கொரோனா பாதிப்பின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகர்களை மீட்பதற்காக 58 விமானங்கள் இயக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரொனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக கடுமையான ஊரடங்கு அமல்பட்டுவந்தது. விமான சேவைகள், ரயில் சேவைகள் போன்ற பொதுப்போக்குவரத்திற்கும் தரட விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு பணி நிமிர்த்தமாக சென்ற மக்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைக்க விமான சேவைகள் இல்லாத நிலையில், உடனடியாக விமானங்களை தமிழகத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும் என திமுக செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், வெளிநாடுகளை சிக்கியுள்ள தமிழகர்களை மீட்க 58 விமானங்கள் இயக்கப்படும் என தெரிவித்தார். இதன்படி ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை சென்னை விமானநிலையத்திற்கு 41 விமானங்கள், மதுரைக்கு 2 ,திருச்சிக்கு 11 மற்றும் கோவைக்கு 4 விமானங்கள் இயக்கப்படும் எனவும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




