புதுச்சேரி மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருந்தார். முதல்-அமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.
இதனை தொடர்ந்து புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடின. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. அரசு பஸ்களும் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. அதிமுக பந்த் காரணமாக புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகனை போலீசார் கைது செய்துள்ளனர். முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்பழகனை போலீசார் அதிகாலை கைது செய்தனர்.