திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு திருப்பதி மலையில் நேற்று முன் தினம் கூடியது. கூட்டத்திற்கு பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது,” இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி முதல் 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும். வைகுண்ட வாசல் திறந்திருக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் 50,000 பக்தர்கள் இலவசமாக ஏழுமலையான வழிபடவும், 25,000 பக்தர்கள் 300 ரூபாய் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபடவும் தேவையான எண்ணிக்கையில் டோக்கன்கள் வழங்கப்படும்.
திருப்பதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும் நாட்களில் சாமி கும்பிடுவதற்கு வசதியாக திருப்பதியிலும் 300 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
பல்வேறு ஊர்களில் தேவஸ்தான நிர்வாகம் 1200 கோவில்களை கட்டி வருகிறது. அவற்றின் கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. இன்று முதல் காலை 8 மணிக்கு துவங்கி பகல் 12 மணி வரை 4 மணி நேரம் விஐபி பிரேக் தரிசனம் நடைபெறும்.
இதற்கு முன்னர் அதிகாலை துவங்கி காலை எட்டு மணி வரை பக்தர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டனர். கடந்த 1957 ஆம் ஆண்டு இறுதியில் ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன்முலாம் பூசப்பட்டது.
பொன் மூலாம் பூசி நீண்ட காலம் ஆகிவிட்ட காரணத்தால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலாலயம் செய்து கோவில் விமானத்திற்கு மீண்டும் பொன் முலாம் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தங்கம் பயன்படுத்தப்படும்” என்று அப்போது குறிப்பிட்டார்.