Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

சிறுகதை – மரத்தடி வடைகள்

July 20, 2020

பொறுப்புத் துறப்பு :

கிறிஸ்தவர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பாட்டிகள், காக்கா மற்றும் நரி உட்பட யாரையேனும் இக்கதை புண்படுத்தி இருந்தால் இந்த ஒருமுறை பொறுத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை நேர் செய்து விடலாம்.

செய்தி அலையின் சிறுகதைப் போட்டி!!

தயவு செய்து குழந்தைகளிடம் இப்படி சொல்லாதீர்கள்!

சிறுகதை – தீராச்சுமை!


சிதறிக்கிடந்த ரோஜா மலர்களுக்குள் ஒளிந்திருந்த புழுவினை கொத்தித்தின்று பசியாறிக் கொண்டிருந்த காகங்களை அந்த தேவாலயத்தில் ஒலித்த மணியோசை சிதறிப் பறக்கச் செய்தது. வெண்பஞ்சு மேகங்கள் தூவப்பட்ட வானமும் விழித்துக் கொண்டது. பாதர் குரியன் ஜோசப் தலைமையில் ஞாயிறு காலை ஆராதனை கூட்டம் துவங்கியது. பியானோவின் இசை ஆலயம் முழுவதும் பிரவாகமாகிக் கொண்டிருந்தது. அவ்வெண் கூடத்தில் தன் இரு கைகளையும் விரித்தவாறு சிலுவையில் அறையப்பட்ட தேவனாகிய இயேசு கிறிஸ்து அனைவரின் மீதும் கருணை பொழிந்து கொண்டிருந்தார். விண்ணரசே இறங்கி வந்ததைப் போல அனைவரும் வெள்ளுடை தரித்து கர்த்தரைப் பாடித் துதித்து கொண்டிருந்தார்கள். கண்களை மூடி, ஆரோக்கிய அன்னையே ஆண்டவரிடத்தில் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். சகாய மாதாவே எங்களுக்காக மன்றாட்டு செய்யும் என உள்ளம் உருக ஜெபித்துக் கொண்டார்கள்.

ஆராதனை வேளை முடிந்து பிரசங்க நேரத்திற்குள்ளாக கடந்து வந்தார் பாதர் குரியன்.

“எனக்கன்பான தேவ ஜனங்களே… உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக…” என்றார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் ஆனந்தப் பெருக்கால் விசுவாசிகளின் கண்கள் கலங்கி குளமாகின. தங்களின் கை விரல்களை ஒன்றோடு ஒன்றாக இறுக்கிப் பிடித்து எல்லாம் வல்ல பரிசுத்த ஆவியின் நம்பிக்கையை இறைஞ்சிக் கொண்டனர்.

“வஞ்சனையான இந்தக் காலகட்டத்தில் நாம் சாத்தான்களிடம் கவனமாய் இருக்க வேண்டும். எவனை விழுங்கலாம் என கர்ஜிக்கிற சிங்கத்தைப் போல அவன் தேடியலைகிறான்.

தேவ சமூகத்தை விட்டு நாம் விலகினாலும் சற்று கவனம் குறைந்து விட்டாலும் அவன் நம்மை பட்சித்துப் போடுவான். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஒரு கதையை இங்கு பகிர விரும்புகிறேன் எனக்கன்பான தேவ ஜனங்களே….

ஒரு ஊரிலே ஒரு வயதான மூதாட்டி ஒருத்தி வடைகளைச் சுட்டு வியாபாரம் செய்யும் வேலையைச் செய்து வந்தாள். பிள்ளைகளால் நிர்கதியாக விடப்பட்ட அந்த வயதான காலத்திலும் தன்னை கர்த்தர் கைவிடவில்லை என்கிற விசுவாசத்திலே அந்த வடைகளைச் சுட்டு அவள் விற்று வந்தாள்.

