“யாரையாவது விசாரிக்கலாம் கவிதா.. இலக்கில்லாம இப்படி எத்தனை நேரம் அலையறது..” சலிப்புடன் சொன்னான் கண்ணன்.
காருக்குள் இருந்தபடி வெளியே வீடுகளை கவனித்துக் கொண்டிருந்த கவிதாவும் வேறு வழியின்றி தலையாட்டினாள்.
“பாரு ஒரு மளிகைக் கடை வருது. அங்கே கேட்போமா..?”
“ம்..”
காரை ஒரு மரத்தடியில் ஓரம் கட்டிவிட்டு இறங்கினான் கண்ணன். கடை நோக்கி நகர்ந்தான்.
நின்றிருந்தவரிடம் பாக்கி சில்லறை தந்துவிட்டு இவரிடம் திரும்பினார் அண்ணாச்சி. “சொல்லுங்க. என்ன வேணும்..”
“ஒரு சின்ன தகவல். இங்கே அகிலான்னு சொல்லிட்டு ஒரு வயசான அம்மா.. வீட்டு வேலைக்கெல்லாம் போவாங்க. அவங்க பையன் கூட எலக்ட்ரீசியன்னு நினைக்கிறேன்.. அவங்க வீடு எதுன்னு..”
“ம்! மூக்கு கிட்ட பெருசா ஒரு மரு இருக்குமே..”
“கரெக்ட்.! அவங்களே தான்..”
“நேராப் போய் ரெண்டாவது லெஃப்டு, முன்னாடி மருதாணி மரம் இருக்கும். சாதாரண ஓட்டு வீடு..”
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு காருக்கு விரைந்தான்.
“என்னங்க தெரிஞ்சுதா..” போனில் படம் பார்த்துக் கொண்டிருந்த கவிதா தலை நிமிர்ந்தாள்.
“ம்.. பக்கம் தான் கவிதா..” பின்புறம் கவனித்து விட்டு வண்டியை நகர்த்தினான் கண்ணன். “அங்கே போய் என்ன பேசனும்ன்னு மனசுக்குள்ள ஒத்திகை பாத்துட்டே தானே. ஒவ்வொரு வர்த்தைக்கும் என் முகத்தைப் பார்க்கக் கூடாது, சொல்லிட்டேன்..” எச்சரித்தான்.
கணவனை முறைத்தாள். “இப்படி சொன்னா என்ன அர்த்தம். ரெண்டு பேருக்கும் அந்தத் தப்புல பங்கிருக்கு. என்னை மட்டும் குற்றவாளியாக்கினா எப்படி..?” முறைத்தாள்.
“அன்னைக்கு பிரச்சனை முத்தினப்பவே உங்கிட்ட ஒரு வார்த்தை சொன்னேன். விட்டுத் தொலை போனாப் போகுதுன்னு, விடாமப் பிடிச்சு தொங்கிட்டிருந்தது யாரு தப்பு.?”
“நீங்க தானே உங்க போலீசு ஃப்ரெண்டுக்கு போன் பண்ணி வரவெச்சு சூழலை இன்னும் இறுக்கம் பண்ணினீங்க.” பதில் குற்றம் சுமத்தினாள்.
“அதொண்ணும் என் தனிப்பட்ட முடிவில்லையே. நீ தானே போன் பண்ணச் சொன்னே.?”
“இப்ப என்ன உங்களுக்கு. அகிலாம்மாவை ஒண்ணும் பார்க்கவும் வேணாம், அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கவும் வேணாம், வண்டியை வீட்டுக்குத் திருப்புங்க. இத்தனை தூரம் வந்திட்டு.. என் வாயைக் கிண்டிட்டு..”
“நீயாவது அமைதியா இருக்கிறவளாவது.! சும்மா எதையாவது சொல்லாதே. ஒரு வாரம் கூட உன் மனசு தாங்காது. திரும்பவும் நச்சரிப்பே. நான் சைட்டுல பிசியா இருக்கும் போது தான் போன் பண்ணி என்னை டார்ச்சர் பண்ணுவே. நான் பதிலுக்கு கத்துவேன்..”
“……”
அவளின் முகம் கண்டு இறங்கி வந்தான். “பாரு சட்டுபுட்டுன்னு மன்னிப்பைக் கேட்டுட்டு மனசுல எதையும் வெச்சுக்காதீங்க..ன்னு எக்ஸ்ட்ரா வார்த்தைகளை சொல்லிட்டு கிளம்ப வேண்டியது தான்.. சும்மா உட்கார்ந்து கதை பேசிட்டிருக்காதே கவிதா..”
அதற்குள் அகிலாம்மாவின் வீடு வந்திருந்தது.
