கடந்த சில நாட்களாகவே சரியான வேலைகள் வரவில்லை சுந்தருக்கு. மனைவி சுமதியின்
தொந்தரவுகளும் தாங்க இயலவில்லை அவனுக்கு. அவசர தேவைக்கு அடகு வைத்த அவளது
நகைகள் அடகுகடையில் பாடம் படித்து கொண்டிருந்தன.
அடகு கடையிலிருந்து நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள். வட்டியே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல்
வந்து விட்டது. மூத்தவன் கோகுல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றான்.
அவனுக்கு இன்னும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை.
இளையவன் சுரேஸ் ப்ளஸ்டூ படித்து வருகின்றான். சுரேஸ் ஆசைப்பட்டான் என்பதற்காக
அவனை கணக்கு குரூப்பில் சேர்த்து விட்டது தப்பாக போய் விட்டது. அவனுக்கு கணக்கு
சுத்தமாக வரவில்லை. டியூசன் வைக்கலாமென்றால், அதற்கு முன் பணமாக இருபதாயிரம்
கட்ட வேண்டுமாம். ” இந்த கொரனோ காலத்தில் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவேன்…”,
சுந்தர் மனசுக்குள் முனகியப்படியே சாலையை வெறித்தான்.
இந்த சூன் மாத வெயிலுக்குப் பயந்து, சாலையில் ஒரு ஈ காக்கையைக் கூட காணவில்லை.
சுந்தரின் நாக்கு ஏகத்துக்கும் வறண்டு காணப்பட, பக்கத்தில் இருந்த நன்னாரி சர்பத் கடைக்கு
புறப்பட்டான். அந்த சர்பத் கடையில் ஓரளவு கூட்டம் இருந்தது. ஒரு முறை இந்தக் கடையில்
வந்து நன்னாரி சர்பத் அருந்தியவர்கள் அதன் சுவைக்கு அடிமையாகி மீண்டும், மீண்டும் வந்தனர்.
எத்தனையோ குளிர் பானங்கள் சந்தைக்கு வந்தாலும், இந்தக் கடையின் நன்னாரி சர்பத்தின்
சுவையே தனிதான். பதினைந்து ரூபாய் கொடுத்து சர்பத் டோக்கனை பெற்றுக் கொண்ட சுந்தர்,
அந்த டோக்கனை சர்பத் மாஸ்டரிடம் நீட்டினான். டோக்கனை பெற்றுக் கொண்ட அந்த மாஸ்டர்
சுந்தரைப் பார்த்து சிநேகமாய் சிரித்தான்.
” ஐஸ்ஸை கம்மியாப் போட்டு…. பாதாம் பிசினை தூக்கலாப் போடு தம்பி…”, சுந்தர் சொல்ல,
மாஸ்டர் மென்மையாய் சிரித்தான்.
” நீங்க சொல்லவே வேண்டாம். உங்க டேஸ்ட் எனக்கு தெரியும் ணே…”, சொல்லிய மாஸ்டர்
ஒரு கண்ணாடி டம்ளர் வழிய, வழிய அந்த சிகப்பு நிற திரவத்தை சுந்தரிடம் நீட்டினான். சர்பத்தை
பெற்றுக் கொண்ட சுந்தர் உதட்டினில் வைத்து ஆர்வமாய் உறிஞ்ச, வழுக் வழுக்கென பாதாம்
பிசின் நாக்கில் தட்டுப்பட்டது. அந்த பாதாம் பிசினை சுவைத்து மென்று தின்றான்.
” என்னண்ணே…! வியாபாரம் பிச்சிகிட்டு ஓடுது போலிருக்கு…” மாஸ்டர் நமட்டு சிரிப்போடு
கேட்க சுந்தர் வெறுமையாய் புன்னகைத்தான்.