அப்போது அங்கு அண்டங்காக்கை ஒன்று பறந்து வந்தது. நோவாவிற்கு ஆலிவ் இலை கொண்டு வந்ததே அந்தக் காக்கை அல்ல இது. கபடுள்ள காக்கை இது. அந்த மூதாட்டியை வஞ்சிக்கும் நோக்கோடு வந்த காக்கை அது.

தன் தலையை ஒருபுறமாய் சாய்த்து, பாட்டி எனக்கு மிகவும் பசிக்கிறது நீ சுட்ட வடையில் ஒன்று கொடு எனக் கேட்டது. இரக்க சுபாவமுள்ள அந்தப் பாட்டி தன் பேரக் குழந்தையைப் போல எண்ணி ஒரு வடையைக் கொடுத்தாள். தேவனும் தன் அன்பால், தன் ரத்தத்தால் அனைத்து உயிர்களையும் ரட்சித்துக் காப்பவராய் இருக்கிறார்.

மிகவும் பிரயாசத்துடன் அந்த வடையைப் பெற்றுக் கொண்ட காகம் ஒரு மரத்திலே சென்று அமர்ந்தது அதை சாப்பிடலாம் என நினைத்தது.

அப்போது அவ்வழியே ஒரு நரி வந்தது. அந்த காகத்தைப் பார்த்து ‘அழகான காகமே, நீ பார்ப்பதற்கே அவ்வளவு அழகாய் இருக்கிறாய். பாடினால் இன்னும் அழகாய் இருப்பாய்’ என்றது அந்நரி. அப்படித்தான் சாத்தானும் உங்களை புற அழகை கூறி உங்களை மயக்கப் பார்ப்பான். தேவன் புற அழகை விரும்புவதில்லை என்னருமைப் பிள்ளைகளே.. வார்த்தைகளின் வசனிப்புகளில் வீழ்ந்து போகாதிருங்கள்.

நரியின் அந்த வார்த்தைகளில் மயங்கிய அந்த காகம் பாட அந்தக் காகத்தின் வாயிலிருந்த வடை கீழே விழுந்து விட்டது.

மிகத் தந்திரமான அந்த நரி வடையைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டது.

இப்படித்தான் தேவ ஜனமே, தேவன் நமக்கு கொடுத்த வடை போன்ற நல்ல ஈவுகளை நம்மிடம் இருந்து சாத்தான் தட்டிப் பறித்து விடுகிறான்.

நம் ஆண்டவரோ அந்த மூதாட்டியைப் போல பிரதிபலனற்ற அன்பைப் பொழிகிறவராய் இருக்கிறார்.

ஆகவே தேவ ஜனங்களே.. நீங்கள் ஏமாந்து போகும் காகங்களாய் அல்ல, ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளும் காகமாய் இருங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.

தேவ ஆசீர்வாதத்தோட போய் வாருங்கள் ஆமென் என்றார் பாதர் குரியன் ஜோசப். ஆமென் என்ற சொல் அந்த தேவாலயம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

கண்ணில் எதிர்பட்டவர்களுக்கு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டே ஆலய படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்த தாமஸ், அவசர அவசரமாக கறிக்கடையை நோக்கிப் புறப்பட்டான்.


செவ்வானில் சூரியன் மறையத் தயாராகிக் கொண்டிருந்தான். அச்சாலையில் ஜனநெருக்கம் அதிகமாக இருந்தது. இரவு நேர பணிக்கு தொழிலாளர்களும் சென்று கொண்டு இருந்தனர். வடை கடைகளிலும், பொம்மை கடைகளிலும் கூட்டம் வழிந்தோடியது. மின்கம்பத்தில் கூட்டமாக அமர்ந்திருந்தன காகங்களும்.

