“கிர்ர்ர்ர்ர்”
“கிர்ர்ர்ர்ர்”
காலிங்பெல் அழைப்பு ஒலி கேட்டு பத்மா வந்து கதவை திறந்தார்.
வெளியே அவரது கணவர் மணிவண்ணன் நின்று கொண்டிருந்தார்.
கதவை திறக்கவும் “உம்” என்ற முகத்தோடு நின்று இருந்த மணிவண்ணன் ஏதும் பேசாமல் நேரே சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டார்.
பின்னர் குளித்து தயார் ஆகி வந்து சோபாவில் அமர்ந்தார்.
தன்னை சூழ்ந்த அமைதியில் இருந்து தப்பிக்க டிவியை ஆன் செய்து கொண்டார்.
காலேஜ் விட்டு வந்திருந்த காவ்யா மாடியில் இருந்த தன் அறையில் இருந்து தலையை நீட்டி யார் என்று பார்த்து விட்டு உள்ளிழுத்து கொண்டாள்..
பத்மா சமையலறை சென்று காபி தயாரித்து கொண்டு வந்து மணிவண்ணன் எடுத்து கொள்ளும் வகையில் அருகே வைத்து விட்டு கணவர் எதுவும் பேச மாட்டாரா என்று எதிர்பார்த்து நின்றார்.
பத்மா அங்கேயே நிற்கவும், கடுகடுத்த முகத்தோடு காபியை பருகாமல் போனை எடுத்து யாருக்கோ டயல் செய்து விறுவிறுப்பாக பேச தொடங்க,
பத்மா இதற்கு மேல் இங்கேயே நிற்பது வீண் வேலை, அதோடு காபியும் அருந்த மாட்டார் என்று புரிந்து சமையலறை சென்று கிரைண்டரில் மாவு அரைக்கும் வேலையை தொடர்ந்தார்..
ஒரு வாரமாக வீடு இப்படி அமைதியாக தான் இருக்கிறது..
மணிவண்ணனுக்கு ப்ரைவேட் கம்பெனியில் அக்கௌன்டன்ட், பத்மா வீட்டை கவனித்து கொள்வார். ஒரே பெண் காவ்யா பி.எஸ்.சி பயோலஜி இரண்டாவது ஆண்டு படிக்கிறாள்.
எப்பொழுதும் இவர்கள் இப்படி அமைதியோடு இருப்பவர்கள் இல்லை. வீடு எந்நேரமும் கலகலப்புடன் இருக்கும்.
ஒரு ஐடியல் பேமிலி என்று கூறும் படி இருந்தவர்கள் தான் கடந்த வார கடைசியில் நடந்த விஷயங்களால் வீ ரெண்டாக துண்டாகி இருக்கிறார்கள்..
அப்படி என்ன நடந்தது என்று பார்க்கும் முன்,
மணிவண்ணனின் செல்போன் ஒலித்தது.. காலி காபி டம்ளரை வைத்த படியே, செல்போனை எடுத்து யார் என்று பார்த்தார்.
திரையில் அவரது நண்பர் கார்மேகம் பெயர் ஒளிர்ந்தது..
போனை எடுத்து காதில் ஒத்திய படியே, செருப்பை எடுத்து போட்டு கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பினார்..
செருப்பை எடுக்கும் சத்தம் கேட்டு வேகமாக சமையலறை விட்டு வெளியே வந்த பத்மா,
“என்னங்க, எங்க கிளம்பிடீங்க “
என்று குரல் கொடுக்க,
குரல் கேட்டும் கேளாதவர் போல் வேக நடை போட்டு கிளம்பினார் மணிவண்ணன்.
“ச்ச்சா ” என்று சத்தத்தில் தன் இயலாமையை வெளிக்காட்டினார் பத்மா.
கீழே வந்த காவ்யா,
“என்னமா, இன்னும் அப்பாக்கு கோபம் போகலையா “
என்று அம்மாவை பார்த்து கேட்டாள்.
