ப்ரியாவிற்கு ஒரு 35வயது இருக்கும். திருமணமான இந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் எப்போதாவது திருவிழா, காது-குத்தல் கல்யாணம் என்கிற சாக்கில் தன் பெற்றோரையும் பார்த்து விட்டு போகலாம் என்று வந்து போவாள். அப்படியான ஒரு பயணத்தில், காரில் தனது பிறந்த ஊருக்கு தன் பெற்றோரையும் உறவினரையும் காண மகிழ்ச்சியோடும் மிகுந்த ஆர்வத்தோடும் காரின் ஜன்னல் ஓரம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி பயணம் செய்து கொண்டு இருக்கிறாள். சிறிது நேரத்தில் கார் ஓரிடத்தில் நிற்கிறது; பிரியா காரை விட்டு இறங்கியவுடன் கூட்டம் கூடுகிறது (பின்னணி குரல்கள்)… “எப்படி இருக்க? நல்ல இருக்கியா?!! எத்தன வருஷம் ஆச்சு உன்னை பார்த்து” என்று அங்கு கூடியவர்கள் ப்ரியாவிடம் நலம் விசாரிக்கின்றனர்.
பிரியா தன் ஊர்க்காரர்களிடம் பேசிவிட்டு தன் அம்மா வீட்டினுள் செல்கிறாள். அம்மா காபி போட்டு கொடுக்கிறாள். பிரியா காபி குடித்துக் கொண்டிருக்கும் போது, “என்னடி எப்போ வந்த?.. “ என்று அவள் பக்கத்தில் வந்து அமர்கிறாள் அவளின் தோழி பானு. சிறிது நேரம் ஊர் நிலவரங்களையும் வழக்கமான நலம்-விசாரிப்புகளையும் பேசிவிட்டு…
“ஏய் அமரன் டைலர்…”.என்று பானு பேச்சை இழுக்க… ப்ரியாவின் கண்ணில் மின்னல் தோன்றி மறைகிறது. சற்று புத்துணர்ச்சியோடு (அது காபி குடித்ததால் வந்தது அல்ல)“என்னடி, சொல்லுடி”– என்று பானுவை பார்த்து கேட்கிறாள்… :அமரன் டைலர் இறந்துட்டாருடி”…என்று பானு சொல்லும் வார்த்தை பேரிடியாய் காதில் கேட்க…..மின்னிய கண்களில்; இப்போது தூரல் லேசாய் எட்டி பார்க்கிறது…..
கலங்கிய கண்ணீரின் ஊடே கானலாய் காட்சி விரிகின்றது……
#Flash Back…
ஆதவன் ஒளியையும்; வான் மழையையும் அப்படியே வகுப்பறைக்குள் மடை மாற்றும் கீற்று கொட்டகையில் இயங்கும் பழைய அரசாங்க பள்ளிக்கூடம் அது… அங்கே குழந்தைகள் மதிய உணவு வாங்கி செல்கின்றனர். உயர் வகுப்பு பிரிவினர் வசிக்கும் ஊரின் நடுப்பகுதியில் இருக்கிறது இந்த பள்ளிக்கூடம்… வேற்று சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகள் குடிக்க தண்ணீர் கேட்டால் கூட, அங்கே வசிப்பவர்கள் கொடுக்க மாட்டார்கள்… அத்தி பூத்தாற் போல அங்கே ஒரு வீட்டு திண்ணையில் மட்டும் இந்த ஐந்தாறு(5 or 6) தாழ்ந்தசாதி குழந்தைகள் அமர்ந்து உணவு உண்ண இடம் தருவார்கள்.. குடிநீரும் பாரபட்சமின்றி தருவார்கள்…மேலும் உணவு இடைவேளை நடுவில் குழந்தைகள் அங்கே அமர்ந்து விளையாடுவதும் உண்டு… அது டைலர் வீடு…. அங்கே 2௦ வயது மதிக்க தக்க வாலிபன் அவர் தான் அந்த அமரன் டைலர்…..ஆம் தன் அப்பா தனக்காக விட்டுப்போன அந்த ஓட்டு வீடும் இந்த தையல் மெஷினையுமே வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர். உணவு இடைவேளையில் தங்களது திண்ணையில் அமர்ந்து விளையாடும் குழந்தைகளோடு பேசிக்கொண்டிருப்பார். இடையிடையே துணிகளையும் தைப்பார்… அங்கே விளையாடும் சிறுவயது ப்ரியாவுடன் அவருக்கு எப்போதுமே தனி அன்பு உண்டு… டஸ்டர்(duster) எல்லாம் தைத்து கொடுப்பார். அவ்வப்போது அமரன் டைலர் குழந்தை ப்ரியாவிடம், “என்னை கல்யாணாம் கட்டிக்கிறியா?” என்று பரிகாசம் செய்வதும் உண்டு… அவர் அப்படி கேட்கும்போதெல்லாம் பிரியா சிறிது புன்னகை கலந்த வெட்கத்தில் “ஊம்ஹும் மாட்டேன்” என்பதை சைகையிலேயே தலையை மட்டும் ஆட்டி விட்டு ஒடிவிடுவாள். இப்படியாக காலம் சென்று கொடிருக்க, அவள் ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறை கழித்து மீண்டும் பள்ளிக்கு வந்த நாளில் அந்த வீட்டினில் டைலரிங் மெஷின் சத்தமும் இல்லை, டைலரும் இல்லை…தன்னிடம் அன்போடும் அக்கறையோடும் பழகி, ‘தங்கள் வீட்டு பிள்ளைபோல்’ கவனித்துக்கொண்ட அந்த அமரன் டைலர் அங்கு இல்லாதது அவளுக்குள் ஒரு ஏமாற்றத்தை தந்தது.. தினமும் பள்ளி முடிந்தவுடன் அந்த திண்ணையை வெறிச்சோடி பார்த்து விட்டு தான் தினமும் அந்த தெருவை கடந்து போவாள்.
