“மணி பத்தாகிவிட்டதே – இன்னும் பொன்னியை காணோமே – லீவ் கூட சொல்லலையே “ என்று நினைத்துக் கொண்டே பத்தாவது முறையாக பால்கனிக்குப் போய் பொன்னி வருகிறாளா என்று பார்த்தாள் ஜானகி. பொன்னி அவர்கள் வீட்டு வேலைக்காரி. பொன்னி அவளிடம் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் போல் ஆகிறது. அதற்கு முன் அவளிடம் வேலை பார்த்த தாயம்மாவிற்கு உடம்பு மிகவும் முடியாமல் போய்விட்டதால் மேல் வேலைக்கு சரியான ஆள் கிடைக்காமல் கிட்டத்தட்ட ஒரு மாதம் திண்டாட வேண்டி வந்தது.
அந்த சமயம் தான் பொன்னி அவளிடம் வேலை செய்ய வந்தாள். அதுவும் தவிர அவள் கணவன் ராமசாமிதான் அவர்கள் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் வாட்ச்மேனும் கூட என்பதால் கொஞ்சம் கவலை இல்லாமல் பொன்னியை வேலையில் சேர்த்துக் கொள்ள முடிந்தது.
பொன்னியை பார்த்தவுடனேயே யாருக்கும் பிடித்துவிடும். எப்பொழுதும் சிரித்த முகம். சுறுசுறுப்பாக தானே வேலையை எடுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் ரகம் என்பதால் ஜானகிக்கும் பொன்னியை ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால் அவள் வரும்போது தனக்கும் டீ போட்டுக் கொண்டு பொன்னிக்கும் பிஸ்கட்டுடன் ஒரு கப் தேனீர் கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது.
வேலைக்கு சேர்ந்து 2 மாதங்களுக்கு பின்பு ஒருநாள் பொன்னி வேலையை முடித்து வீடு கிளம்புமுன் அவளிடன் வந்து
“ அம்மா ! நாளைக்கு ஆஸ்பத்திரி போவோணும் – ஒரு நாள் லீவ் வேணும்” என்று சொல்ல ஜானகி
“ என்ன விஷயம்” என்று கேட்டவுடன் முகத்தில் வெட்கத்துடன் “அம்மா! நாள் தள்ளி போயிருக்கு.,அதான் பாத்து தெரிஞ்சுக்கலாம்னு ‘ என்று சொன்னாள்.
மறுநாள் பொன்னி வந்தவுடன் முகமெல்லாம் சிரிப்பாக வந்து கையில் ரெண்டு சாக்கலெட்டை வைத்து “அம்மா ! ஆஸ்பத்திரியில் உறுதி
பண்ணிட்டாங்க – 2 மாசம் ஆயாச்சு “ என்று சந்தோஷமாக சொன்னாள். ஜானகிக்கும் சந்தொஷம்தான். அதன்பிறகு முடிந்த அளவிற்கு பொன்னிக்கு பால் பழம் என்று கொடுத்து கவனித்துக் கொண்டாள்.
பொன்னிக்கு 8 மாதம் ஆனபிறகு அவளால் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்க முடியவில்லை. அதனால் ஜானகி அவளிடம்
“ பொன்னி ! நானே கொஞ்ச நாளைக்கு பாத்துக்கறேன். நீ இனிமே இவ்வளவு வேலை பார்ப்பது நல்லது இல்லை “ என்று சொல்லி விட்டாள். பொன்னி கொஞ்ச நேரம் யோஜித்துவிட்டு
“அம்மா! அக்காவை கேட்டுப் பாக்கறேன்,. அவுக இது மட்டும் வீட்டு வேலை எல்லாம் பண்ணினவக இல்லதான். . ஆனா எனக்கு முடிலேன்னா நிச்சயம் பண்ணுவாக – கொஞ்சம் மின்ன பின்ன இருந்தாலும் நீங்க கொஞ்சம் பாத்துகிடுங்க” என்று சொல்லிவிட்டாள்..