” கொரனோ காலம்ல. அதான் வியாபாரம் டல்லடிக்குது…”
” என்னமோ போங்கண்ணே..! இந்த வயித்துக்கும்…வாயிக்கும் தீனி போடறத்துக்குள்ள…போதும்
போதும்னு ஆகிடுது. கடவுள் எப்பதான் நமக்கெல்லாம் கண்ணை திறக்கப் போறான்னு
தெரியலே…” வெறுப்பாய் சொன்ன மாஸ்டர், அடுத்த டோக்கனுக்கு சர்பத் போட கண்ணாடி
டம்ளரை எடுத்தான். சர்பத் குடித்து முடித்த சுந்தர் தன் கடைக்கு வந்தான். இரண்டு மணிக்கு
மேல்தான் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு போக வேண்டும். வீட்டுக்குப் போனால் அருமை
மனைவி சுமதி, அவன் நிலமை புரியாமல், அடகுகடைக்கு வட்டிக் கட்ட பணம் கேட்டு நச்சரிப்பு
செய்வாள். அதற்கு பேசாமல் மதிய சாப்பாட் டிற்கு வீட்டுக்கு போகாமல், கடையிலேயே படுத்து
விட முடிவு செய்தான் . கடை மேசையில் காலையில் சுடச்சுட செய்திகளை சுமந்து வந்த
தினத்தந்தி, சீந்துவாரின்றி கிடந்தது. தினத்தந்தியை எடுத்த சுந்தர் முதல் பக்க செய்திகளில் கண்
களை பதிக்க ஆரம்பிக்க, இரக்கமே இல்லாமல் அவன் சட்டை பையில் இருந்த அலைபேசி
அலறியது. அலைபேசியை எடுத்த வன், அழைத்த எண்ணை கவனித்தான். புதிதாக இருந்தது.
எடுத்து காதினில் வைத்தான்.
” ஹலோ…யார் பேசறது…?”
” ஹலோ…! நான் கணேசன் பேசறேன். சுந்தர் தம்பியா…?
” கணேசனா..? யாருன்னு தெரிய லையே…”
” என்னத் தம்பி…! அதுக்குள்ள…. என்னை மறந்துட்டீங்களா…? ரெண்டு வருசத்துக்கு முந்தி என்
புது வீட்டுக்கு, மரச்சாமான்லாம் நீங்க தானே செஞ்சி கொடுத்தீங்க…?”
“ஐயையோ….சார் ! நீங்களா…? காலையிலேர்ந்து சரியான தலை வலி. அதான் சட்டுன்னு
ஞாபகத்துக்கு வரலை. சாரி சார்…! நல்லா இருக்கீங்களா சார்…?”
” நல்லா இருக்கேன் தம்பி…! என் பொண்ணுக்கு கல்யாணம் முடி வாகியிருக்கு…”
” ரொம்ப சந்தோசம் சார்…”
” பொண்ணுக்கு சீர் தரப் போற கட்டில், பீரோ, டைனிங் டேபிள், டிரெஸ்சிங் டேபிள்லாம் நீங்க
தான் செய்யனும்…”
” செஞ்சிடுவோம் சார்…”
” முன்ன வீட்டுக்கு செஞ்ச மாதிரி யே….நல்லவிதமா செஞ்சிடுங்க…”
” ஓகே சார்…”
” இன்னைக்கு நல்ல நாளா இருக்கு. சாயந்தரம் நாலு மணிப் போல கடைக்கு வந்து, அட்வான்ஸ்
பணம் தரேன்…”
“சரிங்க சார்…”
” சாயந்தரம் கண்டிப்பா கடையில் இருப்பீங்கல்ல…”
” கண்டிப்பா இருப்பேன் சார்…”
” சரிப்பா…மத்த விசயங்களை நேர்ல பேசிக்கலாம்…”, பேசி முடித்த கணேசன் அலைபேசியை
துண்டித்தார். சுந்தரின் மனம் முழுவதும் மகிழ்ச்சியால் மத்தளம் கொட்ட தொடங்கியிருந்தது.
இந்த வேலையை முடித்து கொடுத்தால், கண்டிப்பாக ஒரு ஐம்பது அல்லது அறுபதாயிரம்
கையில் நிற்கும். ஓரளவு குடும்பத்தின் அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ளலாம்.
மீதிப் பண மிருந்தால் பழைய விலையிலாவது ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிட முடிவு செய்தான்.
