நம் உணவில் சுவைக்காக சேர்க்கப்டும் பெருங்காயம் நம் உடலுக்கு எத்தனையோ மருத்துவ நன்மைகளை செய்து வருகிறது. தெரிந்தோ, தெரியாமலோ பெருங்காயம் நம் உணவில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகிவிட்டது.
பெருங்காயம் அப்போதைய பெர்சியா தற்போதைய ஈரானை பிறப்பிடமாக கொண்டது. விரும்பத்தகாத நாற்றத்தை கொண்டிருப்பதால் அமெரிக்கர்கள் பெருங்காயத்தை சாத்தானின் சாணம் என கேலி செய்து வெறுத்தார்கள். ஆனால் அதே அமெரிக்கர்களுக்கு பெருங்காயம் அருமருந்தாக தேவைப்பட்ட காலம் வந்த போது, கடவுளின் அமிர்தம் எனப் பெயரிட்டு தாயத்து போல தங்கள் கழுத்துகளில் தொங்கவிட்டு அலைந்தார்கள். ஆம்… அந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது பெருங்காயம்.
அதன் நன்மைகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.
- உணவு செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெருங்காயம் வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது. அதோடு உடல் சூட்டையும் தணித்து குளிர்விக்கிறது.
- தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள்.
- பெண்களுக்கு இது சிறந்த மருந்து. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் சேர்த்துக்கொள்வது நல்லது.
- குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் சுழற்சி சீராகும்.
- அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. அசைவம் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது.
- குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து லோசியோ என்ற ஒருவகையான திரவம் வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது.
இப்படி பல வகை மருத்துவக் குணம் கொண்ட பெருங்காயம் அதன் மணத்தால் பலராலும் வெறுக்கப்படுகிறது. தோற்றத்தால் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை தான் பெருங்காயயம் நமக்கு சொல்லித்தரும் தலையாய பாடம்.