மறுநாள் கொஞ்சம் தாமதமாக பொன்னி சொன்ன அக்கா மரகதம் வந்தாள். முகம் களையாக இருந்தாலும் கொஞ்சம் தாட்டியான உடலமைப்பு. பொன்னி சிரித்த முகம் என்றால் மரகதத்துக்கு கொஞ்சம் மந்தமான முகம் என்றே சொல்லலாம்.. டீ கொடுத்தபொழுது கூட முகத்தில் ஒரு உணர்ச்சியும் காட்டாமல் வாங்கி குடித்துவிட்டு கப்பை கழுவி வைத்துவிட்டு
“நா வாரேன் அம்மா” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அதன்பிறகு அவள் அக்கா மரகதம்தான் வேலைக்கு வந்தாள். அவள்தான் பொன்னிக்கு ஆஸ்பத்திரியில் பெண்குழந்தை பிறந்த விவரமும் சொன்னாள். அவ்வப்பொழுது ராமசாமியை பத்தி ‘மாமா கொடுத்துவிட்டது” என்று கேட்டில் வாங்கி வைத்திருக்கும் கொரியர் லெட்டர் ஏதாவது கொண்டு வந்து கொடுப்பாள்.
ஒருவேளை இவர்கள் வழக்கம் அக்கா புருஷனை மாமா என்று அழைப்பார்கள் என்று நினைத்து கொள்வாள் ஜானகி.. குழந்தை பிறந்து 1 மாதம் ஆன உடனேயே பொன்னி வேலைக்கு வந்துவிட்டாள். குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கேட்டதற்கு
“அதான் அக்கா இருக்காங்களே ! “ என்று கூறிவிட்டாள். ஜானகி ‘அக்காக்கு குடும்பம் ஒண்ணும் கிடையாதா?” என்று கேட்டதற்கு, சிரித்துக்கொண்டெ
“நாம எல்லாம் ஒரே குடும்பம், அம்மா – எங்க கூடத்தான் அக்கா இருக்காங்க – இருப்பாங்க “ என்று சொன்னதும் , ஜானகி
“மரகதம் வீட்டுக்காரர் வெளியூர்லே இருக்காங்களா?” என்று கேட்டதும், பொன்னி கலகலவென்று சிரித்துக் கொண்டே “ ஏம் புருஷந்தான் அக்காக்கும் புருஷன் “ என்று சொன்னவுடன்
“இது என்னடா கூத்து?” என்பது போல் ஜானகி பொன்னியை பார்த்தாள். அப்போதுதான் பொன்னி முழுக்கதையையும் சொன்னாள்.
ராமசாமி இதற்கு முன் ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தான். மரகதமும் அங்கு செங்கல் அடுக்கும் வேலை பார்த்ததால் இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மரகதத்திற்கு பெற்றோர் கிடையாது. ஒரு பாட்டி மட்டுமே.
ராமசாமி தனக்கும் யாரும் இல்லை என்று சொல்லி திருமணம் செய்துகொண்டு குடும்பமும் நடத்தினான். ஆனால் அங்கு கன்ஸ்ட்ரக்ஷன் எல்லாம் முடிந்தவுடன் ஒருநாள் சொந்த ஊரில் ஒரு வேலை இருக்கிறது என்று சென்ற ராமசாமி திரும்பி வரவேயில்லை.
அவனைப் பற்றி யாரிடம் கேட்டாலும் தெரியவில்லை. அத்தனை பெரிய சென்னையில் அவனை எங்கு தேடுவது என்று தெரியாமல் மரகதம் நிலை தடுமாறினாலும் ராமசாமியைத் தேடிக்கொண்டேதான் இருந்தாள்..
ஆனால் ராமசாமியோ சென்னையின் மற்றோரு மூலையில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்து விட்டான். பொன்னியும் அங்குதான் வேலை பார்த்தாள். அது எப்படியோ ராமசாமியை பார்க்கும் பெண்களுக்கு அவனை பிடித்துவிடும் போல.
அதேமாதிரி இருவருக்கும் மனம் பிடித்துப் போய் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் பொன்னியின் அண்ணன் அந்த பேட்டை ரௌடி என்பதால் அவனிடம் சம்மதம் கேட்க இருவருக்கும் கொஞ்சம் தயக்கம். ஆனால் எப்படியோ சம்மதம் வாங்கி திருமணமும் முடிந்து பொன்னியுடன் கூட அழகான குடித்தனம்.