ஸ்மார்ட் போன் வாங்க வேண்டுமென்பது, சுந்தரின் நீண்ட நாள் கனவு. இன்றைக்கு வந்துள்ள
ஆர்டர் மூலம், தன் நெடுநாள் கனவும் நிறைவேறக் கூடிய வாய்ப்புள்ளதை நினைத்து, சுந்தர்
பரவசமடைந்தான்.
அதே பரவசத்தோடு மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான் கடையை பூட்டிய
சுந்தர், வெளியே வந்து தன் இருசக்கர வாகனத்தை கிளப்பினான். அந்த பழைய வாகனம் கிளம்ப
அடம் பிடித்து சண்டி த்தனம் செய்ய, சுந்தர் எரிச்சலுற்றான். ஓங்கி ஏழெட்டு முறை உதைக்க,
ரோசப்பட்ட அந்த வாகனம், டுர்ர்ர்ரென பெரும் சப் தத்தை கொடுத்த படி கிளம்ப தயரானது.
சுந்தர் தன் வாகனத்தில், காந்தி ஜி சாலையைக் கடந்து, புதாற்று பாலத்தில் ஏறினான். ஆற்று
பாலம் முடியும் இடத்தில், சின்னதாய் கூட்டம் கூடியிருந்ததை கவனித் தான். அவசரமாய்
வண்டியை நிறு த்தியவன், கூட்டத்தை பிளந்துக் கொண்டு உள்ளே புகுந்தான். அடுத்த நொடியே
ஏகத்துக்கும் அதிர்ந்துப் போய் நின்றான்.
கூட்டத்தின் நடுவில், இளைஞன் ஒருவன் மயங்கி கிடந்தான். அவனது வலதுக் காலிலிருந்து
இரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.
” என்ன சார் ஆச்சு..?” , அருகில் நின்றவரிடம் பதறிப் போய் கேட் டான்.
” லாரிக் காரன் இடிச்சிட்டு போயி ட்டான் சார்…”
” ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக லையா…?”
“108 க்கு போன் பன்னிருக்கோம். இன்னும் அது வரலை சார்…:
” ஐயையோ…இரத்தம் அதிகமா போய்கிட்டே இருக்கு சார். 108 வர்றத்துக்குள்ள…உசுரு போச்சு
னா…என்னப் பண்றது. பாவம் சின்னப் பையனா இருக்கானே…” பதறிய சுந்தர் சுற்று முற்றும்
பார் த்தான். ஆட்டோக்காரர் ஒருவர் தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு அந்த கூட்டத்தில் நின்றுக்
கொண் டிருந்தார்.
” ஹலோ…சார். பாவம் சார்…அந்த பையன். இரத்தம் அதிகமா வெளி யேறி கிட்டு இருக்கு. 108
வர்றதுக்கு லேட்டாகும் போல..! நீங்க கொஞ்சம் உதவி செஞ்சா… இந்த பையனை
ஆஸ்பத்திரிக்கு, கொண்டு போகிடலாம்…”, சுந்தர் கெஞ்சலாய் கேட்க, அந்த ஆட்டோ காரர் மனம்
இறங்கினார். இருவரும் சேர்ந்து அடிப்பட்ட அந்தப் பையனை ஆட்டோவில் வைத்து,
மருத்துவமனையை நோக்கி விரைந்தனர்.
” இந்தப் பையனை உங்களுக்கு தெரியுமா சார்…”, ஆட்டோக்காரர் கேட்க , சுந்தர் உதட்டை பிதுக்கி
னான்.
” அப்புறம் ஏன் சார் ஆஸ்பத்திரிக் கு கொண்டுப் போறீங்க….?”, ஆட் டோ டிரைவர் கேட்க, சுந்தர்
மிகவு ம் உஷ்ணம் அடைந்தான்.
” ஏய்யா…, பட்ட பகல்ல…இந்த சூன் மாச வெயில்ல…ஒரு உயிரு லாரில அடிப்பட்டு…, வாழ்வா
சாவான்னு போராட்டம் நடத்திக் கிட்டு கிடக்கு. அதெப்படிய்யா…. எல்லோரும் கூடி நின்னு
வேடிக்கை பார்க்கறீங்க…? பாவம்யா…. வாழ வேண்டிய புள்ளையா…இவன். எனக்கு மனசு
கேட்கலை. அதான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறேன்….”
