
ரயில்வே வாரியம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்பதற்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 16, 17, 18-ம் தேதிகளில் இரண்டாம் கட்ட கணிப்பொறி தேர்வுகளை ரயில்வே நிர்வாகம் நடத்துகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வு எழுதுவோர் பங்கேற்க ஏதுவாக தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் 13-ம் தேதியன்று இரவு 11 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும். இது மறுநாள் மதியம் 12.30 மணியளவில் பெங்களூரு சென்றடையும். அதேபோன்று இதே ரயில் மறுமார்க்கமாக ஜூன் 17-ம் தேதி மாலை 6.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து விரைந்து மறுநாள் காலை 10.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
குறிப்பிட்ட இந்த சிற்பபு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கர்னூலில் நடைபெறும் தேர்வில் பங்கேற்பதற்காக, தூத்துக்குடியில் இருந்து ஜூன் 13-ம் தேதி அன்று மதிய 12.00 மணியளவில் சிறப்பு ரயில் புறப்படுகிறது. இது மறுநாள் காலை 10.15 மணியளவில் கர்னூல் டவுன் பகுதியை சென்றடையும். மறுமார்க்கத்தில் வரும் ஜூன் 17-ம் தேதி இரவு 7.30 மணியளவில் கர்னூலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.00 மணிக்கு தூத்துக்குடி வரும் சேரும்.
இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரக்குண்ட்லா, தாடி பத்திரி, துரோணாச்சலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெறும் தேர்வுக்காக, ஜூன் 13ம் தேதியன்று இரவு 7.15 மணிக்கு சிறப்பு ரயில் கொல்லத்தில் இருந்து புறப்படும். இது மறுநாள் காலை 7.40 மணிக்கு திருச்சி வந்தடையும். மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து ஜூன் 17ம் த்தியன்று இரவு 11.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 09.15 மணிக்கு கொல்லம் சென்று சேரும். இந்த ரயில் திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயில்வே தேர்வு வாரிய சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் துவங்கவுள்ளது.