தென்கொரியாவில் கார் அமெரிக்க ராணுவ டாங்கியின் மீது மோதிய விபத்தில் அந்த காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தென்கொரியா மற்றும் வடகொரியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக தொடந்து மோதல் நீடித்து வருகிறது.இதில் தென்கொரியாவுக்கு பக்கபலமாக அமெரிக்கா இருந்து வருகிறது.அதன்படி வடகொரியாவின் தாக்குதலை சமாளிப்பதற்காக அமெரிக்க ராணுவம் சுமார் 28 ஆயிரம் வீரர்களை தென்கொரியாவிற்கு அனுப்பியுள்ளது.
இதனிடையே அமெரிக்க மற்றும் தென்கொரிய ராணுவ படைகள் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி கொரிய எல்லை பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த நிலையில் வடமேற்கு பகுதியில் உள்ள கியோங்கி என்னும் இடத்தில் பயிற்சியை முடித்து அமெரிக்க படைகள் முகாமிற்கு திரும்பி கொண்டுஇருந்தது.
அப்பொழுது ரோட்ரிக்ஸ் லைவ் என்னும் இடத்தில் உள்ள மேம்பாலத்தில் அமெரிக்க படைகள் சென்று கொண்டிருந்த போது அதிலுள்ள சிறிய ராணுவ டாங்கி மீது கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.இந்த காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.அந்த ராணுவ டாங்கியில் இருந்த அமெரிக்க வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
தென்கொரிய போலீசார் இந்த விபத்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.