“அப்படி அவர் மாறினா அது பகல் கனவா தான் இருக்கும். அந்த மனுஷன் பேசி ஒரு வாரம் ஆகுதுடி, எனக்கு என்னவோ போல இருக்கு. இந்த மனுஷன் கல்லு மாதிரி நடந்துக்கறாரு “
என்று தன் மனவேதனையை கூறினார் பத்மா.
“இன்னைக்கு நானும் பேசிடலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள எப்போவும் போல கிளம்பிட்டார். இனி நான் சாப்பிட்டு தூங்குன பிறகு தான் வருவார்.”
என்று தன் மனதை வருத்தத்துடன் கூறினாள் காவ்யா.
இன்னைக்கு வரட்டும் எப்படியும் பேசி பிரச்சனையை முடித்து விடுவோம் என்று இருவரும் பேசி கொண்டே பிற வேலைகளை கவனிக்க தொடங்கினார்கள்.
************
மணிவண்ணன் போனில் பேசி கொண்டு நடந்த படியே அண்ணல் அம்பேத்கர் பூங்கா வந்து சேர்ந்தார்.
அங்கே..
சிறிய தண்ணீர் பௌண்டைன்க்கு சற்றே தள்ளி கிடந்த சிமெண்ட் பெஞ்சில் வழக்கம் போல் அமர்ந்து கொண்டார்.
நண்பர் கார்மேகம் முன்னர் குடி இருந்த வளாகத்துக்கு அருகில் குடி இருந்தவர்… மணிவண்ணனுக்கு மிகவும் பழக்கம், தற்சமயம் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு அருகில் வீடு பார்த்து மணிவண்ணன் இடம் மாறி விட்டார்..
பிறகு கால போக்கில் போனில் பேச நேரம் கிடைப்பதே பெரிதாகி போனது..
இன்னமும் போனில் கார்மேகம் உரையாடி கொண்டிருக்க, மணிவண்ணன் மனதில் இருந்த சுமை அழுத்தம் கொடுக்க உரையாடலை தொடர முடியாது தடுமாறினார்.
போனில் இதை கண்டுகொண்ட கார்மேகம்,
“மணி, நீ இப்போ எங்கே இருக்க?. உன்னை கொஞ்சம் பார்க்கணும்.”
“இப்போ வீட்டுக்கு பக்கதுல இருக்க அம்பேத்கர் பூங்கால இருக்கேன் “
மேலும் தொடர்ந்து,
“இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பேன், முடிஞ்சா வாங்க பார்க்கலாம்.”
என்றார் மணிவண்ணன்.
அவருக்கும் மனசுமையை யாரிடமாவது பகிர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
கார்மேகம் வந்து சேர்வதற்கு சில நிமிடங்கள் பிடித்தது…
இந்த இடைவெளியில் கடந்த வாரம் நிகழ்ந்தவை மனதிற்குள் ஓடின…..
ஞாயிறுக்கிழமை அன்று ….
காலை உணவு முடித்து வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார் மணிவண்ணன்.
மதிய சமையல் தயார் செய்வதில் முனைந்து இருந்தார் பத்மா. காவ்யா கல்லூரி பாடங்களில் இருந்த வேலையை செய்து கொண்டிருந்தாள்.
அந்நேரம் அழைப்பு மணி ஒலி கேட்டு கதவை திறந்த மணிவண்ணனுக்கு ஆச்சர்யம் தாளவில்லை.
வெளியே அவரது அக்காவும் அக்கா கணவரும் நின்று இருந்தார்கள்..
உற்சாகம் பொங்க உள்ளே அழைக்க,
பத்மா மற்றும் காவ்யாவும் விரைந்து வந்து அழைத்து உபசரிக்க தொடங்கினார்கள்.
மணிவண்ணனுக்கு ஒரே அக்கா மஞ்சுளா, குடும்பத்தோடு சேலத்தில் வசித்து வருகிறார்..