புரட்சிகர பூபாள இளைஞர் இயக்கத்தின் சார்பில் தெரு முனைக் கூட்டம் ஒன்று அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்த இளைஞர்கள் எல்லாம் சிவப்பு வண்ண பேட்ச் குத்தியிருந்தனர். சிலர் சட்டையையும் அதே வண்ணத்தில் அணிந்திருந்தனர். தோழர் செவ்வேலன் கைகளுக்கு மைக் சென்றவுடன் ஸ்பீக்கர் பெட்டிகள் நெருப்பை பிரசவித்தன. ஆளும் அரசுக்கு எதிராக அவரது கேள்விகள் சுளீர் பொளீரென வந்து விழுந்தன. கூடியிருந்தவர்களுக்கு கைதட்ட இன்னும் நான்கு கைகளை கடன் வாங்கி வந்திருக்கலாமோ எனத் தோன்றியது. அந்த சத்தத்தில் பயந்து போன காகக்கூட்டமும் தன் கூடு தேடி பறந்து சென்றன.

“ஏய் ஏகாதிபத்தியமே.. உன் பாச்சா இங்கே பலிக்காது. எங்கள் மண் புரட்சிப் புலிகளைப் பெற்றெடுத்த மண். உன் குள்ளநரித் தந்திரங்கள் இங்கு செல்லுபடியாகாது. எங்கள் உழைப்பைச் சுரட்டிக் கொழுத்த உன்னை இனியும் சும்மா விட மாட்டோம்.

தோழர்களே…!

உங்களுக்கு கதை ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். என் பாட்டி, என் தாய்கெழவி சின்னதா ஒரு கடை போட்ருக்கா. அது மாட மாளிகையோ, கண்ணாடி போட்டு பிரமாண்டம் காட்டுற கடையோ கெடையாது. தன் குடிசை வீட்டை ஒட்டி அந்த வாசல்லயே போட்டிருக்கிற ஒரு எளிய கடை. நம்பிக்கையால் கட்டப்பட்ட கடை.

அந்த கடைக்கு நம்மள மாதிரி ஒரு பாவப்பட்ட காக்கா போகுது. நம்மள மாதிரியே அதுகிட்டயும் காசு இல்ல. நம்மள இன்னும் உண்டியல் குலுக்கினு தானே சொல்றானுக. அதுக்கெல்லாம் நாம கவலைப்படக் கூடாது. இவிய்ங்கள மாதிரி மண்ணு, தண்ணி, காத்துனு எல்லாத்துலையும் கான்ராக்ட் எடுத்து கோடி கோடியா மக்கள் பணத்த சுருட்டல. மக்களுக்காக மக்கள்கிட்டயே ஒரு ரூவா, ரெண்டு ரூவானு வாங்கி செலவழிக்கிற பெருமையுள்ள இயக்கம் நம்மளோடது தான்.

சரிங்களா.. இந்தக் காக்கா, வடை வாசம் பட்டு நம்ம தாய்கெழவி கடைக்குப் போகுது. காசு இல்ல. ஆனா பசிக்குது. இங்க தான் பசிங்கிறது சர்வதேச பிரச்சனையாச்சே. என்னென்னமோ இல்லாம வாழ்றாய்ங்க. ஆனா எந்தப் பாகுபாடுமே இல்லாம எல்லாருக்குமே இருக்கிறது இந்தப் பசிதான். (கைதட்டல்)

நம்ம தாய்கெழவிகிட்ட அந்தக் காக்கா போயி, பாட்டி எனக்குப் பசிக்கிது ஒரு வடை குடேனு கேக்க, அந்தக் கெழவி அப்படியே அந்த காக்காயேவே பாக்றா.

ஏய் அறிவு கெட்ட காக்கா. நானே வயசானவ. நடக்கமாட்டாம நடந்து சுள்ளி சேத்து, இந்த வடைய சுட்டுக்கிட்டு இருக்கேன். நீ அங்கிங்க ஓடியாடுறவளாச்சே. நல்லா சுள்ளியும் பொறுக்குவியே. நாலு சுள்ளி எடுத்துப் போடு. ஒனக்கு ஒரு வடை தர்றேன்னு சொல்றா.