” போலீஸ் கீலீசுன்னு…கேஸ்ல மாட்டிக்குவோம்னு தான் சார்… பயப்பட வேண்டியிருக்கு….”
” எந்த போலீஸ் வந்தாலும், நான் பார்த்துக்கறேன். இதோ…ஆஸ்பத் திரியே வந்திடுச்சு.
வா…ரெண்டு பேரும் பையனை உள்ளே தூக்கி ட்டு போவோம்…” சிவகாமி மருத்துவமனை.
வரவேற்பறை பெண் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
” ஏன் சார்..ரோட்டுல அடிப்பட்டு கிடந்தவனையெல்லாம் இங்கே தாக்கிட்டு வந்து எங்க உயிரை
எடுக்கறீங்க…?”
” இரத்தம் அதிகமா போகுதும்மா. சீக்கிரம் வைத்தியத்தை ஆரம்பிங் கம்மா…”
” முன்பணமா ஐம்பதாயிரமாவது கட்டுங்க. அப்பதான் ட்ரீட்மெண்டை ஆரம்பிப்போம்…”, பணம்
என்றவு டன் சுந்தரின் முகம் சுருங்கிப் போனது.
” நீங்க ட்ரீட்மெண்டை ஆரம்பிங்க. நான் புரட்டிட்டு வர்றேன்…”, சுந்தர் கெஞ்ச, அந்தப் பெண்
மேலும் எரிச்சலுற்றாள்.
” பேசாம ஜி.ஹெச்சுக்கு கொண்டு போங்க சார். அங்கதான் இலவசமா வைத்தியம்
பார்த்துக்கலாம்…”
” அங்கேப் போனா…டியூட்டி டாக்டர் இல்லே. நர்ஸ் இல்லேன்னு நேரத்தை கடத்துவாங்க.
அதனால தான் நான் இவனை இங்கே …. கொண்டு வந்தேன்…”, சுந்தர் அந்த வரவேற்பரை
பெண்ணிடம், கையெடுத்து கும்பிடாத குறையாக கெஞ்சிக் கொண்டிருக்க, திடீரென்று ‘சுந்தர்’ என
அவனை யாரோ அழைத்தனர். சுந்தர் சடக் கென திரும்பி பார்த்தான்.
அவனுடன் படித்த, நண்பன் ரவி அங்கு வந்துக் கொண்டிருந்தான். ரவி இந்த மருத்துவ
மனையில் தான் பணியாற்றுவதாக, தன்னிடம் எப்போதோ சொன்னது ஞாபகத்துக்கு வர, சுந்தர்
சிறிது நிம்மதி அடைந்தான்.
” என்னடா பிரச்சனை…?” மருத்துவர் ரவி வினவ, சுந்தர் நடந்ததைச் சொன்னான்.
” ஏண்டா…? நீ இன்னும் மாறவே இல்லையா…? படிக்கிற காலத்து லேதான்…இரக்கம் சுபாவம்
அதிகமா இருந்துச்சு நினைச்சேன். இப்பவும் அப்படியே இருக்கே…?”
” ரவி வளவளன்னு பேசிகிட்டு இருக்காதே. சீக்கிரம் இந்த பையனுக்கு வைத்தியத்தை ஆரம்பிக்க
சொல்லு…”
” என்னோட சொந்த ஆஸ்பத்திரியா இருந்தா…இலவசமாவே வைத்தியம் பார்க்கலாம். நான்
இங்கே.. வேலை செய்யறவனாச்சே…”
” ரவி இந்த பையனுக்கு உடனே வைத்தியத்தை ஆரம்பி. நான் போய் பணத்தை புரட்டிட்டு
வந்திடறேன்…”, பொறுப்பை ரவியிடம் ஒப்படைத்து விட்டு, சுந்தர் தன் கடைக்கு அவசரமாய்
வந்தான்.
