வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அங்கு அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதமடைந்தது.
இதனையடுத்து அந்த பாதை விரைவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
இந்த பணிகள் முடிக்கப்பட்டு (இன்று) மீண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை பயன்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் அலை உள்வரும் தூரம் கணக்கிட்டு சிறப்பு பாதையின் நீளம் சற்று குறைக்கப்படவுள்ளதாகவும், மழைக்காலம் முடிந்த பிறகு பார்வையிடும் தளம் சீரமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.