இந்தியாவில் சூரிய உதயத்தை முதலில் பார்க்கும் இடம் அருணாச்சலப் பிரதேசமாகும். இந்தியாவின் வடகிழக்கு முனையில் அமைந்துள்ள இந்த அழகிய நிலம் சீனா, பூடான் மற்றும் பர்மா (மியான்மர்) ஆகியவற்றின் எல்லைகளைக் கொண்டுள்ளது . ரிஸ்க் அதிகம் உள்ள இந்த மாநிலம் பெங்கால் ஈஸ்டர்ன் ஃபிரான்டியர் ரெகுலேஷன், 1873 இன் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்யும் காலத்தில் இருந்து இன்று வரை வடகிழக்கு மாநிலங்கள் என்பது பெரிதும் பாதுகாக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. கிழக்கு இமையமலைகள் சூழ்ந்த இந்த 7 மாநிலங்களும் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறது. அதில் அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மிசோரம், மணிப்பூர் , திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்கள் வெளிநாட்டு எல்லைகளை கொண்டது.
இந்த மாநிலங்கள் வழியாக வெளிநாட்டினர் உள்நாட்டிற்குள் அதிகம் நுழையும் வாய்ப்பு உள்ளதால் இந்த மாநிலங்களின் மீது அரசாங்கத்தின் கவனம் எப்போதும் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மிசோரம் மாநிலங்கள் வழியாக அதிகப்படியான அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்குச் செல்ல ILP ஐப் பெற வேண்டும்.
அதற்கு இது வரை பிராந்திய அலுவலகங்களுக்கு சென்று அனுமதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. அதை எளிதாக்கும் வகையில் அருணாச்சலப் பிரதேச அரசு இப்போது சுற்றுலாப் பயணிகக்காக இ-இன்னர் லைன் பெர்மிட் (eILP) வழங்குவதற்கான போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் சுற்றுலா துறை அதிகம் வளர்ந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ட்விட்டரில், முதல்வர் பெமா காண்டு, “புதிதாக தொடங்கப்பட்ட eILP சுற்றுலாப் பயணிகளுக்கு பிரத்தியேகமாக சேவை செய்வதற்கும், மாநிலத்திற்குள் அவர்களின் நுழைவை எளிதாக்குவதற்கும் ஒரு சிறந்த நடவடிக்கையாகும். சுற்றுலா eILP க்கு காத்திருப்பு காலம் இருக்காது. விண்ணப்பம், ஒப்புதல் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
மொபைல் ஓடிபி அடிப்படையிலான சுய சரிபார்ப்பு மற்றும் க்யூஆர் குறியீடு அடிப்படையிலான டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்ட eILP யுடன் கூடிய அடையாள அட்டை அடிப்படையிலான பதிவுகள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மொபைல் அடிப்படையிலான செயலியைப் பயன்படுத்தி சோதனை வாயில்களில் காவலர்களால் பயன்படுத்தப்பட்டு சரிபார்க்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.