கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உத்தரப்பிரதேச அமைச்சர் மகேந்திர சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34,819 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2,496 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல் மந்திரி எடியூரப்பா அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்திவந்தார். இதற்கிடையே, முதல் மந்திரி பி.எஸ். எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டரில், தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை, சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து, அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.