சம்பளம் அதிகம் என்பதால் ஜானகி இருந்த அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் வேலைக்கு சேர்ந்து விட்டான். பொன்னிக்கும் கம்பெனி அதிகம் தூரம் என்பதால் அவளும் அந்த காம்ப்ளேக்ஸிலேயே வேலை தேடிக் கொண்டாள். வயிற்றில் 6 மாச குழந்தை என்று குடும்பம் அழகாக போய் கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது
ஒரு நாள் இரவு ராமசாமியும் பொன்னியும் சாப்பிட உட்காரும்போது கதவு தட்டும் ஓசை கேட்டு கதவு திறந்தால் அங்கு கண்ணீரும் கம்பலையுமாக மரகதம்.. எங்கெல்லாமோ விசாரித்து ராமசாமியைக் கண்டுபிடித்து வந்து விட்டாள்., கூட அவள் பாட்டியும்.
மரகதத்தை எதிர்பார்க்காத ராமசாமியோ முழிமுழி யென்று முழிக்கிறான். பாட்டி அவன் சட்டையை பிடித்து “ நீ எங்கே ஒழிஞ்சிண்டாலும் நாங்க கண்டு பிடிப்போம்டா – என் பேத்திக்கு வழி சொல்லு – இல்லை போலிசுக்கு போவேன் என்று கத்த , பொன்னி முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தாலும் , பிறகு சமாளித்துக் கொண்டு
“ஆயா! உக்காரு மொதல்லே தண்ணி குடி – ஏதும் பேசித் தீர்த்துக்கலாம்” என்று சொல்லி அவங்களை சமாதானப் படுத்தி முதலில் வீட்டில் இருந்ததை சாப்பிட கொடுத்து விஜாரித்தாள். விஷயம் கேட்டவுடன் முதலில் அவளுக்கும் ராமசாமியை கொன்று விடலாம் போல் தான் கோபம் வந்ததாம்.
ஆனால் கோபித்து பயனில்லை என்றும் அவளுக்கு தெரிந்ததால் எல்லோருமாக பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். முதலில் அதிர்ச்சியில் இருந்தா ராமசாமி பின்னர் சமாளித்துக் கொண்டு மரகத்திடம்
“நீ ஆயா கூடவே இரு. நான் அப்பப்ப வந்து ஒன்னிய கண்டுண்டு போறேன்” ன்னு சொன்னதைக் கேட்டு கதறி அழத் தொடங்கிய மரகதத்தை சமாதானப் படுத்திய பொன்னி , ராமசாமியைப் பாத்து
“அக்கா கூடத்தான் நீ இருக்கோணும். நான் எங்க வீட்டுக்கு போறேன். ஆனால் என் அண்ணாத்தையை நெனச்சாதான் பயமா இருக்கு. இதெல்லாம் கேட்டா அவன் ஒன்னை கொன்னே போட்டுடுவான்” என்று சொல்லி தன் துணிமணிகளை எடுக்க தொடங்கினாள்., அப்போதான் அசடு மாதிரி இருந்த மரகதம் வாயைத் திறந்தாள்.
“பொன்னி ! நீ எதுக்கு போகணும்? போகணும்னா நம்ம ரெண்டு பேத்தையும் ஏமாத்தின இந்த ஆளுதான் போகணும். . நீ இங்கேயே இரு , நீ முழுகாம வேற இருக்கே“ என்றாள். அதைக் கேட்ட ராமசாமி என்ன சொல்றதுன்னு புரியாம மலங்க மலங்க விழிக்க , அவனைப் பார்த்த பொன்னிக்கு அவன் மேல் கோபத்தைவிட பரிதாபம் தான் அதிகம் வந்தது.
பொன்னி ஒரு முடிவுக்கு வந்தது போல் ‘அக்கா நீ சொல்றதுதான் சரி. நாம ரெண்டு பேத்துக்கும் இந்த வீடுதான். நீயும் கல்யாணம் பண்ணி வந்திருக்கே – நானும் அது மாதிரிதான் வந்திருக்கேன். ரெண்டு பேத்தையும் கவனிக்க வேண்டியது இவங்கதான்” என்று சொல்லி பாட்டியை பார்க்க, பாட்டியும் ஏதோ நம்ம பேத்திக்கும் ஒரு வாழ்வு கிடைக்கிறதே என்று தலையை ஆட்டிவிட்டு , உடனே கிளம்பி விட்டாள்.
