வெங்காய ஏற்றுமதி மீதான தடையை விலக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தியது.

புதுடெல்லி:
நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் கடந்த திங்கட்கிழமை மத்திய அரசு தடை விதித்தது. இதன் காரணமாக அதிக அளவில் வெங்காயம் விளைவிக்கும் மகாராஷ்டிர மாநில விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மத்திய அரசின் முடிவுக்கு மகாராஷ்டிர மாநிலத்தை சார்ந்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த விவகாரம் மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ், வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது விவசாயிகளைப் பெருமளவில் பாதிக்கும் என்றார்.‘கொரோனா நோய்த்தொற்று பரவலால் நாட்டின் பொருளாதாரம் ஏற்கெனவே சரிவைச் சந்தித்துள்ளது மேலும் இது போன்ற தடையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றனா். மாநில விவசாயிகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக வெங்காய ஏற்றுமதி உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும்’ என்றும் ராஜீவ் சாதவ் வலியுறுத்தினார்.




