தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் சாத்தான்குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்தார்கள். சிறையில் அவர்களை போலீசார் அடித்துக் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் சிறையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் சித்ரவதை செய்ததாக பாடகி சுசித்ரா ஆங்கிலத்தில் விவரித்து ஒன்றை வீடியோ வெளியிட்டார். பலத்த காயத்தால் அதிகளவு ரத்தம் வெளியேறியதால், இருவருக்கும் மாற்றுத்துணியை அவர்களது குடும்பத்தினரிடமிருந்து போலீசார் பெற்றதாக அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலாகி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சுசித்ரா வெளியிட்ட வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மை இல்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடகி சுசித்ரா அண்மையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பேசிய வீடியோவில் உண்மை இல்லை என தமிழக கிரைம் பிரிவு போலீஸ் தரப்பில் கூறியுள்ளது. அவர் தெரிவித்துள்ள புகார்கள் கற்பனையே, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறிய போலீசார், யாரும் அதை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
சிபி-சிஐடி அதிகாரிகள் கூறிய பிறகு சுசித்ரா சாத்தான்குளம் விவகாரம் பற்றிய வீடியோவை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார். இது குறித்து பேசிய சுசித்ரா, வீடியோவை மறந்துவிடுங்கள். அதன் நோக்கம் நிறைவேறிவிட்டது. இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்று மட்டும் பாருங்கள். அது தான் மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
20 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற பிறகு சுசித்ராவின் வீடியோவை நீக்குமாறு தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர் என்று ஒருவர் ட்வீட் செய்தார். அதற்கு ரீட்வீட் செய்த சுசித்ரா, சிபி-சிஐடி அதிகாரிகள், பொய்யான தகவலை பரப்புவதற்காக கைது செய்வோம் என்று மிரட்டியதால் தான் அந்த வீடியோவை நீக்கியதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கை அனைவரும் கவனிக்கவும், நிறைய மோசடி நடக்கிறது என்றும் சுசித்ரா தெரிவித்துள்ளார்.