அது என்னவோ ராமசாமியின் அதிருஷ்டம் அவன் மணம் செய்த ரெண்டு பேரும் ரொம்ப ஒத்துமை. பொன்னி வெளியில் வேலைக்கு பொகும் முன்னே சமைத்து வச்சுட்டா, மத்த வேலையெல்லாம் பார்ப்பது மரகதம். அதுவும் குழந்தையை தன் குழந்தை போல பார்த்துக் கொள்வது மரகதம் என்பதால் பொன்னிக்கும் வெளியில் வேலை பார்ப்பது ரொம்ப சுலபமாக இருந்தது.
இந்தக் கதையெல்லாம் கேட்ட ஜானகிக்கு ஏதோ சினிமாகதை கேட்பது போல்தான் இருந்தது. எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடியும். ஆனா புருஷனை எப்படி பகிர்ந்துக்க முடியும் என்று கேட்ட ஜானகியைப் பாத்து சிரித்தாள் பொன்னி அதன்பிறகு அவள் சொன்னது ஜானகியை ரொம்ப யோஜிக்க வைத்தது.
“அம்மா ! எம் புருஷன் பண்ணினது தப்புதான். ஒரு பெண்ணை அம்போன்னு விட்டுட்டு இன்னோரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கறது ரெண்டு பேத்துக்கும் பண்ணற துரோகம்தான். எனக்கும் முதலில் கோபம்தான் வந்தது.
ஆனா அப்புறம் யோஜிச்சு பாத்தா நா வெளியிலே போனா எங்குழந்தை தகப்பன் இல்லாம வாழோணும். அக்காக்குதான் மொத உரிமை – ஏன்னா அதுதான் மொதல்லே கழுத்திலே தாலி வாங்கித்து. எம் புருஷன் பண்ணின தப்புக்கு நானோ அக்காவோ ஏன் கஷ்டப் படணும்.
ராமாயணத்திலே தசரத மகாராஜாக்கு மூணு பொண்டாட்டி இல்லியா – அதே மாதிரி இருந்துட்டு போறோம்னு நெனச்சுட்டேன். அக்கா சண்டை போட்டு எம் புருஷனை கூட்டி போயிருக்கலாம். ஆனா அதுக்கு எவ்வளவு நல்ல மனசு பாருங்க.
நான் மாசமா இருக்கேன்னு பாசமா எங்கிட்டே இருந்தது அம்மா ! நாங்க ஏழைங்க – எங்களுக்கு கௌரவம், கோவம் பாக்கமுடியாது, எது எல்லாத்துக்கும் சந்தோசமோ அதத்தான் பாக்கணும் இப்ப பாருங்க – நான் வேலக்கு வாரேன். அக்கா கொழந்தயை பாத்து வூட்டையும் பாத்துக்கறது. இத விட என்ன வோணும்மா?” என்று சொன்னதக் கேட்ட ஜானகி உடனே மனஸிலே வந்ததை கேக்கலாமா – வேண்டாமான்னு யோஜிச்சு கேட்டே விட்டாள் –
“ஆமாம் – ஒம் புருஷன் யாரோட படுத்துப்பான்?” னு. பொன்னி கலகலன்னு சிரிச்சுட்டு “ அம்மா ! மொதல்லே நாங்க ரெண்டு பேத்தும் அதுக்கு எடம் கொடுக்காம இருக்கோணும்னுதான் நெனச்சோம். ஆனா அப்புறம் யோஜிச்சா ஆம்பள புத்தி பாருங்க – வீட்டிலே கெடக்கலேன்னா ஊர் மேய ஆரம்பிச்சோடும்.
அதான் அது எப்பவாவது குடிச்சுட்டு வர நாளிலெ நாமள்ள ஆரு கண்ணிலே படறொமோ அது மேல கை போடும். மத்தவ வெளிலே போயிடுவோம். அக்கா எனக்கு ரெண்டு பேத்துக்கும் புருஷன் வேணாம். ஆனா அதுக்கு வேணும்னா கொடுத்துடுவோம்” ஜானகிக்கு கேக்க கேக்க ஒரே ஆச்சரியம்.
வாழ்க்கையைத்தான் இவங்க எவ்வளவு எளிதா வாழறாங்க – நாமதான் ஈகோ அது இதுன்னு வாழ்க்கையை வீணடிச்சிக்கறோமான்னு நினைப்பு அவளுக்கு வந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். அவள் சிரிப்பதைப் பாத்து பொன்னியும் சிரித்துக் கொண்டெ
“அம்மா ! எங்களுக்கெல்லாம் இன்னித்து சோறு தான் முக்கியம். நாளைய பத்தி ரோஜனை பண்ணினா பொழப்பு ஓடாது” சொல்லிக்கொண்டே டீயை குடிச்சுட்டு கிளம்பிட்டா.
