– அர்ச்சனா அசோக்

நம் குழந்தைகளுடன் நாம் பேசும் விதம் அவர்களின் உள் மனதில் ஆள பதியும். சில நேரங்களில் அவர்களின் தவறுகளைத் திருத்திக்கொள்ள, நாம் நம் குழந்தைப் பருவ தவறுகளையும் அதன் விளைவுகளையும் சற்றுp பகிர்வதில் தவறில்லை.
அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்தk கதை, நான் என் மகளுக்கு வெளிப்படையாக “தான் செய்த தவறை ஏற்றுக்கொள்வது தவறல்ல” என்பதை அவளுக்குப் புரியவைக்க, என் தவறை வெளிப்படுத்தினேன்.
என் மகளின் பிறந்த நாள் ஆகஸ்ட் 14, குவைத்தின் பள்ளி விடுமுறைப்படி, அவர்களின் ஆண்டு விடுமுறை மாதம். பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் பிறந்தநாளைப் பள்ளிகளில் இனிப்புகள் கொடுத்து, வண்ண உடை அணிந்துk கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு முறையும் பள்ளியில் யாராவது பிறந்தநாளைக் கொண்டாடும்போது, அவள் என்னிடம் வந்து “என் பிறந்தநாள் எப்போது?”, “நான் பள்ளிக்கு வண்ண உடை அணியலாம் அல்லவா?” என்பாள். கடந்த ஆண்டு அவள் பிறந்தநாள் பள்ளி நாட்களில் வருவதில்லை, விடுமுறை நாட்களில் மட்டுமே! என்று புரிந்துக்கொண்டாள்.
ஒரு நாள் அவள் என்னிடம், “அம்மா, நான் இன்று பள்ளிக்கு வண்ண உடை அணியலாமா?” என்று கேட்டாள். நான் அதை புரிந்துக்கொண்டு ஒப்புக்கொண்டேன்.
அவள் பள்ளிக்குச் சென்றவுடன் சீருடை பற்றி அவளுடைய ஆசிரியர் கேட்டபோது, இன்று என் பிறந்தநாள் என்று சொல்லி இருக்கிறாள். அவளுடைய வகுப்பு ஆசிரியர் ஒரு மென்மையான குறிப்பில் எனக்கு செய்தி அனுப்பினார், “என் அழகான மாணவி தனது பிறந்தநாளைப் பள்ளியில் கொண்டாட விரும்புகிறார் என்று”.
நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது, மெதுவாக அவளுடைய ஆசிரியர் அனுப்பிய செய்தியைப் பற்றிச் சொன்னேன்.
அவள் அமைதியாக இருந்தாள். “நான் உனக்கு ஒரு கதையை சொல்லலாமா?” என்றேன். “ம்ம்ம்ம்….” என்றாள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எனது கிராமத்தில் எனது குழந்தைப் பருவ நாட்களைக் கழித்தேன். எனக்கு நல்லதல்ல என்று நினைக்கும் சில இடங்களுக்குச் செல்ல, என் அம்மா என்னை அனுமதிப்பதில்லை. அதைப் புரிந்துக்கொள்ள அப்போது எனக்கு வயது இல்லை.
எனக்கு 7 வயதாக இருந்தபோது ஒரு விடுமுறை நாளில் நான் வெளியே விளையாடச் சென்றேன். அப்போது இலந்தைப்பழம் பறிப்பதற்காக குழந்தைகளுடன் நானும் சென்றேன். இந்தச் செய்தி என் அம்மாவின் காதுகளுக்கு எட்டியது. என்னை வீட்டிற்கு அழைத்து வர என் அம்மா ஒருவரை அனுப்பினார். அவர் வந்தபோது தான் புரிந்தது இந்த இடம் நான் வரக்கூடாது என்று. அவர் மிதிவண்டியில் வந்திருந்தார். பின் அமர்ந்தேன்.
வீட்டிற்கு சற்று தொலைவில் மிதிவண்டி செல்லும் போது, நான் உண்மையில் பயந்து வியர்த்தேன். என் அம்மா நுழைவாயிலில் நிற்பதைக் கண்டேன். என் கண்களுக்கு அவள் என் மீது கோவமாக இருப்பதுப் போல் தோன்றியது. தவறு செய்ததாலோ என்னவோ!
வீட்டிற்கு மிக அருகில் வரப்போவதை உணர்ந்த நான், மிதிவண்டியில் இருந்து குதித்துவிட்டேன். ஓடிக்கொண்டிருந்த மிதிவண்டியில் இருந்து தார் சாலையில் விழுந்ததில், கைகால்களில் நல்ல சிராய்ப்பு. என் அம்மா முதலுதவி செய்தார். சிறிது நேரம் கழித்து நான் ஏன் அவ்வாறு செய்தேன் என்று அவள் கேட்டாள்.
என்னிடம் பதில்கள் இல்லை. நான் அங்குச் சென்றதால் அவள் கோபப்படவில்லை என்று அவள் விளக்கினாள். நான் அங்கு செல்வது பற்றி அவளுக்குத் தெரிவிக்கவில்லை என்பதே அவளின் வருத்தம். பயத்தினால் நான் செய்த தவறுக்கு வருந்தினேன். 6 நாட்கள் சிராய்ப்பினால் ஏற்பட்ட வழி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.
வாய்ப்புகளை எடுத்துக்கொள், தவறு செய். தவறுகளிலிருந்து கற்றுக்கொள், உன்னை நெறிப்படுத்திக்கொள்.
ஆனால் செய்த தவறை ஒப்புக்கொள்ள தயங்காதே! என்றேன்.
அவள் முகத்தில் தெளிவோடு சிரிப்பும் மிளிர்ந்தது….
– கதைப் படிக்கலாம் – 121
இதையும் படியுங்கள் : வடுவின் வலி