சரினு இந்தக் காக்காவும் பசியோட அங்க இங்க ஓடியாடி சுள்ளி பொறுக்கிப் போடுது. தாய்க்கெழவி அந்த காக்காவுக்கு தாயா மாறிட்டா. நாளைக்கு ஒரு பொழுது அடுப்பெரிக்க வெறகு சேந்தவுடனே ‘ஏய் போதும் காக்கா. வா வந்து வடையத் தின்னு. பசியோட இருப்பனு’ சொல்லி, காக்கா செஞ்ச வேலைக்கு ஏத்த மாதிரி பெரிய வடையாவே ஒண்ணுக் குடுத்தா.

காக்காவுக்கு இப்ப ரொம்ப மகிழ்ச்சி. உழைச்சவுடனே பலன் கெடக்கிறது தான இந்த தொழிலாளி வர்க்கத்துக்குப் பெரும. சம்பளம் கிடச்ச சந்தோசத்துல பசி கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கு. பாட்டிக்கு நன்றி சொல்லிட்டு காக்கா அது கூட்டுக்குப் போகுது.

அப்பதான் நம்மாளு வர்றான். யாரு? இந்த அடிச்சுப் புடுங்கிற கோஷ்டி. தந்திரமா நம் உடைமைகளை நம்மகிட்டு இருந்து எடுக்கிறவய்ங்க.

நரி வருது. ஏய் காக்கா நீ ரொம்ப அழகா இருக்க. ஒரு பாட்டு பாடுனு சொல்லுது.

இப்பிடித்தான் சில பைத்தியகாரய்ங்க நம்மள கொழப்புவாய்ங்க. அழகா இருக்கிற ஆளுக்கு பாட்டு நல்லா வரும்னு யாராவது சொல்லிருக்காங்களா? (கைதட்டல்) ஆனா நம்மாளு அதையும் நம்புவான்.

காக்கா நரிய பாக்குது. இது நம்மள மாதிரி வெரமான காக்கா. கருப்பு காக்கா. திராவிட நிறம் கருப்பு தானே என்ன நா சொல்லுறது? (கை தட்டல்) அந்த காக்கா வடைய கால்ல கவ்விட்டு நரியப் பாத்து ஒரு கேள்விய கேக்குது.

‘ஏண்டா நரி ……. பயலே. எத்தனை நாளைக்குடா இப்பிடி அடுத்தவன் உழைப்ப திருடித் திம்பீங்க? இப்பிடி ஒரு பொழப்பு பொழைக்கிறதுக்கு நீங்கெல்லாம் மாமா வேல பாக்லாண்டா… (கைதட்டல்) இந்த ஏமாத்துப் பொழப்புக்கு நீயெல்லாம் ….. டா.

இன்ன கேள்வினு இல்லாம காக்கா கேக்க கேக்க, துண்டக் காணோம் துணியக் காணோம்னு நரி ஓடுது.

காக்காவுக்கு ஏன் மக்களே அவ்வளவு கோபம் வந்துச்சு? ஏன்னா வம்பாடு பட்டு ஒழைச்ச பொருளு அது. உழைக்கிறவனுக்கு தான் அதோட வலி தெரியும்.

நாம கஷ்டப்பட்டு உழைச்சு ஒண்ண சேத்து வைப்போமாம். இவனுக நோகாம வந்து நொங்கை நோண்டித் தின்னுட்டு போவாய்ங்களாம். அயோக்கியப் பயலுக மத்தியில தான் நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம் மக்களே… உசாரா இருக்கணும்.

மதியம் கறிச்சோறு தின்ற மதர்ப்போடு இந்த உரையைக் கேட்டவாறு ஹவுஸ் கீப்பிங் பணிக்கு நேரமாகி விட்ட பதட்டத்தோடு சென்று கொண்டிருந்தான் தாமஸ்.