அகிலாவின் மகன் வினோத் கேட் அருகிலேயே நின்றிருந்தான்.
கண்ணன் மர நிழலில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்க கவிதா ஆப்பிள், சாத்துக்குடி பையுடன் இன்னொரு வழியில் இறங்கினாள். “படபடன்னு வருதுங்க..”
வினோத் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தான் எதிர்பார்க்காததால் உண்டான வியப்பு.
கண்ணன் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அவனை நெருங்கினான். ”என்னப்பா எப்படி இருக்கே. அம்மா நல்லா இருக்காங்களா.”
“ம்..” தலையாட்டினான் யோசனையுடன். கேட்டை நன்றாக திறந்து விட்டான். “அம்மாவுக்குத் தான் ஒரு வாரமா உடம்பு சரியில்லை. இருமல், தலைவலி, காய்ச்சல்ன்னு.. படுத்திட்டிருக்காங்க.”
“ஓ, மருந்து எடுத்துக்கறாங்களா..” என்றாள் கவிதா.
சின்ன வீடு தான். ஹாலின் ஓரத்தில் நார்க் கட்டிலில் படுத்திருந்த அகிலாம்மா கண்ணில் பட்டாள்.
“உட்காருங்க சார், அம்மா உட்காருங்க..” சேரை இழுத்துப் போட்டான்.
மாஸ்க் அணிந்து வந்திருக்கலாமோ எனத் தோண்றியது கவிதாவுக்கு.
“அம்மா, அம்மா இன்ஜினியர் சாரும், கவிதாம்மாவும் வந்திருக்காங்க..”
வினோத் அம்மாவை எழுப்பினான்.
கவிதா தர்மசங்கடத்துடன் கணவனைப் பார்த்தாள். ‘ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கலாம்..’
கண்ணன் அந்த சம்பவம் நடந்து எத்தனை மாதம் இருக்கும் என யோசித்தான். ஆறு இருக்குமா அல்லது ஏழு..? மறந்திருப்பாளா. மறக்க முடிகிற விசயமா அது.
அகிலாம்மா கண் விழித்திருந்தாள். வினோத் அவர்களின் வருகையை புரிய வைத்திருந்தான்.
இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். வரவேற்பில்லை. பேச்சில்லை.
இன்னும் வயதாகியிருந்தாள். முகத்தில் சுருக்கம் அதிகமாகியிருந்தது. கண்களில் வெறித்த பார்வை.
கவிதா வாய்ப்பை விடாமல் “அகிலாம்மா உடம்பு தேவலையா..” என ஆரம்பித்தாள்.
“ம்.. ஒரு வாரமா கொஞ்சம் முடியலை.” பாதிக் குரலில் சொன்னாள் அகிலாம்மா.
வாங்கி வந்தவைகளை வினோத்திடம் தந்தாள். அவன் அம்மாவைப் பார்த்தான்.
“வாங்கிக்கோ வினோத்து. அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க..”
“டாக்டர் என்ன சொல்றாரு..” இயல்பாக ஆரம்பித்தான் கண்ணன்.
“ஊசி போட்டிருக்காரு, மருந்து இன்னையோட முடிஞ்சது. நாளைக்கு திரும்பவும் போகனும்..”
அகிலாம்மா அமைதியாகவே இருந்தாள். தான் இயலாதவள் என்பது போல சுவருக்கு சாய்ந்து கண்கள் மூடிக் கொண்டாள்.
‘என்ன் பண்றதுங்க..’ என்பது போல கணவனைப் பார்த்தாள் கவிதா. ‘இன்னொரு நாள் வருவோமா.’
‘நோ, இன்னைக்கே இதை முடிச்சுடு’ என்றான் கண் ஜாடையில்.
“எதுவும் வேலைங்களா இந்தப் பக்கம்..?” வினோத் எடுத்துக் கொடுத்தான்.
“அதுவந்து.. அம்மாகிட்ட ஒரு விசயம்..”
அவள் கண்விழித்ததைப் பார்த்துவிட்டு வேகமாக ஆரம்பித்தாள். “ஃப்ரிட்ஜ்ஜு ரிப்பேர்ன்னு சொல்லி ரெண்டு நாளைக்கு முன்னாடி அதை ரெடி பண்ணினோம். அதை நகர்த்தி வெச்சு சுத்தம் பண்ணினப்போ தான் கீழே விழுந்து கிடந்த என்னோட காணாமப் போன நெக்லஸ் க்டைச்சது..”
அதிர்ச்சியுடன் பார்த்தாள் அகிலாம்மா.
தனது ஹேண்ட் பேக்கில் இருந்த அதை எடுத்து கையில் காண்பித்தாள் கவிதா.
அதையே வெறித்துப் பார்த்தாள் அகிலாம்மா. அவள் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றிருந்தது.
