கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் 20.5 செ.மீ., அளவுக்கு கனமழை கொட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கியது. கடந்த இரு தினங்களாக, அங்கு கனமழை பெய்து வருகிறது. கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது.

இந்நிலையில், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு, கனமழை முதல் மிகக்கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இடுக்கி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கியில் 20.5 செ.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘எல்லோ அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.