“போன்ல பேசுறப்போ கூட சென்னை வருவதாக சொல்லவே இல்லையே “
என்று மணிவண்ணன் கேட்க,
“அது வந்து தம்பி, ” என்று
தயங்கியவர் சொன்ன விஷயத்தின் சராம்சம் இது தான், அவர்களுக்கு ஒரே மகன். படித்து விட்டு ஒரு வேலையில் இருக்கிறான். அவனுக்கு பெண் கேட்டு வந்திருந்தார், அதோடு உடனே திருமணம் நடத்தி விட வேண்டும் என்றும் வேகம் காட்டி பேசினார்.
விவரமாக கேட்ட பொழுது, மகனுடைய ஜாதகத்தை பார்த்த பொழுது திருமண யோகம் கூடி உள்ளது என்றும் விரைவில் திருமணம் நடத்த தவறினால் பிறகு நீண்ட வருடம் பொறுத்தே நடைபெறும் என்றும் கூறியதாக சொல்லி முடித்தார் மஞ்சுளா.
மணிவண்ணனுக்கு ஜாதகம், ஜாதி மதங்கள் மற்றும் கடவுள் மீதோ நம்பிக்கை கிடையாது.
தன்னுடைய குடும்பத்தில் எந்த மூட நம்பிக்கையும் ஆட்சி செய்ய முடியாத படி கவனமாக இருந்தார்.
ஆனால் இவரை வளர்த்த சகோதரி கேட்கும் பொழுது தடுமாறி நின்றார்…
மேலும் தொடர்ந்து மஞ்சுளா,
இப்பொழுது அவனுக்கு சரியான வேலை இல்லைனு நினைக்க வேண்டாம், திருமணத்திற்கு பிறகே நல்ல வேலை, பொறுப்பான பிள்ளை என மாறி விடுவான் என்றும் கூறி மணிவண்ணனை யோசிக்க விடாமல் பேசினார்.
மணிவண்ணனுக்கு அக்காவும் அவர் மீது இருந்த பாசமும் கண்ணை மறைக்க, பத்மாவிடமோ காவ்யாவிடமோ ஒரு வார்த்தை கூட கேட்க தோன்றவில்லை.
இவரின் அமைதியை சம்மதம் என்று எண்ணி கொண்டு மஞ்சுளா வளர்பிறை தேதியில் வந்து நிச்சயம் செய்து கொள்வதாக சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.. மணிவண்ணன் மறுப்பு எதுவும் சொல்ல வில்லை. பெண்ணை கொடுக்க சம்மதம் தான் ஆனால் மஞ்சுளா சொல்லும் ஜாதக காரணம் தான் பிடிக்கவில்லை.
மஞ்சுளா கிளம்பவும்,
வீட்டில் பிரச்சனை வெடித்தது…
காவ்யா சம்மதம் இல்லை என்று பிடிவாதம் காட்ட, ஒரு வார்த்தை கூட கேட்க தோன்றவில்லையே என்று பத்மாவும் கடிந்து கொள்ள மணிவண்ணனுக்கு ஈகோ எகிறியது.
நான் எடுத்தது தான் முடிவு என்று வீம்பு காட்ட தொடங்கினார். ஒரு வாரமாக வீடு யுத்த பூமியாக உள்ளது….
இனி…
அம்பேத்கர் பூங்காவில்…
நண்பர் கார்மேகம் அருகே அமர்ந்து இருக்க மணிவண்ணன் வீட்டு பிரச்சனையை மேலோட்டமாக கூறினார்..
கார்மேகத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. மணிவண்ணனுக்கும் மஞ்சுளாகும் உள்ள சகோதர பாசம் அவர் அறியாதது அல்ல..
“மணி, நீ யோசிக்கிறது சரி தான், வீட்ல
என்ன காரணம் சொல்றாங்க “
“காவ்யா படிச்சி வேலைக்கு போய் சொந்த கால்ல நின்ன பிறகு தான் கல்யாணம்னு பிடிவாதம் பிடிக்கிறா”
என்றவர் மேலும் தொடர்ந்து,
“பத்மா பொண்ணுக்கு பரிஞ்சி பேசுறா, என் அக்கா வீட்டுக்குல அனுப்ப பார்க்கிறேன்.”