பொன்னியைப் பத்தி யோஜனையிலிருந்து வாசல் காலிங்க் பெல் ஓசை எழுப்பியது. கதவைத் திறந்தால் கண்ணும் கண்ணிருமாக பொன்னி.
. ”அம்மா .! எம் புருஷனை ஆஸ்பத்திரியிலெ சேத்திருக்கு. ராத்திரி குடிச்சுட்டு வந்தவரு அப்படியே கீழே படுத்துட்டாரு. நானும் அக்காவும்தான் ஆஸ்பத்திரிலே சேத்தோம் என்னவொ ஐக்யூ விலே வச்சுருக்காங்க,. மூக்கிலே கொழாயெல்லாம் சொருகியிருக்கு. ரொம்ப பயமாருக்கும்மா – ஒங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன். “ என்றவளை ஜானகி சமாதானம் படுத்தி , டீ போட்டு கொடுத்தாள் .
அதைக் குடிச்சுட்டு வேலை பாக்க ஆரம்பிச்ச பொன்னியை தடுத்தி நிறுத்திய ஜானகி
“வேலையெல்லாம் பண்ண வேண்டாம் – குழந்தை எங்கே?” என்று கேட்க,, பொன்னி அழுதுகொண்டே “ அக்கா கிட்டேதான் இருக்கு – ஆஸ்பத்திரிக்கு வெளிலே ஒக்காந்திருக்கு” என்று சொல்ல , ஜானகி ஒரு ஃப்ளாஸ்கிலே டீ, பிஸ்கட் பாக்கெட் ரெண்டும் ஆயிரம் ரூபாய் பணமும் எடுத்து பொன்னி கையில் கொடுத்து
“குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகாதே – யாராவது ஒருத்த்ர் வீட்டிலேயும் இன்னோருத்தர் ஆஸ்பத்திரியும் பாத்துக்கங்க – வேலைக்கு வரவேண்டாம் –ஆனா ராமசாமி எப்படி இருக்கான்னு விவரம் மட்டும் சொல்லி அனுப்பு “ என்று சொல்லி அனுப்பிவிட்டு வேலையை ஆரம்பித்தாள்.
ஜானகிக்கு அப்பப்ப வந்த தகவல் பிரகாரம் ராமசாமி இரண்டு நாள் ஐசியூ வில் இருந்து விட்டு பிறகு பொது வார்ட்க்கு கொண்டு வரப்பட்டான். அதன்பிறகு ஒரு வாரத்தில் வீட்டுக்கு வந்துவிட்டான். உடல் நிலையும் ஓரளவு தேறிவிட்டது என்று கேள்வி பட்டுக் கொண்டிருக்கும் பொழுதே பொன்னி வேலைக்கு வந்து விட்டாள்.
ஆனால் அவள் கூடவே கொஞ்சம் கருத்த நிறத்தில் தாட்டியாக நடுத்தர வயது பெண்மணியும் வந்து கை கூப்பினாள். சரியான கிராமத்து பெண்மணி என்பது புடவைக் கட்டிலிருந்து தெரிந்தது. ஜானகி இது யார் புதிதாக என்று பொன்னியைப் பார்த்ததும், பொன்னி ஒரு சின்ன சிரிப்புடன்
“அம்மா – இது சின்னத்தாயி அக்கா – எங்க மூத்தாள்” என்று சொன்னதைக் கேட்டதும் ஜானகிக்கு மயக்கமே வந்துவிட்டது என்று சொல்லலாம். இருந்தாலும் பொன்னியிடம் தனியாக கேட்டுக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு பேசாமல் இருந்துவிட்டாள்.
