டெல்லியில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு ரத்த தானம் செய்து அத்துடன் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நடந்து வரும் நவீன யுகத்தில் யாரேனும் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தால் கூட பலரும் நமக்கு ஏன் வம்பு என கடந்து சென்று விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கிறதா என நம்மை சிந்திக்க வைக்கின்றன. அப்படியே ஒரு சிலர் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தாலும், சரியான நேரத்துக்கு கொண்டு சேர்க்க முடியாமல் போவது அல்லது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ரத்தம் உடனடியாக கிடைக்காமல் போவது உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் மரணமடைவதும் உண்டு.

அப்படி அடிபட்டு உயிருக்கு போராடிய ஒருவருக்கு மருத்துவர் ஒருவரே ரத்தம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் நடந்த விபத்து ஒன்றில் அடிபட்டு ஆபத்தான நிலையில் ஒருவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். அதற்கு குறிப்பிட்ட வகை ரத்தம் உடனடியாக தேவை என அவரின் பெற்றோர்களிடம் தெரிவித்துவிட்டனர். பல இடங்களில் முயற்சித்தும் அவர்களுக்கு ரத்தம் கிடைக்கவில்லை.

இதையறிந்த அங்கு பணிபுரியும் ஜூனியர் டாக்டர் ஃபவாஸ் தானாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளார். மேலும், மருத்துவ குழுவினருடன் இணைந்து அந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது அவர், ஒரு மருத்துவராக நான் எனது கடமையையே செய்தேன். இதற்கு பாராட்டுகள் தேவை இல்லை என தெரிவித்தார்.
இதுபோன்ற ஒரு சிலரது செயல்களே மனிதம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நமக்கு காட்டிக்கொண்டுள்ளது.
டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி அளித்த வங்கி… இதையும் படிக்கலாமே:-