“ப்ச், அன்னைக்கே சொன்னேனே நல்லாத் தேடிப் பாருங்கன்னு. நான் எடுக்கவே இல்லைன்னு சத்தியம்ல்லாம் செஞ்சேனே.”
“இல்லை ஃப்ரிட்ஜுக்கு பின்னாடி எப்படிப் போயிருக்க முடியும்..? இது எப்படி சாத்தியம்ன்னு தான் அன்னைக்கு பார்க்கலை. இப்பவும் தற்செயலாத் தான்.. ரிப்பேர்ன்னு சொல்லி அதை நகர்த்திப் பார்த்தப்போ தான்..” முடிக்க முடியாது கணவனை உதவிக்கு பார்த்தாள்.
“அன்னைக்கு நடந்த விசயம் எல்லோருக்குமே மனவருத்தம் தந்திருக்கும் அகிலாம்மா. அதைப் பத்திப் பேசறதும் சங்கடம் தரக் கூடியது தான்.. ஆனா நம்ம நடந்துக்கற விதத்தை சூழ்நிலை தான் தீர்மானிக்குது.! அந்த நெக்லஸ்சு இறந்து போன அவங்கம்மாவோட வளையலை அழிச்சு செஞ்சுது. அம்மா நினைவா ஒரு பொக்கிசம் மாதிரி அதை அவ பாதுகாத்துட்டு வர்றா. காணோம்ன்னதும் பதட்டத்துல என்ன பண்றோம்ன்னு தெரியாமத் தான்..”
“என் மேல திருட்டுப் பட்டம் சுமத்தி.. நான் குற்றவாளியாகி.. போலீசு விசாரிச்சு..” அகிலாம்மா அழுதே விட்டாள்.
“அம்மாவை அதுக்கப்புறம் வேலைக்கே நான் அனுப்பலைங்க. உங்க வீட்டையும் சேர்த்து நாலு இடத்துல வேலை செய்துட்டு இருந்தாங்க. வேணவே வேணாம்ன்னு சொல்லி நிறுத்திட்டேன். மூணு வேலை சாப்பிட முடியாட்டியும் தன்மானத்தோட ஒரு வேளை சாப்பிட்டாலே போதுமே.!”
வினோத் திருத்தமாகப் பேசினான்.
“போலீசுன்னு ஏன் சொல்றீங்க. முருகேசனை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே. நம்ம வீட்டுக்கு எத்தனை முறை வந்திருக்கான். என் நண்பன் தானே. நட்பு முறையில விசாரிச்சான் அவ்வளவு தானே.” சமாளித்தான் கண்ணன்.
“மத்த நேரங்கள வர்றதுக்கும், குறிப்பிட்ட அந்த நேரத்துல வர்றதுக்கும் வித்தியாசம் இல்லையா. அதைக் கூட என்னால புரிஞ்சுக்க முடியாதா.”
பதில் பேசாமல் தலைகுனிந்தான் கண்ணன். இது, தான் மெளனமாகத் தான் இருந்தாக வேண்டிய நேரம் எனப் ப்ரிந்தே இருந்தது.
கவிதா தொடர்ந்தாள். “நகை கிடைச்ச சந்தோசத்தை விடவும் உங்களைத் தப்பா நினைச்சுட்டோமே, குற்றம் சுமத்திட்டோமேன்னு தான் மனசுக்குள்ள குற்றஉணர்வு அதிகமா இருந்தது அகிலாம்மா. நேர்ல பர்த்து மன்னிப்பு கேட்டா மட்டும் தான் மனசு ஆறும்ன்னு முடிவு பண்ணி தேடி வந்திருக்கோம். எங்களை மன்னிச்சுடுங்க..”
வினோத் அம்மாவைப் பார்த்தான்.
“ஆமாம் அகிலாம்மா. நடந்த தப்புக்காக மன்னிப்பு கேட்டுக்கறோம். உங்க மனசை வேதனைப் படுத்தினதுக்காக எங்களை மன்னிச்சுடுங்க அகிலாம்மா..”
“எட்டு வருசம் உங்க வீட்டுல வேலை செஞ்சிருக்கேன். ஒரு தப்பு உண்டா என் மேல. ஒரு குற்றச்சாட்டு இருக்கா? கடைசியில எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சு…” கண்களைத் துடைத்துக் கொண்டார். “எத்தனை ராத்திரி தூக்கம் இல்லாமத் தவிச்சிருக்கேன். நிம்மதியா சாப்பிட முடியாம எத்தனை அவஸ்தை. திருட்டுப் பட்டத்தோட அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேனே. மகமாயி.. இப்பவாவது கண்ணைத் திறந்தியே. நான் சாகறதுக்குள்ள. ரொம்ப சந்தோசம் தாயி..!”
