
“டேய் நீ போய் படி…நான் அப்பாகூட பேசணும்” என்றாள். அகல்யா ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறாள்.
“அம்மா, நான் வந்தவுடனே ஹோம்வொர்க் முடிச்சிட்டேனே” என்றான் அஸ்வின்.
“அப்ப ஏதாவது வரைடா…போடா பெரிய மனுஷா” என்றாள் அகல்யா.
“அவன் அறிவா ஏதோ கேட்கிறான். அதை ஏன் தடுக்கிற?” என்றான் பாலு. அவனை முறைத்த அகல்யா “சரி அவனுக்கு பதில் சொல்லி அனுப்புங்க” என்றாள்.
“அஸ்வின்… அது கெட்ட விஷம் இல்லையா. செம்ம கசப்பா இருக்கும். சாப்ட்டா அவ்வளவுதான்” என்று சொல்லி கண்ணை முழித்து நாக்கை நீட்டி ஒருமாதிரி முகத்தை காட்டினான் பாலு. அதைப்பார்த்து சிரித்த அஸ்வின் பதில் கிடைத்த திருப்தியாய் தன் டேபிளுக்கு போய் வரையும் நோட்டு, கலர் எல்லாம் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான்.
“அறிவாளி சார்… இப்ப நாம பேசலாமா?” என்றாள் அகல்யா.
“என்ன கிண்டலா பேசற… நான் சொன்னது தப்பா? “ என்றான் பாலு.
“பின்ன என்ன, சயனைடு என்னமாதிரி டேஸ்ட் இருக்கும்னு யாருக்குமே தெரியாது. வாயில் பட்டாலே அவ்வளவுதான். ஆள் காலி. எல்லாம் தெரிஞ்ச மாதிரி…”
“அட அப்படியா… சரி சரி அதைவிடு…ஒண்ணும் முக்கியமில்லை…. நீ ஏதோ பேசணும்னு சொன்னியே…’ என்று அசடு வழிந்தபடி பேச்சை மாற்றினான் பாலு. அதற்குள் அங்கே ஓடி வந்த அஸ்வின் ,
“அப்பா…நான் பேர்ட்ஸ் வரையறேன். என்ன பேர்ட்ஸ்.. பேர் சொல்லுங்க…” என்றான்.
“டேய் அஸ்வின்… நீ நினைக்கிறதெல்லாம் வரை…கொஞ்ச நேரம் இங்க வரவேகூடாது…ஓடு” என்று கத்திய அகல்யா, பாலுவை பார்த்து பேசினாள்.
“நீங்க என்ன முடிவு செய்திருக்கீங்க… அடுத்த வாரம் கிரகப்பிரவேசம் பத்தி”
“அதான் எல்லாருக்கும் பத்திரிக்கை குடுத்தாச்சு. இன்னமும் பர்னிச்சர்ஸ், திங்க்ஸ் எல்லாம் வந்திடும்.. இப்பவே அங்கங்கே அரேஞ்ச் பன்ணிட்டு முழு நிறைவா போக வேண்டியதுதான். என்ன இப்ப?” என்றான்பாலு.
“தெரியாத மாதிரி பேசாதீங்க. மாமாவையும் அத்தையையும் என்ன பண்றதா உத்தேசம். இன்னமும் யோசிக்கலையா நான் சொன்னதை” என்று முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு கேட்டாள் அகல்யா.
அகல்யாவுக்கு ஆறு வயது இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். அப்பாவும் அண்ணனும்தான் அகல்யாவை வளர்த்தார்கள். அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறான். அப்பா இரண்டாண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அம்மா இல்லாமல் வளர்ந்ததால் மாமனார் மாமியாரை தன் சொந்த அப்பா அம்மாபோல பாசம் காட்டி தன் இழப்பை ஈடு செய்துகொண்டிருந்தாள்.
“அகல்யா… நான் முடிவு செய்தது செய்ததுதான். அவங்களுக்கு இப்ப என்ன குறை? இந்த வீடு முழுக்க அவங்களுக்குதான். ஏன் நான் நினைச்சிருந்தா இந்த வீட்டையும் வித்துட்டு, அந்த காசையும் வச்சுக்கமாட்டேனா. ஏதாவது விடுதியில் அவங்களை தங்க வச்சுருப்பேனே. அதையெல்லாம் நான் செய்யலையே… எனக்கு ஒரு தனிவீடு. அங்க நீ, நான் நம்ம குழந்தை…இப்படி ஒரு பிரைவஸியான வாழ்க்கை என் கனவு. இவங்களுக்கு என்ன செய்யணுமோ அதை நான் தவறவிடப்போவதில்லை. சும்மா என்னை போட்டுக்குழப்பாதே” என்றான் பாலு.
பாலுவின் சிறுவயது கனவு, ஒரு பெரிய வீடு, அதை சுற்றி தோட்டம் இப்படி. இப்போது இருக்கும் வீடு அவன் அப்பா கட்டியது. தனியார் கம்பெனியில் கணக்கராக இருந்து சிறுக சிறுக சேர்த்து கட்டினார். ஒரேமகன் என்பதால் பாலுவுக்கு எழுதிவைத்துவிட்டார். கொஞ்சம் சிறுவீடு என்றாலும் நல்ல விலைக்கு போகும்.
