இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி இதுவரை இல்லாத அளவிற்கு 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9 சதவீதமாக சரிந்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தின் முதல் காலாண்டில் இந்திய உள்நாட்டு உற்பத்தி பெரும் சுருக்கத்தை சந்தித்தது, மேலும் இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் அரசாங்க நிதிகளும் படிப்படியாக மோசமடைந்துள்ளதாக திங்களன்று வெளியிடப்பட்ட இரண்டு தனித்தனி தரவுத் தொகுப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, உள்நாட்டு உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பொருளாதார சரிவிக்கு வித்திடும் என வல்லுநர்கள் ஏற்கனவே கணித்து எச்சரித்து இருந்தனர். அந்த எச்சரிக்கை தற்போது உண்மையாகியுள்ளது.
இந்தியாவின் பதிவுசெய்யப்பட்ட புள்ளிவிவர வரலாற்றில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவிற்கு உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த காலாண்டில் கட்டுமானத்துறை 50 சதவிகிதம் சரிவை சந்தித்து உள்ளது. அதை தொடர்ந்து, வர்த்தகம், ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்து துறைகள் 47 சதவிகிதமும், உற்பத்தி துறை 39 சதவிகிதமும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வேளாண்துறை மட்டுமே 3.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளது.
தொற்றுநோயால் தனியார் நுகர்வு செலவு 27 சதவீதம் சரிவடைந்துள்ளது. மொத்த நிலையான மூலதன உருவாக்கம் – பொருளாதாரத்தில் முதலீட்டு தேவையின் ஒரு குறிகாட்டியாகும். காலாண்டில் 48 சதவீதம் சுருங்கியது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் இந்த காலகட்டத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் ஜிடிபி 23.9% சரிந்திருப்பது என்பது மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசுக்கான அவமானம் என்றும், இந்த அரசு தமது தவறுகளை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.