நாகர்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்து வந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த 15 வயதான 10-ஆம் வகுப்பு மாணவியை, அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று விட்டதாக, மாணவியின் தந்தை புகார் அளித்திருந்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாணவியையும், அவரை அழைத்துச் சென்ற வாலிபரையும் மீட்டனர்.
மாணவியிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் நடத்திய விசாரணையில், தன்னைக் கடந்த 4 ஆண்டுகளாக முக்கிய பிரமுகர்களுடன் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும், இதற்கு உறவினர்களே உடந்தையாக இருந்ததாகவும் மாணவி தெரிவித்தார்.

மேலும் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரின் பெயரைக் கூறி, தன்னை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கடந்த 2017ம் ஆண்டு தனது தாயார் நாஞ்சில் முருகேசனிடம் அழைத்துச் சென்றபோது, அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் மாணவி கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சிறுமியின் தாய் உள்பட 4 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கட்சியிலிருந்து நீக்கம்:
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன். 2011 முதல் 2016 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் இதே தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கட்சியின் பல மாநில பொறுப்புகளையும் வகுத்து வந்த அவர், ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். சில தினங்களுக்கு முன்னர் இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.