பின்பு தான் தெரிந்தது அமரன் டைலர் பாம்பேயில் ஒரு பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார் என்று.
நாட்கள் கழிந்தது. ப்ரியாவும் பத்தாம் வகுப்பு பாஸாகி வெளியூரில் உள்ள பள்ளியில் மேல்நிலை வகுப்பில் சேர்ந்து படிக்க துவங்கி விட்டாள்.
பெரிய மனுஷியான பிறகு பாவாடை தாவணியில் இப்போதுதான் தன் சொந்த கிராமத்திற்கு திருவிழாவிற்கு செல்கிறாள். அங்கு ஒரு ஆள் நல்ல மிடுக்காக அழகாக முறுக்கிய மீசையுடன் ப்ரியாவை வச்ச கண் வாங்காமல் பார்த்தபடி பின் தொடர்கிறான். யாரோ தன்னை பின்தொடர்வதை அறிந்து அது யாராக இருக்கும் என யோசித்தபடி இருக்க, அந்த முறுக்கு மீசை ஆளும் அவள் பார்க்கும்போது அழகிய புன்னகை சிந்துகிறார். அவளிடம் ஏதோ சொல்ல; பேச தவிப்பதை போல மீண்டும் மீண்டும் பின் தொடர்கிறார். இவளும் சிறிது பயத்துடனும் குழப்பதுடனும்.. மறைந்து மறைந்து செல்கிறாள். இரவெல்லாம் அவளுக்குள் ஏதோ இனம் புரியாத தவிப்புடன் தூங்கி விட்டாள். மறுநாள் தன் தோழியுடன் கடை தெருவிற்கு தங்களது பள்ளிக்கால நண்பர்களை பற்றி பேசிக்கொண்டே செல்கிறார்கள். அப்போது அவளது தோழி பானு, “ஏய், டைலர் ஊர்ல இருந்து வந்திருக்காருடி, நான் அவர நேத்து தான் அவங்க வீட்டுகிட்ட பார்த்தேன்” என சொல்ல… ப்ரியவிற்குள் சின்ன எண்ண அலைகள்… “அமரன் டைலருக்கு என்னைய ஞாபகம் இருக்குமா?!, அவருக்கு நம்மள அடையாளம் தெரியுமா?!” என்று இப்படியாக அவளின் எண்ண ஓட்டங்கள் இங்கும் அங்கும் அலைய, “உன்ன பத்திடைலர் நேத்து விசாரிச்சாருடி”. என்று பானு சொன்னதும், அவளுக்குள் மகிழ்ச்சி…ஆர்வம்….” அவர பார்த்து பல வருடங்கள் ஆகிடுச்சு அவர் எப்படி இருப்பாருன்னு தெரியல… அவர பார்க்கனுமே”னு சிந்தித்தபடி ஒரு வித எதிர்பார்ப்புகளோடே பிரியா நடக்கிறாள், திடீரென்று அவள் முன்னால் அந்த திருவிழாவில் பார்த்த அதே ஆள் வந்து நிற்க, “ஏய் டைலர்டி.” என்று பானு சொல்ல… அவள் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் அவரையே உற்று பார்க்க, “என்ன பிரியா எப்படி இருக்க?, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து நிக்கிறியே” என்று பேச தொடங்க… பிரியாவோ, “நம்மை நேற்று தொடர்ந்தது, நம்ம அமரன் டைலர் தானோ” என்று எண்ணி சற்று ஆசுவாசமடைகிறாள். முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து இருந்தது… சற்று நேரம் ஏதும் பேசாமல் அவரையே உற்று பார்த்துக்கொண்டிருந்தவள்.. மெதுவாக பேச ஆரம்பிக்கிறாள்.
அதன் பிறகு எப்போதாவது அந்த ஊருக்கு வரும்போதெல்லாம் அவரை எங்காவது சந்தித்தால் சகஜமாய் பேசுவது உண்டு……
மீண்டும் கல்லூரி படிப்பிற்காக வெளியூர் சென்று விட்டாள். ஊருக்கு வந்து-போகும் போதெல்லாம் டைலர் பற்றி நலம் விசாரிப்பதும். அவர் ஒரு பார்வையற்ற பெண்ணை திருமணம் முடித்து விட்டார் எனவும் தோழி பானு சொல்ல கேட்டிருக்கிறாள். அமரன் டைலரும் ப்ரியாவும் எங்காவது பார்த்துக்கொண்டால் நலம் விசாரிப்புகளோடு விடை பெற்றிருக்கிறார்கள்….)
>>>>>>
“என்னடி நான் மட்டும் பேசிக்கிட்டே இருக்கிறேன்; நீ பேசாம அப்பிடியே இருக்கிறியே”னு ப்ரியாவின் தோள்களை அசைக்கிறாள் பானு…. மீண்டும் நிகழ்கால நினைவுக்குள் வருகிறாள் பிரியா…..
ப்ரியா, எப்பொழுதோ கேட்ட அதே அமரன் டைலர் துணி-தைக்கும் டைலரிங் மெஷினின் சத்தம் இப்போதும் அவள் காதில் கேட்கிறது; ஆனால் இம்முறை தைப்பது அவளின் இதயத்தை…
*************