நீல நிற நியான் விளக்கில் கொரியன் ஸ்டார் ஹோட்டல் மின்னிக்கொண்டு இருந்தது. அங்கு கோட், சூட், டை சகிதம் டிப் டாப்பாக அனைவரும் கூடியிருந்தனர். ஆண்டுக்கொரு முறை நடக்கும் மெடிக்கல் கான்ப்ரன்ஸ் அது.

இன்னும் சற்று நேரத்தில் புதுவெள்ளம் போல மதுவெள்ளம் பாயத் தயராகிக்கொண்டிருந்தது. கூடவே பறப்பன, நீந்துவன, நடப்பன என அனைத்தும் தனித்தனியே வெந்தும், பொறித்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஊன் உண்ணாதே, மது அருந்தாதே. புகைக்காதே. பெண்கள் வெறும் சதைகளாலும் நம்புகளாலும் ஆன பிண்டங்களே, வன்புணராதே போன்ற அறிவுரைகள் எல்லாம் மற்றவர்களுக்கு தான் என தீர்க்கமாக இருப்பவர்கள். எல்லோரும் கடவுளாய் பார்ப்பதனாலேயே தங்களை கடவுள்களாகவே மாற்றிக் கொண்டவர்கள் இவர்கள்.

தொப்பையோடு இருந்த ஒருவர் உரையாற்ற வந்தார். முழுக்க முழுக்க ஆங்கில உரை அது. வாஸ்கோடகாமாவின் ஊரிலிருந்து அவர் வந்திருந்தார். அவர் மீதும், அவர் பேச்சிலும் அந்த வாடையே வீசிக்கொண்டு இருந்தது.

அவர் உரை முழுக்க காக்கைகள் நரிகள் பற்றியே இருந்தது. காக்கைகள் யார் நரிகள் யார் என்பதை மிக நன்றாகவே உணர்ந்திருந்தார் அவர். நரிகளுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தார். அவைகள் உயிர் வாழ, உயர்வாக வாழ காக்கைகளே மூலதனம் என்றார்.

காக்கைகள் உழைத்துச் சம்பாதிக்கும் வடையில் ஆயில் இருப்பதால் ஆயுள் குறைவு என்பதை மூளையில் பதிய வைக்க வேண்டும் அந்த காகங்களுக்கு என்றார்.

காக்கைகளின் கைகளில் இருக்கும் வடைகளைப் பறித்துக் கொண்டு கார்போ-ஹைட்ரேட் நிறைந்த வண்ண வண்ண மாத்திரைகளை விற்கும் சூத்திரம் பகிர்ந்தார்.

காக்கைகள் ஏமாளிகளாகவே இருக்கவேண்டும் எனவும் அதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விடக் கூடாது எனவும் அழுத்தமாக கூறிக்கொண்டு இருந்த போது அனைவரும் சிரிக்க, தொப்பைகளும், கையில் இருந்த திரவ குடுவைகளும் குலுங்கியது.

சிரிப்பு அடங்க மீண்டும் அழுத்தமாக, காகங்களை மட்டும் என்றைக்கும் கொல்லவே கூடாது. ஏனெனில் அவைகளைக் கொன்று விட்டால் நரிகள் உயிர் வாழ முடியாது என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

ஹவுஸ் கீப்பிங் பணியில் இருந்த தாமஸ் பொத்தென மயங்கி விழுந்தான்.

– சொற்கோ – அருள்குமரன் சேதுபாண்டியன்

இதை படியுங்கள் : ஸ்ரீரங்கத்து இசை தேவதை

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி?

Next Post

ரசிகர்களுக்கு சாக்சி அகர்வால் கொடுத்த பர்த்டே கிஃப்ட்!

Next Post

ரசிகர்களுக்கு சாக்சி அகர்வால் கொடுத்த பர்த்டே கிஃப்ட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version