வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளிய மூன்று பேர் கைது.
ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம் அரியாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒரு வாரத்திற்கு முன்பு தன் வீட்டில் சண்டை போட்டுகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு இருந்துள்ளார். அவர் தனியாக இருப்பதை கவனித்த அதே பகுதியை சேர்ந்த நீலாவதி அவரிடம் சென்று ஆறுதல் அளிப்பதுபோல் ஆசை வார்த்தைகள் கூறி இந்த சிறுமியின் மனதை தன வயப்படுத்து கொண்டார்.
பின்னர் ஆட்டோ டிரைவர் பாண்டி உதவியுடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், அவரை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். இதனை பற்றி அந்த சிறுமியின் வீட்டுக்கு தெரியவரவே அதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் நீலாவதியின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பரமக்குடி மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் நீலாவதி மற்றும் உடந்தையாக இருந்த சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த மஞ்சுளா (எ) பஞ்சவர்ணம், ஆட்டோ டிரைவர் பாண்டி, ஆகிய 3 பேரையும் சிறுமியை கடத்தியது, பாலியலுக்கு உட்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.