கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவியையும், அப்பெண்ணின் தந்தையையும் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனி தொகுதியின் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.-வாக இருக்கும் பிரபுவும், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சவுந்தர்யாவும், அக்டோபர் 1-ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ. பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்துதான் தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டுக் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி, சாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்க மறுத்த காவல்துறை, சாமிநாதனை பொது இடத்தில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ. பிரபுவால் கடத்தப்பட்ட தனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், படிக்கும் பெண்ணிடம் எம்.எல்.ஏ. பிரபு ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சுவாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிடப்பட்டது.
வழக்கை பட்டியலிடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் இன்று வழக்கு விசாரணைக்கு வராததால், சுவாமிநாதன் தரப்பில் மீண்டும் முறையிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்டப் பெண்ணும், அவரது தந்தையும் நேரில் நாளை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.