“நீ வீட்ல கலந்து பேசிட்டு அக்கா கிட்ட முடிவு சொல்லி இருக்கணும்”
என்று கார்மேகம் சொல்லவும்,
எங்கிருந்தோ வந்த அகங்காரம் மணியின் கண்களை சிவக்க வைத்தது.
“அவங்களுக்கு என்ன தெரியும் கார்மேகம், நாம கொடுக்குறது வாங்கி வைப்பாங்க, வாங்கி போடுறது சமைப்பாங்க, தருவதை உடுத்த போறாங்க. பொண்ணுங்களுக்கு என்ன தான் படிச்சாலும் உலக நடப்பு தெரியாது. நாம சொல்றது தான் கேட்டு நடக்கணும். அவங்க கிட்ட போய் நாம யோசனை கேட்குறதா , என்னப்பா சொல்ற நீ “
இப்படி ஒரு பேச்சை எதிர்பாராத கார்மேகம் என்ன ஒரு ஆணவ கலந்த பேச்சு என்று அதிர்ந்து போனார்…
ஆனாலும் தன் மனதில் தோன்றியதை சொல்ல தொடங்கினார் கார்மேகம்…
“மணி, நீ பெரிய சீர்திருத்தவாதினு இவ்வளவு நாளா தப்பா நினைச்சிட்டேன்., சும்மா பெரியார், அம்பேத்கர் வழியில் நடப்பேனு சொல்லிக்கிட்டு தப்பு பண்ற மணி.
சீர்திருத்தம், பகுத்தறிவு என்பது மூட பழக்கங்களை ஒழிக்கிறது மட்டும் இல்லை, சக மனுஷியை வாழ்க்கை துணைவியை மரியாதையோட நடத்தணும், அவங்க உரிமையை உபயோகபடுத்த விடணும்.”
மேலும் தொடர்ந்து,
“யாருக்கு கொடுக்குறமோ இல்லையோ மனைவி மனசுக்கு மரியாதை கொடுக்கணும், பொண்ணு படிச்சி சொந்த கால்ல நிற்கணும்னு சொல்றது எவ்வளவு நல்ல விஷயம் அதை புரிஞ்சிக்க தெரியலையே உனக்கு.
“உன் மேல் அன்பு உள்ள அக்கா, நீ எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க, இந்த காலத்திலேயும் கல்யாணம் பண்ணதும் பொறுப்பு வந்துடும், வேலை வந்துடும்னு சொல்றது வேடிக்கையா இருக்கு..
“எதிர்காலத்தில் பாதியில் விட்ட படிப்பு வச்சி காவ்யா என்ன செய்ய முடியும்.”
“ஒரு குடும்ப தலைவனின் தவறான முடிவு
சந்ததியையே பாதிக்கும் “
“இதற்கு மேல் உன் விருப்பம் ஆனால் தவறை திருத்தி கொள்ளாம, உன்னை நீயே பகுத்தறிவாளன்னு சொல்லிக்காத “
என்று சொல்லிவிட்டு மணியின் பதிலுக்கு கூட காத்திராமல் கிளம்பி சென்றார் கார்மேகம்.
மணியின் மனதில் இருந்த சுமையும் கிளம்பி இருந்தது.!!!
மனதை கிழிப்பது போல் இருந்தன ஒவ்வொரு வார்த்தையும்..
அதிலும்
“ஒரு குடும்ப தலைவனின் தவறான முடிவு சந்ததியையே பாதிக்கும்”
என்ற வார்த்தைகள் மணியின் மனதை பிசைந்தன…
புது உணர்வுடன் அக்காவை போனில் அழைத்தார்..
அழைத்து எடுத்து கூறி தேற்றியதோடு, பத்மாவை அழைத்தார்…
பக்தியும் பயமுமாக போனை எடுத்த பத்மா, மறுமுனையில் மணிவண்ணன் பேசிய பேச்சு கேட்டு இது வழக்கமாக வரும் கனவோ என்று தன்னை தானே கிள்ளி பார்த்து கொண்டாள்!!!!!
*********************************************************************