ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்புளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த மசூத், அவரது மனைவி நிஷா, மற்றும் அவரது குடும்பத்தினர், தெலுங்கானா மாநிலத்திலுள்ள வாரங்கல் கோரெகுந்தா என்ற கிராமத்தில் தங்கியிருந்தனர். மசூத் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருடன் பீகாரை சேர்ந்த சஞ்சய் யாதவ் என்பவரும், அதே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். மசூத்தின் உறவினரான ரபிகா என்பவரும், மசூத்துடன் தங்கியிருந்தார். ரபிகாவுக்கு ஒரு மகளும் உள்ளார்.
அடிக்கடி மசூத் விட்டிற்கு வந்துச்சென்ற சஞ்சய்க்கும், ரபிகாவிற்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் சஞ்சய் யாதவோ ரபிகாவின் மகளை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ரபிகாவை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளான். இதை நம்பி ரபிகாவும் அவனுடன் சென்றுள்ளார்.
ரயிலில் சென்றுக் கொண்டிருக்கும்போது, ரபிகாவிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துக்கொடுத்துள்ளான். ஏதும் அறியாத ரபிகா அதைக் குடித்ததும் மயங்கியுள்ளார். இதையடுத்து, ரபிகாவை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.
பின்னர் வாரங்கல் திரும்பிய சஞ்சயிடம், ரபிகா எங்கே என்று நிஷா கேட்டுள்ளார். அவரது பதில் நம்பும் வகையில் இல்லாததாலும், முன்னுக்குப்பின் முரணாக பேசியதாலும், போலீசில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார், நிஷா.
இதனால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த சஞ்சய், நிஷாவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த மே மாதம் 20-ஆம் தேதி குடும்பத்தில் உள்ள மசூத், நிஷா மற்றும் குழந்தை உள்ளிட்ட 9 பேருக்கு உணவில் மயக்கமருந்து கலந்து கொடுத்துள்ளான். இதனை சாப்பிட்டு மயங்கி விழுந்த அனைவரையும், சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்துள்ளான்.
இதுக்குறித்து விசாரணை செய்த போலீசார், சஞ்சய் யாதவை கைது செய்தனர். ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்ற சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று நீதிபதி கே.ஜெயகுமார், குற்றவாளி சஞ்சய் யாதவிற்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் கொலை நடந்த 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.