பாலுவின் அப்பாவுக்கு ஆஸ்துமா உண்டு. அதில்லாமல் அடிக்கடி இருமிக்கொண்டே இருப்பார். அவன் அம்மாவுக்கு ஓடியாடி வேலை செய்யமுடியாது. யாராவது வந்தால் அவர்களை பார்க்கும்போது தனது ஸ்டேட்டஸ் குறைவதாக பாலுவுக்கு ஒரு எண்ணம்.
“ நீங்க பேசறது முறையா மிஸ்டர் அறிவாளி சார்? அவங்களுக்கு நீங்க தேவையான பணம் குடுக்கலாம். வேலைக்கு ஒரு ஆளைகூட வச்சுத்தரலாம். ஆனால் ஒரே சொந்த மகனையும், பேரனையும் பிரிஞ்சு இருப்பது அவங்களுக்கு எவ்வளவு சித்ரவதையா இருக்கும்னு தோணவேயில்லையா உங்களுக்கு?”
“அகல்யா, நீ ரொம்ப யோசிக்கற… அதெல்லாம் அவங்க புரிஞ்சுப்பாங்க. என்ன, ஒரு போன் பண்ணினா முக்கால் மணி நேரத்தில் காரை எடுத்து வந்து பார்த்துட்டுப்போறோம். அவ்வளவுதானே. நீ இன்னமும் அவங்ககிட்ட சொல்லலியா…?” என்றான் பாலு. அவன் முடிவில் மாற்றம் ஏற்படுவதாக தோன்றவில்லை.
“ஓ… அதை சொன்னால் அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு தெரிஞ்சுதானே என்னை சொல்லச்சொல்றீங்க… அவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு அவங்க மனசு ஏன் புரியமாட்டேங்குது?” என்றாள் அகல்யா.
“அப்படியெல்லாம் இல்லை…சரிவிடு…இன்னிக்கு நானே சொல்லிடுறேன்” என்று பாலு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஆட்டோ சத்தம் கேட்டது. வெளியில் இருந்து பாலுவின் அம்மாவும் அப்பாவும் இறங்கி வந்தார்கள்.
“அப்பா…எங்க போனீங்க… உங்ககிட்ட…” என்று பாலு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அருகில் வந்த பாலுவின் அம்மா அவன் நெற்றியில் விபூதியை வைத்து விட்டார். பாலுவின் அப்பா பேசினார்.
“பாலு…கோயிலுக்கு போனோம். அப்படியே புரோக்கர் சுரேஷை பார்த்து இந்த வீட்டை வாடகைக்கு விடறதை பத்தி பேசினோம். உன்னை பேசச்சொன்னார்…இரு, முகம் கழுவிட்டு வரேன்” என்று உள்ளே சென்றார்.
பாலு திருதிருவென்று முழிக்க, அவன் அருகில் அஸ்வின் வரைந்த நோட்டுடன் வந்தான்.
“அப்பா…இதோ பாருங்க…இது மயில் ..அம்மா, இது அப்பா மயில். இந்த குட்டி புறா வந்து அவங்க குழந்தை. அது புதுசா எவ்ளோ பெரிய கூடு கட்டிருக்கு பாருங்க. அந்த குழந்தை கூடவே அதுக்கு ஒரு ஃப்ரெண்டு…வாத்து. வாத்துவும் புறாவும் அவங்க கட்டின பெரிய கூட்டுக்கு போறாங்க. இந்த அப்பா மயிலும் அம்மா மயிலும் அதே பழைய கூட்டிலேயே இருந்தாங்க” என்று கதை கதையாய் சொல்லிக்கொண்டிருக்க, பாலுவின் முகம் இருண்டுபோனது.
“தங்கம்… சரி நீ போய் தாத்தா பாட்டி கூட விளையாடு” என்ற அகல்யா பாலுவைப்பார்த்து, “சார்…விஷம் வேலை செய்யுது” என்று சிரித்தாள்.
“அந்த மயில் எங்க அப்பா அம்மாவா?” என்றான் பாலு.
“அஸ்வின், அந்த புறா யாரு?” என்று இங்கிருந்தே கேட்டாள் அகல்யா.
“அம்மா அது நானு…நான்தான் புறா…குண்டா வருமே என் ஃப்ரெண்டு விஷாலி அதான் வாத்து…நீயும் அப்பாவும் மயில்” என்று ஒரே போடாக போட, அடக்கமுடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள் அகல்யா. வியர்த்துக்கொட்டியது பாலுவுக்கு. உள்ளே அப்பா இருந்த அறையை நோக்கி கத்தினான்.
“அப்பா, அந்த புரோக்கர் சுரேஷ் நம்பரை கொடுங்க…பேசி முடிச்சிடலாம்”
*********