சமூக வலைதளங்களை பாஜக கட்டுப்படுத்துவதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, இந்தியா – சீனா மோதல், கொரோனா பாதிப்பு என பல பிரச்னைகள் குறித்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ட்விட்டரில் தீவிரமாக களமாடி வரும் ராகுல்காந்தி, பல்வேறு புள்ளி விவரங்கள் தொடர்பான பதிவுகளையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகிய சமூகவலைதளங்களை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
”இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளையும், வெறுப்பையும் பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.