அவர்கள் இருவருக்கும் டீயும் பிஸ்கட்டும் கொடுத்துவிட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டாள். நடுவில் அந்த பெண்மணி “ நா வாரேம்மா” என்று சொல்லிவிட்டு சென்றதும் பொன்னி கைவேலையை விட்டு விட்டு ஜானகியின் காலின் கீழ் வந்தமர்ந்தாள். கொஞ்ச நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்துவிட்டு பிறகு
“அம்மா – நான் முழுசும் சொன்னாதான் புரியும் “ என்று கொஞ்சம் அழுது கொண்டும் கொஞ்சம் சிரித்துக் கொண்டும் சொன்ன கதை இது. ராமசாமி ஐசீயூவில் இருக்கும்பொழுது ஒரு நேரம் இவளை ஆஸ்பத்திரி நர்ஸ்
“உங்க வீட்டுகாரர் அழுதுகொண்டே இருக்கிறார், ஏன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கிறார். இப்பவோ அப்பவோன்னு கெடக்கிற ஆளுக்கு உங்கிட்டே ஏதாவது சொல்லோணுமோ என்னவோ – போய் கொஞ்சம் கேளு “ என்று உள்ளே அனுப்பி வைத்தாள்.
இவள் உள்ளே சென்றபோதும் ராமசாமி அழுது கொண்டே இருந்ததைப் பார்த்து பொன்னியின் மனம் பதறி போய்விட்டது. “இன்னாய்யா – இன்னாச்சு?” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு இரண்டு மூன்று முறை வற்புறுத்திக் கேட்டபிறகு அவன் சொன்ன விவரம் இது.
ராமசாமிக்கு அம்மா அப்பா கிடையாது. ஒரே அக்காதான்’ அக்காவின் கணவரும் அவளுக்கு ஒரு பெண் குழந்தையையும் கொஞ்சம் சொத்தையையும் கொடுத்துவிட்டு ஒரு விபத்தில் இறந்துவிட, அவன் அக்காவின் வீட்டிலேயே ராமசாமி வளர்ந்தான்.
அவன் 20 வயதிலேயே சொந்தம் விட்டுப்போக கூடாது என்று அவன் அக்கா பெண் சின்னத்தாயியை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். கறுப்பாக இருந்த சின்னத்தாயியை பல கனவுகளில் இருந்த ராமசாமிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
கொஞ்ச நாள் அவர்கள் வற்புறுத்தலுக்காக குடித்தனம் நடத்திய ராமசாமி திருநெல்வேலி டவுனில் வேலைக்கு சேரப் போகிறேன் – வேலை நிரந்தரமானதும் சின்னத்தாயியை கூட்டிகொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்னை வந்துவிட்டான். சென்னை வந்து 2 திருமணம் எல்லாம் தெரிந்த கதை.
ஆனால் எல்லோருக்கும் மரணப் படுக்கையில் வரும் ஞானோதயம் ஐசீயூ வில் இருந்த ராமசாமிக்கும் வந்திருக்கிறது. அதாவது தன்னால் ஏமாற்றப் பட்டு கிராமத்தில் இருக்கும் சின்னத்தாயியை பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் எப்படி பொன்னியிடமும் மரகத்திடமும் சொல்வது என்ற நிலையில் செய்வதறியாது அழுதுகொண்டே இருந்திருக்கிறான். அவன் தான் சாகப் போகிறோம் என்று நிச்சயித்துக் கொண்டுவிட்டதால் இந்த நிலை.
பொன்னி வந்து கையைப் பிடித்துக் கொண்டு கேட்டதும் சாகப்போகிறோம் என்ற தன்னிரக்கத்தில் எல்லா உண்மையையும் கொஞ்ச கொஞ்சமாக பொன்னியிடம் சொல்லிவிட்டான்.. எல்லாவற்றையும் கேட்ட பொன்னி அதிர்ச்சியில்
“பாவி மனுஷா – இன்னும் என்ன பாக்கி வச்சிருக்கே?” என்று கேட்டுவிட்டு வெளியே வந்து விட்டாள். ஆனால் உள்ளெ ராமசாமிக்கு மூச்சிரைப்பு அதிகமாகி திரும்பவும் ஆக்சிஜன் வைக்க வேண்டி வந்து விட்டது என்று நர்ஸ் வந்து சொன்னதும் அவளுக்கு பயம் வந்துவிட்டது. மரகதத்திடம் விஷயம் எல்லாம் சொன்னவுடன் முதலில் அவள் திடுக்கிட்டாலும் , பிறகு பொன்னியிடம்
“அந்த மனுஷன் போயிட்டா அவன் கேட்டதை செய்யலேன்னு நமக்கு தோணும்.- அந்த அம்மா விவரம் தெரிஞ்சா சொல்லி அனுப்பிடுவோம்.” என்று பெரிய மனுஷி மாதிரி சொல்ல இவங்க ரெண்டு பேரும் திரும்ப ராமசாமிக்கு உணர்வு வரும்வரை காத்திருந்து அவனிடம் விவரம் வாங்கி அந்த கிராமத்து போஸ்ட்மாஸ்டர் மூலமாக சின்னத்தாயிக்கு விவரம் சொல்லி அவளை வரவழைத்து விட்டார்கள்.