கை கூப்பி வேண்டிக் கொண்டாள்.
“அதான் அகிலாம்மா உங்க வாயாலே எங்களை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை..” கெஞ்சல் குரலில் சொன்னாள் கவிதா.
யோசனையாகப் பார்த்தாள் அகிலாம்மா. “அதெல்லாம் எதுக்கும்மா. அதான் நகை கிடைச்சுடுச்சு, தேடி வந்து விசயத்தைச் சொல்லிட்டிங்க. அது போதாதா. சந்தோசம்!”
“அதுக்கில்லை..” கண்ணன் திரும்ப ஆரம்பிப்பது தெர்யாமல் திணறி நிறுத்தினான். ”தெரிஞ்சோ தெரியாமலோ உங்க மனசை ரொம்பவும் காயப் படுத்தி சங்கடம் பண்ணிட்டோம். நோகடிச்சுட்டோம். அது ஒரு குற்ற உணர்ச்சியாகவே எங்க மனசை உறுத்திட்டிருக்கு. உங்க வாயாலே பெரிய மனசு பண்ணி பரவாயில்லை, நான் அதை மன்னிச்சுட்டேன்னு ஒத்தை வார்த்தை சொல்லிட்டீங்கன்னா நாங்க நிம்மதியாக் கிளம்பிடுவோம்..! அதான் அகிலாம்மா இப்படி தேடி வந்து..”
“ஆமா..” கவிதா தலையாட்டினாள்.
“பரவாயில்லப்பா. அதெல்லாம் எதுக்கு. இத்தனை தூரம் தேடி வந்து விசயத்தை சொன்னீங்களே அதுவே போதும், மன்னிப்பெல்லாம் எதுக்கு..” சுவருக்கு சாய்ந்து கண்கள் மூடிக் கொண்டாள் அத்தனை தான் என்பது போல.
சில வினாடிகள் காத்திருந்தனர் கண்னனும் , கவிதாவும்.
அகிலாம்மா தவத்திலிருந்து கலைவதாக இல்லை.
“டீ, காபி சாப்பிடறீங்களா..” என்றான் வினோத்.
“இல்லப்பா எதுவும் வேணாம். கிளம்பலாமா கவிதா..” ம்னைவியின் முகத்தைப் பார்த்தான்.
கவிதா அகிலாம்மாவின் முகத்தைப் பார்த்தாள். ”அம்மா நாங்க கிளம்பறோம்..”
“சரிம்மா, சந்தோசம்..” கை கூப்பினாள் கண் திறக்காமலேயே.
இருவரும் எழுந்தார்கள். திருப்தியில்லாமல் காருக்கு வந்தார்கள். “எத்தனை மன அழுத்தம் பாருங்க. ஒரு வார்த்தை மன்னிசுட்டேன்னு சொன்னா கிரீடம் இறங்கிடுமோ. திமிர் பிடிச்சவ..”
”ப்ச். அது அவங்கவங்க மன இயல்பு கவிதா.. யாரையும் அவசரப்பட்டு தப்பா சொல்லிடாதே. ஏற்கனவே தப்பு செய்ததுக்குத் தான் இப்ப மன்னிப்பு கேட்டு வந்திருக்கோம்.”
வண்டியை ரிவர்ஸ் எடுத்து பிரிவில் திருப்பினான்.
வண்டி பார்வையை விட்டு மறைந்ததும் வீட்டுக்குள் வேகமாக வந்தான் வினோத். “பெரிய மனுசங்க பெரிய மனுசங்க தான். தப்பே செஞ்சிருந்தாலும் எப்படி தேடி வந்து மன்னிப்பு கேட்கறாங்க பார்த்தியா.. நகை கிடைச்ச விசயத்தை நம்மகிட்டே சொல்லனும்ன்னு என்ன இருக்கு?”
மகனை உன்னித்தாள். “நீ தான்டா அன்னைக்கு இவங்களை வெட்டுவேன், குத்துவேன், என் அம்மாவையா திருடின்னு சொல்றீங்கன்னு குதிச்சவன்..?”
அவன் பின்வாங்கினான். “சரி சொன்னேன் தான். அதுக்காக. இப்பத் தான் உண்மை தெரிஞ்சு போச்சுல்ல. மன்னிச்சுட்டேன்னு ஒத்தை வார்த்தை சொன்னா என்னவாம்.? பாவம், நிம்மதியாப் போயிருப்பாங்கள்ல..”
“அதனால தான் சொல்லலை..” படுக்கையை தட்டி விட்டு வசதியாக சாய்ந்து கொண்டாள் அகிலாம்மா.
—————–********************—————————