உலக சதுப்பு நிலக் காடுகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பூமியை காக்கும் கேடயமாக திகழும் சதுப்பு நிலக்காடுகளின் பெருமையை பறைசாற்றும் விதமாக இந்த நாள் அமைகிறது.

கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல கடலோரப் பகுதிகளில் உப்பு நீரில் வளர்வது சதுப்பு நிலக் காடுகள் (Mangroves) எனும் அலையாத்தி காடுகள்.இவற்றை அழியாமல் பாதுகாத்திட ஜூலை 26ஆம் தேதியை உலக சதுப்புநிலக்காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

பூமிக்குள் ஏராளமான பொக்கிஷங்கள் புதைந்து கிடப்பதைப்போல, அதன் மேற்பரப்பிலேயே காணப்படும் மற்றொரு பொக்கிஷம்தான் காடுகள்… பூமியிலிருந்து வெளியேற்றப்படும் கரியமிலவாயு அனைத்தையும் கிரகித்துக்கொண்டு, உயிரினங்களுக்கு தேவையான ஆக்சிஜனை காடுகள் அள்ளி வழங்குவதால், அவற்றை பூமியின் நுரையீரல் என்றே அழைக்கலாம்.
உலகம் முழுக்க மனிதனின் தொடர் செயல்களால் இவை மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன. சுற்றுலா தளங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் இத்தகைய நிலங்களை அழிக்கின்றன. பல்லுயிரி வளம், நிலத்தடி நீர் வளம், நீரை வடிகட்டி நன்னீர் ஆக்குதல், உணவுச்சங்கிலியின் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இவற்றின் அழிவு மேற்சொன்ன எல்லாவற்றையும் காணாமல் செய்கிறது.

சுனாமி நம் நாட்டை தாக்கியபொழுது சதுப்பு நிலக் காடுகள் அதன் தாக்கத்தை பெருமளவில் குறைத்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதும் இடம் சார் காலநிலை, நுண் காலநிலை என ஒழுங்காக மழை, வெயில் ஆகியன அதனதன் காலங்களில் உண்டாவதையும் உறுதி செய்கிற வேலையையும் இவைதான் செய்து வந்திருக்கின்றன. உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின.
எதிர்வரும் தலைமுறையினர் கண்டுகளிக்கவும், அலயாத்தி காடுகளை பொக்கிஷமாய் பாதுகாப்போம் என, சதுப்பு நிலக்காடுகள் தினமான இந்நாளில் உறுதியேற்போம்.