
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் துணை கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்தவர் விஜய் பாபு. இவர் குறிப்பிட்ட சில படங்களை தயாரித்து முன்னணி திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளார்.
சமீபத்தில் இவர் மீது திரைப்பட நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதன்மீது வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் காவல்துறையினர், புகார் தொடர்பாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்து விஜய் பாபு வீடியோ வெளியிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட நடிகையின் அடையாளத்தையும் அந்த வீடியோவில் வெளியிட்டார்.
இது மிகப்பெரிய பிரச்னையாக உருவானது. அதையடுத்து பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கான வழக்கும் விஜய் பாபு மீது பதியப்பட்டது. பலமுறை அவருக்கு இவ்வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டும் விஜய் பாபு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அவர் வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நடிகர் விஜய் பாபுக்கு எதிராக எர்ணாகுளம் நீதிமன்றம் நேற்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
மேலும் கேரள அரசு விஜய் பாபு மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.