விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் உளவுப்பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் துபாயில் இருந்து வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த ஸ்பீக்கர், டி.வி உள்ளே தங்க கட்டிகள், மற்றும் தங்க பேஸ்ட் பதுக்கி வைத்திருந்தனர்.
இது தொடர்பாக சென்னை மண்ணடியை சேர்ந்த ஜாபர், சேலத்தை சேர்ந்த சையது, சென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த முகமது முஸ்தாக், மேற்கு வங்க மாநில கவுராவை சேர்ந்த பரூக் அகமது ஆகிய 4 பேர் கைதாகினர். இவர்களிடம் இருந்து ரூ.1.38 கோடி மதிப்பிலான 3 கிலோ 228 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல துபாயிலிருந்து ஏா்இந்தியா எகஸ்பிரஸ் மீட்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது திருச்சியை சேர்ந்த அலி சிராஜுதீன், பாபு பாட்ஷா, சென்னையை சோ்ந்த முகமது கடாபி ஆகிய 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
அவர்களுடைய உள்ளாடையில் இருந்த 1.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.90.5 லட்சம். இதையடுத்து 3 பேரையும் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர். இதன் மொத்த மதிப்பு ரூ.2.28 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.