ஆனால் ராமசாமயை பார்த்து அழுது கதறுவாள் என்று எதிர்பார்த்த சின்னத்தாயி ராமசாமியை ஏதோ மூணாம் மனுஷனைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு வெளியே வந்து குழந்தையிடம் விளையாட தொடங்கி விட்டாள். ஆனால் அவள் வந்த வேளையோ என்னவோ ராமசாமி பிழைத்து வந்து விட்டான்.
ஆஸ்பத்திரி பில் பூரா கட்டினது சின்னத்தாயிதான். அவள் வரவில்லை என்றால் அவ்வளவு பணத்திற்கு என்ன பண்ணியிருப்போம் என்று தெரியவில்லை என்று பொன்னி சொன்னாள்.
அதன்பிறகு நடந்ததுதான் வேடிக்கை. கிராமத்திற்கு திரும்ப போகிறேன் என்று கிளம்பிய சின்னத்தாயியை “கிராமத்தில் என்ன பண்ணப்போறே? இங்கேயே எங்க கூட இருந்தூடு” என்று பொன்னியும் மரகதமும் சொன்னதும் பதிலே பேசாமல் அவர்களுடன் இணைந்துவிட்டாள் சின்னத்தாயி. ஆனால் ஒரு வார்த்தை கூட ராமசாமியுடன் பேச மறுத்து விட்டாள்.
குழந்தை அவளுடன் ஒட்டிக் கொண்டுவிட்டதால் அவள் நேரம் பூரா குழந்தையுடன் விளையாடுவதிலேயே சென்றது என்று பொன்னி கூறினாள். ஜானகி அவளிடம்
“இதெல்லாம் உங்களால் எப்படி முடிகிறது – சின்னத்தாயியை எப்படி ஏத்துக் கொள்ளமுடிந்தது? என்று கேட்டதற்கு பொன்னி சொன்ன பதில் ஜானகியை ரொம்ப யோஜிக்கவைத்தது. பொன்னி சொன்னாள்
“அம்மா – அந்த அக்கா தான் நெசமா பாத்தா எம் புருஷன் கூட இருக்கணோம். ஆனா ஒரு நா கூட அவங்க சந்தோஷமாக இருந்ததில்லை. ஆனா புருஷனுக்கு ஒடம்பு முடியலன்னுதும் முன்னே வந்து நிக்கறாங்க.
நாங்க கொஞ்ச நாளாவது புருஷன் கூட வாழ்ந்தோம். இவங்க ஏமாந்து போனவங்க. ஆனாலும் கடமைக்கு வந்து பில்லுக்கும் பணம் கொடுத்து எங்களையும் காப்பாத்தி இருக்காங்க.
அவங்களுக்கும் இங்கே இருக்க உரிமை இருக்கு. குட்டியும் அதுகூட நன்னா பழகிடுத்து. இன்னும் ஒரு ஆளு கூட இருந்தா எங்க வீட்டுக்காரரையும் பாத்துக்க முடியும். அம்மா ! நாங்க ஏழைங்க –இன்னும் ஒரு ஆளு வீட்டுலே – அவ்ளோதான் –
அவங்களும் தனி இல்லேன்னு அவங்க மனசுலே சந்தோசம். நமக்கும் நாம ஆரையும் கெடுக்கலைன்னு சந்தோசம். எங்க வீட்டுக் காரருக்கும் செஞ்ச தப்ப திருத்திட்டோம்னு சந்தோசம். வாழறதை அதும் போக்குல வாழ்ந்துட்டா பிரச்னையே இல்லை, இல்லையாம்மா?” ன்னு கேட்டப்ப ஜானகியால் பதில் சொல்ல முடியலில்லை.
“ என்ன மாதிரி மனஸு இவங்களுக்கு – வாழ்க்கையை அது போற போக்குல வாழறது தான் சரி” என்ற நினைப்புதான் வந்தது அவளுக்கு.