வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்தது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன.
சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து. இந்த வரலாறு காணாத கனமழை காரணமாக 32 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த இடங்களை கடந்த நவம்பர் 14ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் நிவாரண உதவிகளும் வழங்கினார். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்க ரூ.16 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.