டெல்லியில் காற்று மாசை கருத்தில் கொண்டு, நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக, அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதால், தொடர்ந்து 2 நாட்களாக சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் இந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், டெல்லியில் காற்று மாசும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, பட்டாசுகள் வெடிப்பதைப் தவிர்க்குமாறு, பொதுமக்களுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சத்தியேந்திர ஜெயின் கூறியுள்ளதாவது, டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க நவம்பர் 7-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, டெல்லியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா பரவல் மற்றும் காற்று மாசு அதிகரித்து வருவதால் ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.