ஐதராபாத் விநாயகர் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட லட்டு ₹24.60 லட்சத்திற்கு ஏலம் போனது.
ஐதராபாத் அருகே உள்ள பாலாபூரில் உள்ள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதிநாளில் 21 கிலோ லட்டு செய்து படைப்பது வழக்கம். சுத்தமான நெய், உலர் பழங்களை சேர்த்துச் செய்யப்பட்ட லட்டின் மேலே தங்கமுலாம் பூசப்பட்டு வெள்ளி கிண்ணத்தில் வைத்து வழிபடுவார்கள். பின்னர், இந்த லட்டை ஏலம் விடுவார்கள். இந்த லட்டு பிரசாதத்தை சாப்பிட்டால் வளமாக வாழலாம் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், பெரும் செல்வந்தர்கள் இந்த லட்டை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுப்பார்கள்.
இதற்கு காரணமாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, 1994ம் ஆண்டு பாலாபூர் விநாயகர் கோயிலில் முதன்முதலில் கோலனு மோகன் ரெட்டி, என்பவர் லட்டை ஏலம் எடுத்துள்ளார். மேலும், தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த லட்டை ஏலத்தில் பெற்றிருக்கிறார். அதன்பிறகு, அவர் செழிப்பாக வாழத் தொடங்கியதால், பாலாபூர் மக்களிடையே இந்த லட்டு ஏலமும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வருடமும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என ஒருவருக்கொருவர் போட்டியிட்டு அதிக ஏலத்து எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதன் விளைவு சென்ற வருடம் ஏலம் விடப்பட்ட பாலாபூர் லட்டு ₹18.90 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில், இந்த வருடம் ₹1,116க்கு தொடங்கப்பட்ட ஏலம் ₹24.60 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தை கணேஷ் உற்சவர் கமிட்டி உறுப்பினர் லட்சுமி ரெட்டி ஏலம் எடுத்தார்.