நீண்ட வருடங்களாக திருமணம் ஆகாமல் ஏக்கத்தில் இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடும் புரோக்கர்கள் மற்றும் பெண்கள் குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த கடந்தபட்டியை சேர்ந்தவர் வேலு (எ) ஜனகராஜ் (35). விவசாயம் செய்துவரும் இவர் திருமணம் ஆகாத நிலையில் நீண்ட காலமாக பெண் தேடி வந்துள்ளார். இதற்கிடையில் கோவில்பட்டியை சேர்ந்த பெண் தரகர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரின் உதவியோடு கோவில்பட்டியை சேர்ந்த கெளரி(40) என்ற பெண்ணுடன் திடீர் ஏற்பாட்டின் பேரில் கடந்த 11-ம் தேதி கோவில்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆக வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக தன்னை விட ஐந்து வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து ஜனகராஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் திருமணத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்திட அவரது கல்வி சான்றிதழ், ஆதார் மற்றும் ரேசன் அட்டை நகல்களை பெற்றுள்ளனர். அதில் குடும்ப அட்டையில் கெளரிக்கு ஏற்கனவே திருணம் ஆகி குழந்தைகள் உள்ளது என்ற அதிர்ச்சிகர உண்மை தெரியவந்தது.
இதனையடுத்து உஷாரான ஜனகராஜ் கெளரியின் மற்ற ஆவணங்களை பரிசோதித்ததில் அதிலும் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜனகராஜ் புதுசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் கெளரி, இடைத்தரகர்கள் ராம்குமார், ராஜா உள்ளிட்டோரிடம் புதுசத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த மோசடி திருமணத்திற்கு அப்பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்தாரா எனவும், கமிஷன் பணம் ஒரு லட்சத்திற்காக தரகர்கள் மோசடி திருமணம் செய்து வைத்தாரா எனவும் திருமணம் ஆகாத இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் செயல்படுகின்றதா எனவும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.