கடையை திறந்தவன், கடையில் மாட்டியிருந்த, சாமி படங்களுக்கு கீழே இருந்த உண்டியலை
எடுத்து உடைத்தான். அந்த உண்டியலில் மஞ்சள் கயிறொன்று இருந்தது. அதில் தாலி, காசு,
நாணல், குண் டென மின்னிக் கொண்டிருந்து. எந்த சூழ்நிலையிலும்,
தன் அம்மாவின் அந்த மஞ்சள் கயிற்று பொருட்களை, விற்கவோ , அடமா னம் வைக்கவோ
கூடாதென, நான்கு வருடங்களாய் வைராக்கியமாய் இருந்தவன். இன்று அந்த பையனுக்காக,
அதனை அடகு வைக்க முடிவு செய்தான். அடகுக்கடை.
” என்னண்ணே…! மூணு பவுனுக் கு மேலே இருக்கும். வெறும் அம்ப தாயிரம் தான் தர்றீங்க….?”
“தாலி கயிற்று பொருளையெல் லாம் வாங்கறது இல்லே தம்பி. ஏதோ…வைத்திய
செலவுக்குன்னு சொன்னதால பணம் கொடுத்தேன். வேணுமா…வேணாமா…?”, அடகுக்
கடைக்காரன் இரக்கமற்ற பதிலுரைக்க, நொந்துப் போன சுந்தர், அந்த ஐம்பதாயிரத்தை பெற்றுக்
கொண்டு, மருத்துவ மனைக்கு விரைந்தான். சிவகாமி மருத்துவமனை. மருத்துவர் ரவி
மகிழ்வோடு வெளியேவர, சுந்தர் அவனருகே விரைந்தான்.
” பணத்தை கட்டிட்டேன்டா. அந்த பையன் எப்படிடா இருக்கான்…?”
” நீ…உடனே இங்கே கொண்டு வந்து சேர்த்ததால…பையன் அபாய கட்டத்தை தாண்டிட்டான்.
உன்னால அவனுக்கு மறு பிறவி வந்திருக்குன்னே சொல்லலாம்…”
” ரொம்ப சந்தோசம்டா. அவங்க குடும்பத்துக்கு சொல்லியாச்சா…?”
” பையன் கண் முழிச்சதும்…, அவனிடம் விபரம் கேட்டுட்டு வீட்டுக்கு தகவல் சொல்றேன்.
ஆமா…நீ இன்னும் சாப்பிடலையா? முகமே சோர்வா இருக்கு…” ரவி வினவ, சுந்தர்
இல்லையென்று தலையாட்டினான்.
” டேய்…சீக்கிரம் போய்….சாப்பிட்டு வா..! நீ பாட்டுக்கு மயக்கம் எதுவும் போட்டுடப் போற…”, ரவி
வற்புறுத்த, சுந்தர் சாப்பிட்டு வர வீட்டுக்கு கிளம்பினான். அந்த நேரம் பார்த்து
அலைபேசி அவசரமாய் ஒலிக்க,
எடுத்து பார்த்தான். கணேசன் தான்.
அவசரமாய் போனை காதில் வைத்தான். ஆக்ஸிடெண்ட் பிரச்சனையில் கணேசனை
சுத்தமாய் மறந்து போனதை நினைத்து நொந்துப் போனான்.
” சார் . நான் சுந்தர் பேசறேன்”
” என்னத் தம்பி கடை பூட்டியிருக்கு?”
” சாப்பிட மத்தியானம் வீட்டுக்கு
போனப்போ ஒரு ஆக்ஸிடெண்ட்
சார்”
” என்னத் தம்பி. முதன் முதலா என்
பொண்ணு கல்யாணத்துக்கு சீர் வரிசை செய்ய, அட்வான்ஸ் பணம்
கொடுக்க வந்தேன். நீங்க ஆக்ஸி
டெண்ட் அது இதுன்னு அபசகுணமா
பேசறீங்களே”
” நீங்க கடையிலேயே நின்னுங்க சார்.
நான் அரை மணி நேரத்திலே வந்திடறேன்”
” தம்பி. நீங்க வர்ற வரைக்கும் நல்ல
நேரம் நமக்காக நிக்காது தம்பி. அதனால இந்த ஆர்டரை வேற கடையிலே கொடுக்கலாம்னு
இருக்கேன்”
” சார்…அவசரப்படாதீங்க. இதோ
வந்திடறேன்” சுந்தர் கெஞ்சலுடன்
சொல்ல சொல்ல, காதில் வாங்காத
கணேசன் அலைபேசியை அவசரமாய் துண்டித்தார்.
