
மலையாள மாதத்தின் துவக்க நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என மேல்சாந்தி பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழில் நாளை ஆனி மாதம் பிறக்கிறது. முன்னதாக இன்று மலையாள மாதத்தின் முதல் நாள் பிறந்துள்ளது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்துவைக்கிறார்.
எனினும் இன்று சிறப்பு வழிபாடு எதுவும் நடக்காது என்று தெரியவந்துள்ளது. நாளை முதல் வரும் 19-ம் தேதி தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான வழிபாடு முறைகள் நடத்தப்படவுள்ளன. அதை தொடர்ந்து 19-ம் தேதி கோயில் நடை சாத்தப்படும்.
அத்துடன் ஆனி மாத வழிபாடுகள் நிறைவடையும். அதையடுத்து ஆடி மாதம் துவங்கும் போது, மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும். முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு இன்று ஐயப்பனை வழிபட அனுமதி வழங்கப்படும்.
முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு முன்பதிவு செய்துவிட்டு அவர்கள் ஐயப்பனை தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.