2022 ஜனவரி 31 வரை பட்டாசு வெடிக்க தடை விதித்தது ராஜஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளி , தசரா உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ள நிலையில் டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா 3ம் அலைக்கான சாத்தியகூறுகள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பட்டாசு வெடிப்பு காரணமாக ஏற்படும் நச்சு புகை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனபடுத்தும் என கூறியுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு பிறகு முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் பட்டாசு புகையினால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றனர். எனவே மக்களுடைய நலன் கருதி நாளை முதல் அடுத்த ஆண்டு ( 2022 ) ஜனவரி 31 வரை அனைத்து வகையான பட்டாசுகளும் வெடிக்க தடை விதிக்க படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.