வீட்டில் சுந்தரின் குடும்பமே கொலை வெறியில் இருந்தது. சுமதி சாப்பாட்டு தட்டினை ‘ நங்’
கென பெரும் சப்தம் எழுப்பி, வைத்து விட்டு சென்றாள். வீட்டில் மயான அமைதி நிலவியது.
சுந்தருக்கு எதுவும் புரிபடவில்லை. சிறிது நேரத்தில் சுமதியே அந்த அமைதியை கலைத்தாள்.
” அடகுகடைக்கு போனீங்களா..?”
” ம்…எப்படி தெரியும்…?” ”
எதிர் வீட்டு அக்காவும்…அடகு கடைக்கு வந்துச்சாம்…”
” ஓ..” ”
என்ன ஓ…? அடகு வச்ச பணத்தை என்ன செஞ்சீங்க…?”, சுமதி ஆங்காரமாய் கேட்க, சுந்தர் நடந்
தவற்றை சொல்ல சொல்ல, சுமதி பத்ரகாளியாய் மாறிப் போனாள். ”
ஏய்யா…நம்ம வீட்டுலேயே…ஏகப்பட்ட பிரச்சனைகள் கொட்டி கிடக்குது.
நீ…என்னடான்னா…எவனோ பெத்தப் புள்ளைக்கு, வைத்தியம் பார்க்க, பணத்தை வாரி வழங்கிட்டு
வந்து, இங்கே நிற்கறே…!” சுமதி ஊரே அதிரும் படி கத்த ஆரம்பிக்க, சுந்தர் பாதி சாப்பாட்டோடு
எழுந்தான்.
அவசரமாய் கை கழுவியவன் சிவகாமி மருத்து வமனைக்கு விரைந்தான். சிவகாமி
மருத்துவமனை. கேண்டீனில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த மருத்துவர் ரவி இவனைக்
கண்டதும் பரவசமானான்.
” டேய்…அந்த பையன் கண்ணு முழிச்சிட்டான்டா. விபரம் கேட்டு அவன் வீட்டுக்கு தகவல்
சொன்ன உடனே..அந்த பையனோட அப்பா பதறியடிச்சு உடனே வந்துட்டார். உன்னைப் பத்தி
சொன்னவுடனே நெகிழ்ந்து போயிட்டார். உடனே உன்னைப் பார்க்க ஆவலா இருக் காருடா…”, ரவி
பூரிப்பாய் சொல்லி யப்படி, மருத்துவமனையில், அந்த பையன் இருந்த அறைக்கு சுந்தரை
அழைத்துச் சென்றான்.
” சார் உங்கப் பையனை காப்பாற் றியவர் வந்திருக்கார் பாருங்க…” ரவி சொன்னவுடன், தன்
மகன் முகத்தருகே குனிந்தபடி இருந்த அந்த நடுத்தர வயது மனிதர் நிமிர, சுந்தர் நிறையவே
ஆச்சரிய ம் அடைந்தான். கணேசன் அங்கே நின்றிருந்தார்.
” சார் நீங்களா..?” சுந்தர் ஆச்சரியமாய் கேட்டான்.
” சுந்தர் நீங்களா..? என் மகனை காப்பாற்றியது. நீங்கதான்னு நான் கொஞ்சம் கூட..
எதிர்பார்க்கலையே. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியலையே…”, தழு
தழுத்த குரலில் சொன்ன கணேசன் ஓடி வந்து சுந்தரை இறுக அணைத்து கொண்டு கண்ணீர்
உகுத்தார்.
ஒரு வாரம் கழிந்தது. சுந்தர் வழக்கம் போல் ‘ லக்கி’ டிரேடர்ஸி ல் அமர்ந்து ஈ ஓட்டிக்
கொண்டிருந்தான். திடீரென வாசலில் ஏதோ அரவம் கேட்க, நிமிர்ந்து பார்த்தான். கணேசன்
கக்கத்தில் மஞ்சள் பையை வைத்துக் கொண்டு கடைக்குள் நுழைந்தார்.
” வாங்க சார். வாங்க..! இங்கே உட் காருங்க…”, அருகில் இருந்த நாற்காலியை நோக்கி சுந்தர்
கைக்காட்ட, கணேசன் பூரிப்பாய் வந்து அமர்ந்தார்.
” பையன் எப்படி இருக்கான்..?: ”
“உங்க புண்ணியத்துல…ரொம்ப நல்லா இருக்கான் தம்பி…”
” என்ன சார் பெரிய வார்த்தையெ ல்லாம் சொல்லிகிட்டு…”
” இல்லைத் தம்பி..! உண்மையைத்தான் சொல்றேன். எங்க வீட்டு குல விளக்கை, காப்பாற்றிய
சாமியாச்சே நீங்க..”
” ஐயோ…போங்க சார் எனக்கு ரொம்பவே கூச்சமா இருக்கு..” சுந்தர் கணேசனின் புகழ் மொழியில்
நெளிய ஆரம்பிக்க, கணேசனே, மீண்டும் பேச்சை தொடர்ந் தார். தன் கக்கத்தில் இருந்த அந்த
மஞ்சள் பையினை சுந்தரிடம் நீட் டினார்.
” தம்பி…! இதுல ஒரு இலட்ச ரூபா பணமிருக்கு…”
” எதுக்கு சார் இவ்வளவுப் பணம்..?” என் பையன் வைத்திய செலவுக்கு, ஆஸ்பத்திரிலே கட்டின
ஐம்பதாயிரமும், என் பொண்ணு கல்யாண சீர் வரிசை செய்ய, அட்வான்ஸ் பணம்
ஐம்பதாயிரமும்… இந்தப் பையிலே இருக்கு…” கணேசன் பையை நீட்ட, சுந்தர் ஆர்வமாய் பெற்றுக்
கொண்டான். மஞ்சள் பையிலிருந்து, ஐம்பதா யிரம் பணத்தை மட்டும் எடுத்து மேசை டிராவுக்குள்
வைத்தான். மீதி ஐம்பதாயிரத்தை கணேசனி டமே கொடுத்தான்.
” ஏன் தம்பி…பணத்தை திரும்ப என்னிடமே கொடுக்கறீங்க…”, கணேசன் புரிபடாமல் கேட்டார்.
” சார் உங்க ஆர்டரை ஏன் என்னி டம் தர்றீங்க..? உங்கப் பையனை நான் காப்பாத்தினேங்கறதால
தானே…?”
” ஆமாம் தம்பி..! “, கணேசன் பூரி ப்பாய் சொன்னார்.
” ஐயோ…என் மனிதாபிமான உண ர்வை விலை பேசறீங்களே…? இந்த பணத்தை வாங்கவே…என்
மனம் கூசுதுங்க சார். விபத்துல ஒரு பையனை காப்பாத்தினேன்னு, நான் சொன்னவுடனே…,
அபசகுனம் அது இதுன்னு… வசனம் பேசினீங்க. உங்கப் பையனத்தான் நான், காப்பாத்தி னேன்னு
தெரிஞ்சதும், இப்போ என் மேலே இரக்கப்பட்டு….. கேன்சல் பண்ணின ஆர்டரை …. திரும்பவும்,
என்னிடமே தர்றீங்க…”
” ஏன் தம்பி பழைய விசயத்தை போய் இப்ப கிளறுறீங்க…?”
” இல்ல சார். இன்னைக்கு…நீங்க தருகின்ற இந்த ஆர்டர்…உங்க பையனை காப்பாத்தினதுக்கு,
எனக்கு லஞ்சம் தர்ற மாதிரி இருக்கு. உங்க ஆர்டர் எனக்கு வேணாம். தயவுசெஞ்சி வேற
இடத்திலே உங்க ஆர்டரை கொடுத்துடுங்க…” சுந்தர் நிதானமாய் சொல்லச் சொல்ல , கணேசன்
அப்படியே உறைந்துப் போய் அமர்ந்திருந் தார்.
…………………………………………………………..